Posts

Karma and Rebirth as per Hinduism (Tamil)

.

சனாதன தர்மத்தில் உள்ள கர்மா மற்றும் மறுபிறவிக் கொள்கை

கர்மா என்றால்  “செயல்” அல்லது “வினை” என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். யாராலும் கர்மா ஏதும் செய்யாமல் இருக்க முடியாது. சரீரம், வாக்கு, மனம் இவை மூன்றாலும் ஒருங்கேயோ, தனித்தனியாகவோ நாம் எப்போதும் கர்மம் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.  நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாவுக்கும் ஒரு கர்ம பலன் உண்டு. 

பொதுவாக நாம் பேச்சு வழக்கில் “அவன் அவன் கர்மாவை அனுபவிக்கிறான்” என்று சொல்கிறோம் என்றாலும் உண்மையில் அதன் பொருள் “அவன் தான் செய்த கர்ம பலனை அனுபவிக்கிறான்” என்பதே ஆகும். ஆக நாம் கர்மா, கர்ம பலன் இரண்டையும் பல சமயங்களில் பொதுவாய்  ‘கர்மா’ என்றே சொல்கிறோம்.

நமது சனாதன தர்மத்தில் இந்த கர்மா கொள்கை மிகவும் விரிவான அளவில் ஆராயப்பட்டு, அதைப் பற்றிய கருத்தாக்கங்கள் ரிஷிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு விரிவாய் உருவான கர்மாக் கொள்கையின் படி,  கர்மா என்பதில் 3 அம்சங்கள் உள்ளன. அவை:  

ஒன்று: பலன் — ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை கண்டிப்பாக உண்டு என்று அறிவியலில் நியூட்டனின் மூன்றாவது விதி கூறுவது போலவே,   நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாவுக்கும் ஒரு கர்ம பலன் உண்டு.  இந்தக் கருத்து எல்லா மதங்களிலும் உண்டு.  “Thou shall reap what thou sow” — “நீங்கள் எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்வீர்கள்” என்று பைபிளும் சொல்கிறது.

இரண்டு: காலம் –– செய்த கர்மாவுக்கும், அதற்கான பலனை அனுபவிப்பதற்கும்  ஒரு கால இடைவெளி உண்டு என்பது.  அது மனிதனின்  ஒரு பிறவியில் மட்டும் செயல்படுவதோடு நில்லாமல், ஜன்ம  ஜன்மாந்திரங்களாகத் கூடத் தொடர்கிறது.   ஒருவன் இறந்தபின்  அப்படிப் பின் தொடரும் நற்பலன்களைப் புண்ணியம் என்றும் தீய பலன்களைப் பாபம் எனவும் சொல்கிறோம். கர்மாவில் இந்தக் காலம் எனும் அம்சம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்து மதம் மிகவும் சுவாரசியமாகவும், விவரமாகவும், அறிவுக்கு ஏற்புடையதாகவும்  காட்டித் தருகிறது.  

 மூன்று: ஈஸ்வர இச்சை — கர்மத்தின் பலன் எப்போது எப்படி எந்த அளவு செயல்படும் என்பது இறைவனின் தீர்மானப் படியே நடக்கிறது என்பது.

இப்போது இவற்றைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

ஆபிரஹாமிய மதங்களின் படி, மனிதப் பிறவி என்பது ஒருமுறை  மட்டுமே நிகழ்கிறது.   செய்த கர்மங்களுக்கான பலனை இந்தப் பிறவியில் அனுபவித்தது போக, மரித்தபின் எஞ்சி இருக்கும் கர்மபலன்களுக்கு,  இறைவன் என்ன தீர்மானிக்கப் போகிறார் என்று அந்த ஜீவன் கல்லறையில்  காத்திருக்க வேண்டிவரும்.  பிற்காலத்தில் ஒரு நாள் வரப்போகும்  ‘நீதி நாள்’ அன்று இறைவன் அந்த ஜீவனின் பாவ புண்ணியங்களைப் பொறுத்து   சொர்கவாசமோ அல்லது  நரக வாசமோ அளிப்பார். அதை  நிரந்தரமாக அனுபவிக்க வேண்டும்  என்பதாக இம் மதங்கள் கூறுகின்றன. 

ஆனால், நமது இந்துமதத்தில் அப்படியல்ல. 

ஒரு தொழிலதிபரின் வியாபாரக் கணக்கு லெட்ஜரில், இந்த வருடத்து லாப நஷ்டங்களும், வாங்கிய கடன்களும், கட்டாமல் விட்ட   வரிகளும்  அடுத்த வருடக் கணக்கில் தொடரும் அல்லவா? அது போலத் தான் சனாதன தர்மத்தில், கர்மாக் கணக்குகள் அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும் என்பது கொள்கை.

பொதுவாகவே எல்லாரும் பரவலாகக் காணும் ஓர் உலக நடப்பு உண்டு. சிலர் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஏனோ துன்பங்களும், சோகங்களும் வந்து கொண்டே இருக்கும்.

அதே சமயம், வேறு சிலர் தம் வாழ்வில்,  செய்யாத தப்புத் தண்டா இல்லை; பிறருக்கு உண்டாக்காத கேடுகள் கொஞ்சமில்லை என்று இருக்கும். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டமோ துன்பமோ ஏதும் இல்லாததாகக் காணப்படும்! 

இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு பலரும் ” இவர்களது வாழ்க்கையைப் பார்த்த பின் எனக்கு தர்மம், நியாயம், தெய்வம் இவற்றின் மீது நம்பிக்கையே போய்விட்டது, இது நல்லவர்களுக்குக் காலமில்லை, சார்” என்பார்கள்.

தற்போது கண்முன்னே  நடப்பதை  மட்டும் வைத்துக் கொண்டு எல்லாரும் தீர்ப்பு சொல்ல முயல்வதால் தான் இப்படிப்பட்ட  தார்மீகக் குழப்பங்கள் வருகின்றன.

அதனால் தான் அம்மா (மாதா அமிர்தானந்த மயி), “கர்மா கொள்கை என்பது ஒரு புரியாத புதிர்.. அதனை விஞ்ஞானத்தைக் கொண்டு  விளக்க முடியாது; நீ நம்பிக்கை உள்ளவனாக இருந்தால் மட்டுமே கர்மா கொள்கையை ஏற்றுக்கொள்வாய்” என்கிறார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “இந்த உலகம் என்பது கடவுளின் மாயை. இந்த மாயையில் பல குழப்பங்கள் உண்டு. ‘இதனால் இது நிகழும்’, ‘இதற்குப் பிறகு இது நிகழும்’ என்று திட்டவட்டமாக ஏதும் சொல்லமுடியாது” என்பார்.  

அப்படியானால் ஒருவர் செய்த நல்ல கர்மாவுக்கு கெட்ட பலன் விளைகிறதா, இது முரணாக இருக்கிறதே என்று கேள்வி கேட்டால் அதற்கு, “நல்லது செய்பவர்களுக்கு  கர்ம நியதிப்படி கண்டிப்பாக நல்ல பலன்தான் உண்டு; ஆனால் அது எப்போது,  எப்படி நிகழும் என்பது நம் சிற்றறிவுக்குப்  பிடிபடாது; அது இறைவனுக்குத் தான் தெரியும்” என்பது தான் சரியான பதில்.

ஒரு உதாரணம் பார்ப்போம். 

ஒரு மாணவன் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கிறான்; நன்றாகத் தேர்வு எழுதுகிறான்; அவன் நூற்றுக்கு 90 மதிப்பெண் வரும் என்று உறுதியாய் இருக்கையில் அவனுக்கு 60 மதிப்பெண்ணே கிட்டியிருக்கிறது. அதனால் அவன் விரும்பிய மேற்படிப்பில் சேர மதிப்பெண் போதாமல் மிகுந்த ஏமாற்றமடைய நேர்கிறது. அது ஏன்? அவன் சரியாகத்தானே தன் முயற்சியையும், செயலையும் செய்தான்? பின் ஏன் கதை மாறிப்போயிற்று? அவன் விடைத்தாளைத் திருத்தியவர் செய்த தவறு அது என்றால் அது ஏன் ஒழுங்காய் கர்மம் செய்த மாணவன் தலையில் ஏன் வந்து விடிய வேண்டும்?

இதற்கு பதில் , அந்தச் சமயத்தில்  அந்த மாணவனுக்கு அவனது செயலின் நேரடி விளைவுக்குத் தொடர்பு இல்லாமல்,  ஏதோ ஒரு தக்க காரணத்துக்காக அவனது பிராரப்தப்படி  இறைவன் கொடுத்துள்ள தண்டனை அது என்பதாகத் தான் சொல்லியாகவேண்டும். இதற்கு வேறு எந்த விளக்கமும் சாத்தியமில்லை.

இதே போல, ஒரு அயோக்கியன் எல்லாத் தப்புத் தண்டாக்களையும் துணிந்து செய்து கொண்டிருந்தாலும் நன்றாய் வாழ்கிறான் என்றால், இறைவன் ஏதோ நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒரு காரணத்துக்காக அவனது முன் ஜன்ம புண்ணியங்களின் பலனை தற்போது கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்று பொருள்.

அவை தீர்ந்ததும் நிலைமை மாறலாம். அவன் இப்போது செய்த அயோக்கியத்தனங்களின் பலன் பிற்காலத்தில் அவன் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அவன் தலையில் வந்து விடியலாம். இல்லை, அவன் மறுபிறவியில் கஷ்டப்படலாம். ஏன் எப்படி என்று இறைவனே அறிவார்.  

சிலருக்கு  தார்மீக வாழ்வில் நம்பிக்கை இருக்கும். ஆனால் இறை நம்பிக்கை இருக்காது. ‘யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது; நல்லதே செய்ய வேண்டும்; வினை செய்தால் எதிர்வினை தானே நடக்கும்; அதிலிருந்து தப்பவே முடியாது; இதில் தேவையில்லாமல் இறைவன் என்ற ஒன்றை ஏன் புகுத்துகிறீர்கள்? ” என்பார்கள். இது ஒரு விதண்டா வாதமே.  

அதாவது,  கர்மா என்பது  ஏதோ ஒரு ‘தானியங்கி’ என்று இவர்கள்  நினைக்கிறார்கள். 

பரம ஞானியான பகவான் ரமண மகரிஷி இக்கருத்தை நிராகரிக்கிறார். அவரது உபதேசங்களின் சாரமான உபதேச உந்தியாரில் 

“கன்மம் பலந்தரல் கர்த்தனது ஆணையால் 
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் ஜடமதாம் உந்தீபற” என்கிறார்.

அதாவது, “கர்மம் ஜடமே.  கர்மம்  தானே தன் போக்கில் செயல் படுவதில்லை. கர்மத்தையே கடவுளாக ஆக்கிவிட முடியுமா என்ன? ; இறைவனின் ஆணைக்கு அடங்கித் தான் கர்மம் செயல்பாட்டுக்கு வருகிறது.” என்கிறார் ரமணர்.

அடுத்து, நாம் அடிக்கடி கேள்விப்படும் சொல்லான  ‘பிராரப்தம்’ அல்லது பிராரப்த கர்மா என்றால் என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்வோம்.

நம் தர்மத்தில் கர்மா என்பது சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்று   மூன்று விதமாக அடையாளம் காட்டப்படுகிறது .

நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ பிறவிகள் எடுத்து கணக்கற்று செய்த கர்மாக்களின் பலன்கள் மூட்டை மூட்டையாய் இருக்கின்றன. அவை ‘சஞ்சித கர்மாக்கள்‘ எனப்படுகின்றன. இவையே நமக்கு அடுத்தடுத்துப் பல  பிறவிகள் வரக் காரணமும் ஆகின்றன. 

ஒரு ஜீவனின் இந்தப்  சஞ்சித கர்ம மூட்டைகளிளிலிருந்து இறைவன் ஒரு சிறு தொகுதி கர்மாக்களைப் பிரித்தெடுத்து,  அவற்றை அனுபவித்துத் தீர்க்க  ஒரு பிறவியைக் கொடுத்து பூமிக்கு அனுப்புகிறார். அதில் நல்ல பலன்களும் கெட்டபலன்களும் கலந்தாங்கட்டியாக இருக்கும்.

அப்படி அந்த ஜீவன் சுமந்து வரும் குறிப்பிட்ட அந்த ஒரு கர்ம பல மூட்டையே  பிராரப்த கர்மா எனப்படுகிறது. 

பிராரப்தமே உடல் எடுத்து வரக் காரணம்; பிராரப்தமே பெரும்பாலும் இந்த ஜன்மத்தில் ஒருவன் செய்யும் கர்மங்களுக்கான பலன்களையும் தருகிறது.  எந்த பழைய கர்ம பலனில் இருந்து, எதை, எந்த சமயத்தில் எடுத்துக் கொடுப்பது என்பதை இறைவனே அறிவார்.

சில சமயங்களில் செய்த ஒரு சிறிய நற்செயலுக்குக் கூட பெரியதாக  நல்லது நடப்பதும், செய்த ஒரு சிறிய தப்புக்குக் கூட பலமான தண்டனை கிடைப்பதும்  இந்தப் பிராரப்தத்தின் சேட்டையால்  தான்!   அது போலவே,  சமயங்களில் நல்லது செய்பவனுக்குக் கெடுதல் விளைவதும், கெடுதல் செய்பவனுக்கு நல்லது நடப்பதும் இந்த பிராரப்தத்தின் விளைவால்தான்.

இதற்கு உதாரணமாக என் தந்தையின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு பென்ஷன் வருவதற்காகச் செய்ய வேண்டிய ‘காகிதப் பணிகள்’ (அதாவது பேப்பர் வொர்க்) செய்து கொடுத்து உதவுவதில் என் தந்தைக்கு அலாதி பிரியம் உண்டு. பற்பல படிவங்களை மிகச் சரியாக நிரப்பி, தேவையான சான்றுகளை இணைத்து என்று சள்ளை மிகுந்த ஒரு வேலை அது. பலருக்கும் அவை பிடிபடாது. ஆனால் என் தந்தையோ அதில் கெட்டிக்காரர். அப்படி அவர்  உதவியதில், எங்கள் ஊரில்  பலருக்கும் பென்ஷன் பணம் ஒழுங்காக வந்தது. இதனால் ஒரு வேளை, தம் சேவையைப்  பற்றி என் தந்தைக்கு சற்று கர்வம் கூட இருந்திடுக்கக் கூடும்.

அவரே பணி ஓய்வு பெற்றதும், தம் காகிதங்களை முறைப்படி தயாரித்து அனுப்பினார். இத்தனை பேருக்கு சரியாகத் தயாரித்துக் கொடுத்த அனுபவம் இருந்ததனால், தம் பென்ஷனும் தடையின்றி உடனே வர ஆரம்பித்துவிடும் என்றே அவர் நம்பினார். ஆனால் வெகு காலம் கடந்தும் அவர் பென்ஷன் என்னவோ வரவே இல்லை!

ஏன் இப்படி என்று விசாரிக்க சென்னையிலுள்ள பென்ஷன் பே அலுவலகத்துக்குப் போனோம். அங்கேஅலைந்து விசாரித்ததில்,  ஒரு கிளார்க் செய்த ஒரு குளறுபடியால் அவரது காகிதங்கள் தேங்கிப் போனது தெரிய வந்தது.  

ஆக அவர் தம் கர்மத்தை மிகத் திருத்தமாகச் செய்தும்,  பிராரப்தப்படி அவருக்கு பென்ஷன் மிகத் தாமதமாகத்தான்  வந்து சேர்ந்தது!

ஒரே மாதிரி தொழில் செய்த இரு நண்பர்களில் ஒருவர் தொழிலில் நொடித்து ஓட்டாண்டியாய் போனதும், மற்றவர் மேன்மேல் வளர்ந்து கோடீஸ்வரரானதும் ஆகிய ஓர் உதாரணத்தை அம்மா சொல்வதுண்டு அல்லவா? ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்டால் முன்னவர் பூர்வ ஜன்மத்தில் லோன் எடுத்து கட்டாது வந்தவர், பின்னவர் டெபாஸிட் செய்துவிட்டுவந்தவர் என்று அம்மா விளக்குவார்.

அப்படியானால்  இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மாக்களின் நேரடி பலன்கள்  என்னவாகும் என்று கேட்டால், அவை ‘ஆகாம்ய கர்மாக்கள்’ –  அதாவது வரப்போகிற கர்மங்கள் எனப்படுகின்றன. அதாவது இந்தப் பிறவியிலேயே  பிற்காலத்திலோ, அல்லது இப்பிறவியையும் தாண்டி அடுத்த பிறவிகளிலோ பலன் தரப்போகிற கர்மங்களே ஆகாமிய கர்மங்கள்.  இந்தப் பிறவியில் ஒருவன் இறக்கும்போது,  அவனது எஞ்சிய ஆகாமிய கர்மாக்கள், சூட்சும வாசனைகளாய்,  அவன் முன்பே சுமக்கும் சஞ்சித கர்மாக்களின் மூட்டைகளோடு ஒன்றாய் சேர்ந்து கலந்துவிடும்.

இந்த மூன்றையும் தெளிவாய் புரிந்துகொள்ள ஒரு பிராசீனமான உதாரணம் உண்டு. ஒரு வேடன் வேட்டையாடுவதற்காக அவன் அம்பராத் தூளியில் நிறைய அம்புகளை சேகரித்து வைத்திருக்கிறான். அந்த அம்புகள் போன்றவைதான் சஞ்சித கர்மங்கள். அந்த அம்புகளிலிருந்து அவன்  சிவற்றை எடுத்து, வில்லில் பூட்டி வேட்டையாடுவதற்காக இலக்கை நோக்கி அடிக்கிறான். அப்படி வில்லில் இருந்து புறப்பட்டு விட்ட அம்புகள் போன்றதே பிராரப்த கர்மங்கள். பிராரப்தம் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது.

பின் வேடன் தனக்கு வேண்டிய புதிய அம்புகளையும் அவ்வப்போது தயாரித்துக் கொள்கிறான். அவை போன்றவை தான்  ஆகாமிய கர்மங்கள். அப்படித் தயாரித்த புதிய அம்புகளை, அவன் தன் அம்பராத் தூளியில் ஏற்கனவே உள்ள பழைய அன்புகளோடு சேர்த்துக் கொண்டு விடுகிறான். அதைப் போலவே, ஆகாமிய கர்மாக்கள், சஞ்சித கர்மாக்களோடு சேர்ந்து விடுகின்றன. அவை வருங்காலப் பிறவிகளுக்கு பிராரப்தங்கள் ஆகும்.

இனி  இந்த கர்ம கோட்பாடுகளைப் பற்றி நியாயமாக எழக்கூடிய சில சந்தேகங்களையும் கேள்விகளையும் பார்ப்போம்.

முதலில், இந்தக் கர்மா விவகாரத்தை இத்தனை குழப்பலாக இறைவன் ஏன் வைத்திருக்கிறான்? இதனால் அவனுக்கு ஆகப்போவது என்ன? மனிதப் பிறவியின் நோக்கம் தான் என்ன?

இந்த உலகம் இறைவனது படைப்பு மட்டுமல்ல, இந்தப் படைப்பிலுள்ள அனைத்திலும் அந்தர்யாமியாய் வசிப்பவனும் இறைவனே என்பது சனாதன மதத்தின் கோட்பாடு. இதையே அம்மா, சிருஷ்டியும் சிருஷ்டாவும் இரண்டல்ல என்று சொல்வார். மாயையாகிய இந்தப் படைப்பும், அதிலுள்ள ஜீவ ஜாலங்களின் இன்ப துன்பங்களும், ஜனன மரணங்களும் இறைவனின் லீலை அன்றி வேறில்லை. அவனே பங்குபெறும் அவனது விளையாட்டைப் பற்றிக் குறை கூற நாம் யார்? 

ஒவ்வொரு ஜீவனும் தன்னுள் ஒளிந்திருப்பது இறைவனே என்பதை உணர்ந்து கண்டுபிடித்து, அந்த சத் வஸ்துவே  தன் மெய்யான “நான்”; என்று உணரும் வரை இந்தக் கர்மாவின் மாயச் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள் மகான்கள். இறைவன் இந்த மனிதப் பிறவியைத் தந்திருப்பதே இந்த உண்ஂமையை உணர்ந்து பிறப்பு இறப்பு அற்ற நித்யானந்த நிலையான மோட்சத்தை அடைவதற்குத்தான்.

இருந்தாலும்  நாம் எல்லாரும், இறைவனின் மாயா விளையாட்டில், அவன் இச்சைப் படியே மயங்கிப்போய் சிக்கியிருக்கிறோம். 

கடவுள் ஏன் இப்படி செய்து ஏமாற்றுகிறார்  என்று கேட்டால்,  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார், “இறைவனுக்குத் தன் மாயா விளையாட்டான படைப்பு தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதில் தான் விருப்பம். கண்ணாமூச்சி விளையாட்டில் எல்லாரும் தாய்ச்சியைத் தொட்டுவிட்டால் பிறகு ஆட்டத்தில் என்ன சுவை இருக்கிறது? தாய்ச்சிக்கு விளையாட்டு தொடர்ந்து நடப்பதில் தான் விருப்பம்!”  என்பார்!

ஒரு புறம் தன் மாயையால் இறைவன் மயக்கினாலும், மறுபுறம், மனிதப் பிறவியின் நோக்கம் மோட்சமே என்பதை,  சிலராவது புரிந்து கொள்ளவேண்டும் என்கிற கருணையும் அவனுக்கு இருக்கிறது. அதனால்,  இறைவன் தானே அவதாரம் எடுத்து வந்தும், மகாத்மாக்களையும், ஞானிகளையும் உருவாக்கியும் இந்தப் படைப்பின் ரகசியத்தைப் பரப்புகிறான். 

ஆனாலும் என்ன?

நம் அகங்காரத்தைத் தான்  நாம் நிஜமென்று நம்புகிறோம். நம் தேக-மனோ-புத்தி-அகங்காரச் சேர்க்கையை  ‘நான்’ என்று கற்பித்துக்கொண்டு  இவற்றையெல்லாம் திருப்தி செடய்து இன்பம் துய்க்கவே  இந்த மனித வாழ்க்கை என்று மயங்கி விடுகிறோம். நம் விருப்பு வெறுப்புகளே நம்மை  இயக்குகின்றன. 

உடல் மரிக்கும்போதும் இந்த விருப்பு வெறுப்புகள் தீருவதில்லை. எரியும் தீயை எண்ணைய் ஊற்றி அணைக்க முயல்வதைப்போல, செய்த கர்மங்களும், கர்ம பலன்களும், ராக துவேஷங்களை மேலும் தூண்டி எரியவிடவே பார்க்கின்றன. விளைவு? விட்ட குறை தொட்ட குறைகளை அனுபவிக்க மீண்டும் மறு பிறவி! 

இதையே பகவான் ரமணர் தம் உபதேச உந்தியாரில்,

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்ந்திடும் உந்தி பற
வீடு தறலிலை உந்தீபற  

என்கிறார். 

அதாவது, “செய்த வினைகளின் பலன்கள் வித்துகளாய் (அதாவது வாசனைகளாய்) மாறி ஜீவனைத் தொடர்ந்து அதனை மீண்டும் சம்சாரக் கடலில் வீழ்த்தும்; வீடு பேற்றைத் தராது”

நமது புராணங்களின் படி, இந்த ஜீவன் மறு பிறவி எடுக்கும் முன்பு இடையில் சொர்க்க வாசமோ, நரகவாசமோ நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் அசாதாரணமான நற்செயல்கள் செய்தவனுக்கு அவற்றின் புண்ணிய பலத்தால் மரணத்துக்குப் பின் இன்பம் அனுபவிக்க  சொர்க்க வாசம் கிடைக்கிறது என்பது நமது நம்பிக்கை. அதே போல மிகக் கொடூரமான தீய செயல்கள் செய்தவனுக்கு நரகத்தில் கொடும் தண்டனை கிடைக்கிறது. அங்கெல்லாம்  ஜீவனுக்கு தூல உடம்பு இல்லை. அனுபவங்களெல்லாம் மனோமயம் மட்டுமே. சொர்க்க நரகங்களில் செயலாற்றலுக்கு வழியில்லை. 

ஆனால் சொர்க்க, நரக வாசங்கள் நிரந்தரம் அல்ல. அப்படி அதீதமாய்ச் செய்த  புண்ணியத்தின் அல்லது பாபத்தின் பலன் அனுபவித்துத் தீர்ந்தபின்,  ஜீவன் தன் சாதாரண புண்ய பாவங்களைத் தொடர்ந்து அனுபவிக்கவும் மீண்டும் செயல்களில் ஈடுபடவும் கர்ம பூமியான இந்த உலகத்தில்  உடலெடுத்துப் பிறந்தாக வேண்டும் என்பதே நம் மதத்தின் நம்பிக்கை. இந்து மதம் காட்டும் மோட்சம் என்பது சொர்க்க வாசம் அல்ல! 

சில மகாத்மாக்கள், சொர்க்கம் நரகமென்றெல்லாம் தனியே இல்லை; இந்தப் பிறவியிலேயே  மனிதன் அதீதமாக இன்பம் அனுபவித்தால் அது தான் சொர்க்கம், அதீதமாகத் துன்பம் அனுபவித்தால் அது தான் நரகம் என்றும் சொல்வதுண்டு.

எப்பேற்பட்ட மகா பாவியானாலும், இறைவனேயே நிந்திப்பவனாய் இருந்தாலும் கூட, அவனும்  தன் கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு, தன்  ஆத்ம நிலையை உணர்ந்து,  மோட்சம் அடைய வேண்டும்  என்பதே இறைவனின் நோக்கமும் பரம காருண்யமும் ஆகும்.  சத் கர்மத்தின் மூலமே தன்னை ஒருவன் மேலான கதிக்கு உயர்த்திக்கொள்ளமுடியும். அதற்கு தெய்வ நம்பிக்கையும் தார்மீக ஒழுக்கமும் மிகவும் சகாயம் செய்யும். 

ஒருவன் இறைவனை மறுத்தான், நிந்தித்தான் என்பதற்காகவே இறைவன் அவனை நரகத்தில் இட்டு தண்டிப்பார் என்று (ஆபிரகமிய மதங்களில் சொல்வது போல) சனாதன மதத்தில் கிடையாது. ஒரு இறை மறுப்பாளன் தான் செய்யும் தீய கர்மாக்களுக்கு (உதாரணமாக இறை நம்பிக்கை உள்ளவர்களை  புண்படுத்துதல், அவமானப் படுத்தி வேதனைப் படுத்துதல், கொடுமைப் படுத்துதல் போன்றவைகள் உட்பட்ட கர்மாக்களுக்கு) உரிய கர்ம பலனை அனுபவித்துத் தீர்ப்பான். அவ்வளவே. அவனும் தன்னைக் கடைத்தேற்றிக்கொள்ள வழியுண்டு.

இனி அடுத்த கேள்வி, மனிதன் தனக்குள்ள சுயேச்சையைக் கொண்டு கர்மாவை மாற்றிவிட முடியாதா? 

மனிதனுக்கு கர்ம சுதந்திரம் உண்டு, ஆனால் போக சுதந்திரம் கிடையாது என்பது தான் இதற்கான பதில். 

அதாவது ஒரு செயலை செய்வதற்கும் செய்யாமல் விடுவதற்கும் ஒருவனுக்கு சுதந்திரம் இருக்கிறது.  ஆனால் ஒரு கர்மாவின் பலனை தன் விருப்பம் போல் அனுபவிக்கவோ அனுபவிக்காது தப்புவதற்கோ அவனுக்கு சுதந்திரம் கிடையாது.

உதாரணமாக நல்லவன் ஒருவனுக்கு, தனக்கும் சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கும் ஒரு சமூகவிரோதியைக் கொல்லவேண்டுமென்று மனதில் வெறி வருகிறது. அப்படிக்  கொலை செய்துவிடவோ, அல்லது தன் கோபத்திக் கட்டுப்படுத்திக் கொண்டு  விலகிப் போய்விடுவதோ ஆகிய கர்ம  சுதந்திரம் அவனுக்கு இருக்கிறது.

ஆனால் கொலை செய்த பிறகு, அதன் விளைவாய் விசாரணை நடை பெறும் போது,  “அந்தக் கெட்டவனுக்கு உண்டான சரியான தண்டனையைத் தர  இறைவன் என்னைத் தன் கருவியாக உபயோகித்துக் கொண்டார்;  அவனைக் கொன்றதன் மூலம் நான் சமுதாயத்துக்கு நன்மையே செய்துள்ளேன். ஆகவே எனக்கு தண்டனை தரக்கூடாது” என வாதிடமுடியாது! 

கர்ம பலனைத் தருபவர் இறைவன் மட்டுமே. மனிதன் தன் சொந்தத் தீர்மானத்தில் கடவுளின் ஏஜெண்டாக தன்னை நியமித்துக்கொள்ள முடியாது!   

தீர்ப்பு வரும் சமயத்தில் அவன் “ஐயா, அப்படி தண்டித்துத் தான் ஆகவேண்டும் என்றால் எனக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையே போதும்” என்று  தேர்ந்தெடுக்க முடியாது! மரண தண்டனை என்று தீர்ப்பு வந்ததும்  “என் மரண தண்டனையை நான் ஒரு 10 வருடம் கழித்து அனுபவித்துக் கொள்கிறேன்” என்று சொல்ல முடியாது!

இங்கே அம்மா கூறும் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. 

மிகவும் புகழ் பெற்ற ஜோசியர் ஒருவர் ஒரு ராஜாவின் அரண்மனைக்கு விஜயம் செய்தார். எல்லாரையும் போலவே ராஜாவுக்கும் தம் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள ஆசை. ராஜாவின் ஜாதகத்தை வாங்கிக் கூர்ந்து பார்த்த ஜோசியரின் முகம் இருண்டது. அவர் நடுங்கும் குரலில், “மகாராஜா, என்னை மன்னிக்க வேண்டும். இன்று மாலை நேரம் முடிவதற்குள் உங்கள் உயிர் பிரிந்துவிடும்; உங்கள் உயிரைப் பறிக்க எம தூதன் இங்கே வந்து விடுவான்” என்றார். 

ராஜாவுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி. மந்திரிகளைக் கூட்டி இந்த கண்டத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்று ஆலோசனை கேட்டார். மூத்த மந்திரி சொன்னார்: “மகாராஜா, உங்களைக் கூட்டிச் செல்ல யமதூதன் வரும்போது நீங்கள் இங்கே இல்லாமல் தப்பிவிடலாமே? மாலை வர இன்னும் 6 மணி நேரம் இருக்கிறது. நீங்கள் விரைந்து பயணிக்கும் ஒரு குதிரையில் ஏறி இங்கிருந்து எத்தனை தொலைவு போக முடியுமோ அத்தனை தொலைவு போய்விட்டால் நீங்கள் தப்பிவிடலாமே?” என்றார். ராஜாவுக்கும் அது சரி என்று பட்டது.

ஒரு உயர் ஜாதிக் குதிரையில் உடனே ஏறிப் புறப்பட்டார். அதிவேகம் பயணித்தார். நாட்டின் எல்லை வந்துவிட்டது. அந்திச் சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருந்தது. ராஜா ஒரு மரத்தடியில் குதிரையை நிறுத்தினார். களைத்திருந்த குதிரைக்கு தண்ணீர்காட்டி, அவரும் மரத்தடியில் ஓய்வு எடுத்தார். ‘தப்பித்துவிட்டோம் என்று ஒரு நிம்மதி வந்தது. சோர்வில் கண் மூடியது..

ஏதோ ஒலி கேட்டு ராஜா திடுக்கிட்டு விழித்தார்! இருள் கவியும் நேரம். மரத்தின் உச்சியிலிருந்து ஒரு கரிய உருவம் குதித்தது. “என்னடா, இரவு தொடங்கும் நேரமாகிவிட்டதே, இன்னும் உம்மை இங்கு காணோமே என்று இத்தனை நேரம் இங்கேயே காத்துக் கொண்டிருந்தேன்; சரி சரி,  கிளம்பும்” என்றான் அந்த யம தூதன்!

           கர்ம சுதந்திரம், போக சுதந்திரம் பற்றி அம்மா கூறும் ஒரு கருத்தை இங்கே கவனிப்பது அவசியம்.

நம் கண் முன்னே சிலர் துன்பங்களால் வாடுவதைக் காணும்போது  நாம், “அவர்கள் இறைவன் இச்சைப்படி தங்களது  பிராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் விடுபட முடியுமா என்ன? அனுபவித்துத் தானே தீர்க்கவேண்டும்?” என்று நாம் ஒதுங்கிப் போவது சரியா?

சரியில்லை என்கிறார் அம்மா. கர்மம் வேறு தர்மம் வேறு. அவன் கஷ்டம்படுவது அவனது கர்மம் என்றால் அவனுக்கு உதவுவது நமது தர்மம் ஆகவேண்டும். அவனுக்கு உதவும் செயலைச் செய்யக்கூடிய  கர்ம சுதந்திரம் நமக்கு இருக்கிறதல்லவா?  ஆகவே,  தார்மீக உணர்வோடு நாம் அவனுக்கு உதவுவதால், நாம் தான்  பலன் பெருகிறோம் என்கிறார் அம்மா. 

 மறு பிறவி உண்டு என்பதே ஒரு ஊகம் தானே அதற்கு என்ன ஆதாரம்? ஆபிரகாமிய மதங்கள் மறுபிறவி பற்றிப் பேசவே இல்லையே? என்பது அடுத்த கேள்வி.

மறுபிறவிக் கோட்பாடு  மிக மிக அறிவுப் பூர்வமான ஒன்று. நமது சகோதர மதங்களான பௌத்தம், சமணத்திலும் கர்மா, மறுபிறவி கொள்கை உண்டு.

இந்தக் கர்மா கொள்கையல்லாது பல உலகியல் அனுபவங்களை ஏன் எப்படி என்று திருப்திகரமாக விளக்க வழியொன்றும் இல்லை என்பது ஓர் நிதரிசனமான உண்மை!

ஒரு உதாரணம் பார்ப்போம்.

ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள். அதில் ஒரு குழந்தை 2/3 வயதிலேயே கர்னாடக இசை ராகங்களை அடையாளம் காண்கிறது; 5 வயதில் பாடுகிறது; 7 வயதில் திறமையாய் புல்லாங்குழல் வாசிக்கிறது. பள்ளிப் படிப்பிலும் படு புத்திசாலியாக இருக்கிறது.

அதே தாயின் மற்றொரு குழந்தை மந்த புத்தியுடன் இருக்கிறது;   சங்கீதம் சுட்டுப்போட்டாலும் வராது.

மற்றொரு குழந்தையோ சதா நோய்வாய்ப் படுகிறது; மற்ற இரு பிள்ளைகளும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வளைய வருகையில், இப்பிள்ளை மட்டும் நோய், துன்பம், எப்போதும் அழுகை என்று வளர்கிறது.

ஒரே தாய் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குள் ஏன் இத்தனை வித்தியாசம் என்று என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

கர்னாடக இசையை பல ஆண்டுகள் ஒரு குருவின் கீழிருந்து படித்து சாதகம் செய்தாலுமே ஒரு சிறந்த பாடகனாய் வருவது எத்தனை சிரமம் என்பது பலரும் அறிந்ததே. அவ்வளவு கஷ்டமான ஒரு நுண் கலையின் ஞானம் ஒரு 5 வயதுக் குழந்தை எப்படி அனாயாசமாக வந்தது? இதற்கு என்ன விளக்கம் அளிப்பீர்கள்?  அந்த  இசை ஞானம்  முற்பிறவிகளிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்கிற கருத்துக்கு வந்து சேர வேண்டியிருக்கிறதல்லவா?

 மூன்றாவது குழந்தை மட்டும் ஏன் சதா நோயில் விழுந்து துன்புற வேண்டும்? இப்படித் துன்பத்தில் அல்லாடுவதற்காக அந்தக் குழந்தைப் பருவத்தில் என்ன கெட்ட செயலைச் செய்திருக்க முடியும்?

ஆக, அது அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு பூர்வ ஜன்ம கர்ம பலன்களே காரணமாயிருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வரவேண்டியிருக்கிறதல்லவா?

ஒரு புதிய பிறவி எடுக்கையில் முந்தைய பிறவியின் ஞாபகங்கள் யாருக்கும் இருப்பதில்லை. சூட்சுமமான முன் பிறவி வாசனைகளை மட்டுமே சுமந்து வருகிறோம். ஆனாலும் வெகு அபூர்வமாக சில குழந்தைகள் தங்கள் பூர்வ ஜென்ம நினைவுகளை தாங்கி வரும் அதிசயங்களும் உலகில் நடக்கின்றன!

“நான் முன்பு இன்ன பெயர் உடையவனாக இருந்தேன்; என் தந்தை தாயாரின் பெயர் இது, இது; ; நான் இன்ன ஊரில் வாழ்ந்து வந்தேன்” என்றெல்லாம் சொல்லும் நிகழ்வுகள் உண்டு.

இவை நம் நாட்டில் மட்டுமல்ல; இந்துமதம் சாராத வெளி நாடுகளிலும் நிகழ்ந்ததுண்டு.

அத்தகைய பல நூற்றுக்கணக்கான நிகழ்வுகளிலிருந்து வடிக்கட்டி 20 நிகழ்வுகளை ஆதாரப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்த ஓர் விஞ்ஞானி உண்டு. அவர் பெயர் இயான் ஸ்டீவன்ஸன். அவர் 1974 இல் எழுதி விர்ஜீனியா பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகமான Twenty Cases Suggestive of Reincarnation (மறுபிறவி பற்றிய 20 நிஜ சம்பவங்கள்) மிகவும் பிரபலமானது.

பொய், புரட்டு, கற்பனை, உள்நோக்கம் ஏதும் இல்லாத நிகழ்வுகளா இவை என்பதை மிக வலிவாக அலசி ஆதாரங்களை உறுதி செய்து வடிக்கட்டிய பின்பே ஸ்டீவன்ஸன் தம் ஆராய்ச்சி முடிவுகளை இப்புத்தகத்தின் மூலம் வெளியிட்டார். “இந்த நிகழ்வுகளுக்கான மிகவும் சிறப்பான விளக்கம், ‘மறுபிறவி உண்டு’ என்பது தான்” எனத் தன் முடிவைச்  சொல்கிறார் அவர்.//

இனி அடுத்த கேள்வி, பிராரப்தத்தால் வரும் கஷ்ட நஷ்டங்களை நாம் சரியான விதத்தில் எதிர்கொள்வது எப்படி? 

பிராரப்த கர்மா மூன்று விதங்களில் செயல்படும் என்று அம்மா சொல்கிறார்:

உடம்புக்கு வரும் சில நோய்கள், சிறிது காலம் உடலைப் படுத்தினாலும் பின்  மருந்து மாத்திரைகளிலேயே குணமாகிவிடும். அது போல சில பிராரப்தங்கள் சிறிது கஷ்டம் தந்து விட்டு நீங்கிவிடும்.

சில நோய்க்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். அதனால்  கூடுதல் துன்பத்துக்குள்ளானாலும், அதை செய்து விட்டால் நோய் குணமாகிவிடும். அவ்வாறே சில பிராரப்த கர்மங்கள், தான தர்மங்கள் சத் கர்மங்கள், ஈசுவர ஆராதனை இவற்றின் மூலம் மட்டுப்பட்டு பின் நீங்கிவிடும்.

 சில தீவிர நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் பயன் இருக்காது. நோய் மீண்டும் மீண்டும் பீடிக்கும். அது போல சில கடினமான பிராரப்தங்களை துன்பம் மிக அனுபவித்தே தீர்க்க வேண்டிவரும். வேறு வழியில்லை என்கிறார் அம்மா.

இந்த ஜன்மத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குப் பெரும்பாலும் பிராரப்தமே காரணம் என்றாலும், இப்போது நாம் செய்யும் சத்காரியங்களின் பலன் பிராரப்தத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்கிறார் அம்மா.

 ஒரு பாத்திரத்தில் உள்ள உப்பு நீரில் தொடர்ந்து நல்ல நீரைக் கலந்துகொண்டே இருந்தால், பாத்திரத்திலுள்ள நீரின் உப்புத் தன்மை குறைந்து கொண்டே வருமல்லவா? அதைப் போல என்பது அம்மா தரும் உதாரணம்.

பிராரப்தத்தை சமாளிக்க மிக அனுகூலமான வழி இறைவனிடம் சரணாகதி செய்யும் பக்தி யோகம் தான். எந்த இறைவனின் இச்சைப் படி பிராரப்த கர்ம பலன்கள் செயலாற்றுகின்றனவோ அவனையே சரணடைந்து அவன் அருளுக்குப் பாத்திரமாவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்வதே சரியான வழி.

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள கர்மாக்கள் செய்துகொண்டே இருக்கும் வரை மனிதன் பிறவிச் சக்கரத்தில் உழன்று கொண்டே இருக்க வேண்டியது தான். பற்று விடாதவரை பிறவியும் விடாது. 

ஆகவே, பலன்களில்  பற்றை விட்டு, கர்மங்களை இறைவனின் ஒரு கருவியாக நாம் செய்தால் கர்மங்கள் நம்மை பந்திக்க மாட்டா. இதுதான் பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளும் கர்ம யோக வழி.

இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட விவேக வைராக்கியத்தின் மூலமே ஒரு  கர்மயோகி, பிராரப்தத்தை  வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.  அது ஞானமார்க்க வழி.

இதற்கான வழியை இரு முக்கியமான திருக்குறள்களில் தெய்வப்புலவர்  திருவள்ளுவர் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டித் தந்திருக்கிறார்:

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் (குறள்  628)

இதன் பொருள் : ‘இன்பம் எங்கே, எங்கே’ என்று ஆலாய்ப் பறந்து அதைத் துய்க்கும் நாட்டத்தில் அலையாது எவன் இருக்கிறானோ அவன் துன்பத்திலேயே தீவிர துன்பத்தில் சிக்கி அல்லல் உறவும் மாட்டான்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (குறள் 629)

இதன் பொருள்: எவன் இன்பத்தை நாடாமல், ‘துன்பம் இயற்கையே’ என்று ஏற்றுக்கொள்கிறானோ அவன் துன்பத்தில் சிக்க மாட்டான்.

இவை எல்லாவற்றிலும் மேலானதும், இவற்றை உள்ளடக்கியதுமான   ஒரு “விரைவுப் பாதை” — “எக்ஸ்பிரஸ் ஹைவே” உண்டு!

அது ஒரு அவதார புருஷரை, இறைவனைக் கண்டுணர்ந்த மகாத்மாவை, ஒரு ஆத்ம ஞானியை, ஒரு மெய்யான சத்குருவை நாடி அவரிடம் சரணாகதி செய்தல்!

அப்பேற்பட்ட ஒரு மகாத்மா, தன் அளப்பெரும் கருணையினால், தமது சரணாகதர்களின் மோசமான பிராரப்தங்களில் இடைபட்டு, அவற்றைக் குறைக்கவோ, மடை மாற்றித் தரவோ சக்தி படைத்தவர். அத்தகைய நிகழ்வுகள் எந்த ஒரு அறிவுப் பூர்வமான விளக்கத்துக்கும் கட்டுப்படாது. மகாத்மாக்கள், தம் அளப்பிலாக் கருணையினால் தம்மையே பூரணமாய் நம்பியிருக்கும் பக்தர்களின் நோய் நொடிகளைக் கூட தாமே ஏற்றுக்கொண்டு, அந்தத் துன்பத்தைத் தான் அனுபவித்து பக்தர்களை ரட்சித்த நிகழ்வுகள் உண்டு. மருத்துவர் கருத்துப் படி பிள்ளைப்பேறு சாத்தியமில்லாதவர்களுக்குக் கூட அந்த பாக்கியத்தை அருள்வது, மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகளைப் பிழைக்க வைப்பது, மிகக் கொடிய விபத்துகளிலிருந்து மயிரிழையில் காப்பாற்றுவது, தீராத நோய்களைத் தீர்த்துவைப்பது, மலை போல் வந்த உலகியல் பிரச்சனைகளைப் பனி போன்று நீக்கித்தருவது என்று பல்வேறு  விதங்களில் மகாத்மாக்கள் தம் அருளைப் பொழிந்து பக்தர்களின் தெய்வ நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள்.

அப்படி பொழியும் அருள் மூலமேயே அந்த பக்தர்களின் உலகியல் பற்றுகளைக் குறைத்து, மனதில் தீவிர விவேக வைராக்கியம் வர வழிவகுப்பார்கள். மனதை விரைவில் உலகியலிலிருந்து ஆன்மீகத்தை நோக்கித் திரும்பச் செய்வார்கள்.

காலம் காலமாக மகாத்மாக்களையும் அவதார புருஷர்களையும் ஞானிகளையும் ஈன்றுள்ள நம் பாரத தேசத்தில் அவர்கள் வருகை தரும்போதெல்லாம் அவர்களை அண்டி அடிபணிந்த /அடிபணிந்து வாழும்  எண்ணற்ற பக்தர்களுக்கு இத்தகைய பிரத்யட்ச அனுபவங்கள் தாராளம் உண்டு.  இறை நம்பிக்கை இல்லாதவர்களும், கோவில் சார்ந்த தெய்வ நம்பிக்கை இருந்தாலும், சத்குருமார்களையும், மகாத்மாக்களையும் நம்பி ஏற்காதவர்களும் மேற்சொன்னவற்றை எளிதில் நம்பவும் மாட்டார்கள், ஏற்கவும் மாட்டார்கள்! ஆனால் அனுபவப் பட்டவர்களுக்குத் தெரியும் அவையெல்லாம் எத்தனை நிதரிசனமான உண்மைகள் என்று.

ஒருவிதத்தில் பார்த்தால் பிராப்தப்படி வரும் இப்படிப்பட்ட துன்பங்கள் கூட இறைவனின் அனுக்கிரகமே என்கிறார் அம்மா. துன்பத்தில் துவளும்போது இதுவரை கடவுளையே நினைக்காதவன் கூட அவரைப் பிரார்த்திக்கிறான், தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள  முயல்கிறான் அல்லவா?

மனிதனாய்ப் பிறந்த ஒருவன் பின் ஜன்மங்களில் மிருகமாய்ப் பிறக்க வாய்ப்புண்டா என்பது அடுத்த கேள்வி.

அபூர்வமாகக் கிடைத்த மனிதப் பிறவியை ஒருவன் சத் கர்மங்கள் செய்வதன் மூலம் மேலான கதிக்குப் போக உயர்த்திக் கொள்ளாது  பந்த பாசங்களில் உழன்று கொண்டும், கீழான, மிருகத்தனமான  செயல்களிலும் ஈடுபட்டால்  மீண்டும் மிருகமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு.

தன் பிள்ளை குட்டிகள், சொத்துபத்துகள் மீது அதீதப் பற்று வைத்து மரிக்கும் ஒருவன் தன் சந்ததியர் வீட்டில் வளர்ப்பு நாயாய் பிறந்து வருவான் என்று அம்மா சொல்வதுண்டே!

மனிதப் பிறவியின் ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ஆனாலும் சற்றே மீதமிருக்கும் கர்மாக்களைத்  தீர்த்துக் கொள்ளவும், ஒரு மகாத்மாவுடன் வாழும் இன்பத்தைத் துய்க்கவும் சிலர் வலிந்து மிருகப் பிறவி ஏற்று வருவதும் உண்டு.

ரமணாசிரமத்தில் வளர்ந்து பல கன்று களை ஈன்று தாராளமாய் பால் தந்த லட்சுமி எனும் பசு, ரமணர்  மீது அதீதப் பிரேமை கொண்டிருந்ததும்  ரமணரின் பிரியத்துக்குப் பெரிதும் பாத்திரமானதும் ரமண சரிதம் படித்தவர்கள் அறிந்த ஓர் கதை. பகவான் ரமணர் அந்தப் பசுவுக்கு அப்பிறவியிலேயே மோட்சம் அருளினார். அந்தப் பசு லட்சுமியின் சமாதி, ரமணாஸ்ரமத்தில் இன்றும் இருக்கிறது.

* * * *

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலறிது’ என்பது மகாத்மாக்களின் கூற்று.  இந்தக் கர்மா மற்றும் மறுபிறவிக் கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் ஒருவன் கிடைத்தற்கரிய் இந்தப் பிறவியை சத் கர்மங்கள் செய்து தன்னை உயர்த்திக்கொள்ளவும், மகாத்மாக்களைச் சரணடைந்து பிறவிப் பிணியைத் தீர்த்துக்கொள்ளவும் முயல்வதே சரி.

அதற்கு,  இறையருளுக்கும் குருவருளுக்கும் பிராப்தர் ஆவோமாக.

Loading

Understanding the Concept of Karma and Rebirth in Hinduism

The concepts of Karma and rebirth are two major pillars of Hindu philosophy. Buddhism and Jainism, the two other religions which have their origins in Hinduism too accept the concepts of Karma and rebirth.

What is Karma?

Karma means work or action. When you perform a work or action, it is bound to produce an effect, a reaction or a result. If you are the doer of karma with a desire, you are to own up the result or the fruit it produces. Whatever actions we did in our previous births, earlier in the present birth, are currently doing, are going to do later in this birth and also in future births are all Karmas. Karmas can be good, neutral or bad. Good karma will get you good effects and bad karma will get you bad consequences. This is the simplistic explanation of the law of Karma, but it is not really as simple as that!

“For every action, there is an equal and opposite reaction” — says the science. “Thou shall reap what thy sow” says the English proverb. These two statements are at the best only incomplete approximations to the law of Karma. Nevertheless, action and reaction constitute the first dimension of Karma.

Karma — inter-woven with time and God’s will

Karma and fruits of Karma are interwoven with a second dimension — Time and a third dimension — Divine will. This is the crux of the law of Karma of Hinduism. This fact is not well grasped by many.

What baffles and troubles many people in life is a commonly perceived reality that nice and honest people of good conduct and character seem to suffer more in life,whereas those not endowed with such qualities mostly seem to lead a happy-go-lucky life!

One can also observe in life that when you have really done a good job and expect a positive outcome, you may get something contrary to it. Also, when you have done some blasphemy and you expect a terrific consequence on account of it, you may perhaps go scot-free. Why is that so?

Karma is unpredictable

People who tend to analyze such occurrences many a time feel extremely bad about the divine law of justice, which seems to be distorted. They tend to feel, considering the happenings in this birth alone, that the proverb “thou shall reap what thy sow” does not seem to work justly.

Perhaps such a stark contradiction is one reason that made saints to analyze Karma and come out with the finding of its continuing effect birth after birth. That is how the second dimension of ‘Time’ comes in to recognition. Any out-of-the-way suffering or enjoyment that you get in this birth, which does not seem to have any seed sown in this birth, must have its origin in some previous births. This is the “Time” dimension of Karma.

At a macroscopic perspective, the entire creation, the living beings, their birth, sustenance and decay are within the overall divine play called Maya. As a divine play, it has all the elements of fun, suspense, unexpected twists and turns of a game, some basic rules and also some breaking and bending of the rules by the Umpire — the God himself!

Sri Ramakrishna (1836-1886) says “One can not know the truth about God through science. Science gives us information only about the things perceived through senses, as for instance, this material mixed with that material gives such and such a result, that material mixed with this material gives such and such result. A man cannot comprehend spiritual things with (this sort of) his ordinary intelligence”.

Avatara Purushas (God descended in human form) and mahatmas (great souls), who transcend all dualities of creation and establish themselves in Brahman (the all pervading God), are the ones who understand the play of Maya; they explain to us about the utter difficulty in bringing the ways of working of Karma to any predictable and comprehensible level.

Sri Ramakrishna Paramahamsa declares “To tell you the truth, this world is God’s Maya. And there are many confusing things in the realm of Maya. One can not comprehend them”. He further says, “One can by no means say that “this” will come after “that” or “this” will produce “that” “.

Thus any presumption that the law of Karma is infallible and rigid is not true. Any rigid suggestion that there shall be a good reward for the good Karma and a bad reward for the bad Karma and that the intensity of reward or punishment shall be directly proportional to the intensity of the Karma, is not entirely true. In other words, Karma is NOT self-propelling — this is what great Hindu saints declare.

Bhagwan Ramana Maharshi (1879-1950), a Jnyani par excellence, in his Upadesa Undhiyar, says “Karma is just jata — non-sentient. The fruits of Karma are decided only by the will of the Creator (God). Can you ever think Karma as God? (You can’t)” This indeed the crucial the third dimension of Karma, namely, “God’s will”.

With all these three dimensions in place, we can comprehend that

  1. For every Karma done, there will be a result/ a fruit/ an effect (Karma phala) which can not be wished away by doer. (When we say “I am suffering from my Karma”, we refer to Karma phala only).
  2. The time at which the result/ the fruit/ the effect will manifest need not be immediate. It has its own humanly incomprehensible time frame cutting across several births.
  3. When the effect will manifest and to what degree or intensity, to what extent of benefit or damage — it lies purely at the will of God.

With this basic understanding, we shall now proceed to understand the classifications of Karma.

Three Types Of Karma

From a theoretical and to a large extent practical and comprehensible standpoint, Hindu scriptures classify Karma in to 3 catagories.

(1) Sanchita Karma (2) Prarabhdha Karma and (3) Agamya Karma.

Sanchita Karma & Prarabhdha Karma

Assuming that we have taken so many births in the past, we should have accumulated quite a huge baggage of Karmas . That huge baggage of karma (i.e. fruits of Karmas) is called the Sanchita Karma. Even in this current birth, whatever effects of karmas you have done since birth till now is also part of your Sanchita Karma.

Out of this huge baggage, by God’s will, some amounts of Karmas are taken out and given to you for enjoyment or suffering in this birth. That portion is called the Prarabhdha. Prarabhdha is indeed the cause of this birth. In a way, we can also say that Karmas remaining in the baggage after taking the Prarabhdha are sanchita Karmas.

In other words, Sanchita Karmas are the potential Prarabhdhas for the future (in this and also future births). They are the prarabhdhas in the waiting list! Sanchita Karmas are like the arrows remaining in the arsenal of the hunter. He may use them at any appropriate time in the future.

Whatever suffering or enjoyment you are experiencing in this birth are due to your Prarabhdha. It is like the arrows that an archer has already shot from his bow; they will have to hit the targets and they can not be withdrawn. Prarabhdhas have nothing to do with whatever Karmas you are currently doing. Prarabhdhas are effects, while your current activities are your current Karmas, not linked to the current enjoyment or suffering you undergo.

This is precisely where people get confused! This is where the questions like “Why is he suffering while he is doing good things only?” are raised.

As already said, for which Karma done on which birth has the Prarabhdha now started taking effect, no one would know, except God. Some saints say that Karma done earlier in this present birth too can become Prarabhdha later in this very birth, since every thing is subject to God’s will. Sri Ramakrishna says that any undisciplined activities done in the youth may start producing their ill effects at older age in the same birth.

Agamya Karma

Doing of Karma based on our wishes, needs, desires and in-born tendencies (called vasanas) is a continuous process. Karmas that you are doing right now and Karmas you are going to do in the future are Agamya Karmas; (Once those Karmas are done, they get added to the bundle of Sanchita Karmas. Agamya Karmas are like the new arrows that the hunter makes which he transfers to his arsenal once the weapons are made.

Thus Hinduism beautifully and almost scientifically classifies the Karmas without ambiguity.

Prarabhdha Karma And God’s Intervention

The general rule is that once the prarabhdha karma starts working, you can not escape from it totally; the recommended way to tackle it is to accept and bear it. Hinduism lays great emphasis on “Saranagathi” — total surrender to God as the best way to tackle the evil effects of prarabhdha. By developing firm faith that it is God who is the dispenser of the effects of Karma, accept everything as His will. If the suffering becomes intolerable, pray to him for succor. Saints declare that the more you try to fight out the evil effects of prarabhdha using your egotism, the more you get deeply entangle into it.

Holy Mother Sarada Devi (1853-1920) declares that God is all merciful and he would not bear a true devotee suffering excessively. If your prarabhdha is such that you have to suffer from a snake bite, she says that by God’s will it may just turn out to be a prick of a nail.

What if the prarabhdha is to cause you an unexpected windfall of enjoyment in life? In reality, it may have more potent traps for you to accumulate new Agamya karmas. Any unusual windfall of luck and gratification has every chance to boost your ego and make you forget God; instead of grasping that what you are enjoying right now may not have anything to do with your present actions or merits, you may be tempted to loosen up your morals and go in for more indulgence. That may sooner or later trigger the arrival of bad prarabhdhas.

Mata Amritanandamayi says that a person starts getting trouble in life particularly in a period when his egotism peaks.

One who remains surrendered to God understands that any out-of-the-way windfall of merry or prosperity was endowed to him by the will of God and he would be ever watchful so as not to get carried away by the lure of transitory pleasures.

Does Repentance Help?

Another question normally comes up in mind is whether honest repentance about an evil act done in the past decreases the bad consequence of the Karma? Can a good act of charity cancel out the evil effect of some other bad karma?

It is generally perceived that that good karmas and bad karmas have their own independent line of existence; It might be like the “credit” and “debit” having their independent entries in a double-entry book keeping system!

However, an honest repentance does seem to have a sobering effect on its specific consequence of punishment for the evil act. But, “canceling out” of a bad karma by an independent good karma doesn’t seem to be a practical proposition, though it may have a definite bearing in “lessening” the burden of the bad karmas. Doing “prayaschitta” (making some amends by doing good act) is generally recommended by saints to lessen the bad impact of prarabhdha.

Can Karma lead to lower births (like animals)?

Hindu scriptures say that human birth is rare to get and it should be rightly utilized to elevate oneself to become a better human being and evolve spiritually. We all have freedom of choice in doing Karmas and the actions we chose should never be leading to our mental and spiritual deterioration.

By indulging in evil activities in this birth, we may accumulate negative karmas that have the potential to lead us to a lower birth like an animal. Definitely it delays and affects our spiritual progress.  Mata Amritanandamayi says that excessive attachment to our wealth, children etc may also add to bad karmas leading to our birth as a dog in order to fullfil our desire to be with our kith and kin and safeguard our possessions, by living with our family members of the previous birth.

Karma And Duty

One thing to be clearly understood in karma is that you are bound by the effects of karma only if you have attachment / personal motive / desire behind doing karma. For example, a policeman shooting at rioters on the orders of his officer carries it out as his duty and hence he shall not acquire the karma of killing or wounding some of the rioters.

You Can’t Claim To Be The Executor Of Karma

Suppose you kill a person who has done a grave harm to you in the past; You can not claim “It is his prarabhdha karma that he had to be killed by me; I won’t accrue any sin because I acted as God’s instrument in executing it. Killing him is also my prarabhdha; I can’t help it”. It could be true that getting killed is his parabhdha, but your killing him is clearly an act of your Agamya Karma; you have had a motive, a vengeance in killing him and you have to face the consequences of it. Ordinary mortals can not usurp the role of God and claim justification by lopsidedly interpreting the law of Karma.

Know The Difference Between Kartha And Bhogtha

When you enjoy or suffer as a consequence of your past karmas, you are a “bhogtha” — the experiencer. When you do a karma, you are a “kartha” — the doer. You do not have the freedom of choice as Bhogtha — you have got to experience your effects of karmas of the past (to what ever degree God proffers to you). But you do, to a fair degree, have the freedom of choice as Kartha — doer. If you have a wick lamp, you can use its light to read Bhagavad Gita and get enlightened or you can use it to burn the Gita. This is the freedom of action available to you.

Regarding free will, Sri Ramakrishna says that as long as one has the idea of good and bad, the acting of free will (to choose between the two) too will be there; for one who has surrendered himself fully to God, there is no question of existence of free will; for him, everything is God’s will.

Swarga (Heaven), Naraga (Hell) and Earth – How do they fit in in Karma?

According to puranas, a jiva, when he does extraordinary good deeds on earth and acquire punya during his life time, enjoys life in heaven till he exhausts the punya. Heaven is the place where everything is joyful, no trace of any pain or unpleasantness. The jiva has no physical body; he has only a sukshma (subtle) body and all the enjoyments are only sensual enjoyments, enjoyed at mental body.  Once punyas are exhausted, the jiva has to necessarily come to birth to take up a human life to clear all the other karmas.

In the same way, the jiva has to undergo extreme suffering in hell for all the atrocious crimes and evils that he commits in human birth.  The Garuda Purana elaborates the various punishments that awaits the jivan for different heinous crimes he commits in earth. Here again, all the sufferings are at the sukshma body, experienced at mind. Here again, once the evil karmas are exhausted through punishment in hell, the jivan has to return to earth to taka a new body.

Ultimately, the earth is the only “Karma bhoomi” where the jivan has scope for totally playing out his good and bad and evolve spiritually by being a kartha as well as bhogta. In heaven or  hell, he is just a bhogta. He is not a kartha.

There are also view points saying that the very earth itself is both Swarga and Naraga because all sorts of enjoyments and sufferings exist here itself.

Karma Yoga – The way to escape the Karma cycle

As long as one has desires, ambitions and motives and engages in action to satiate them, the cycle of karma will never get severed. Man will have to keep taking births over births to enjoy the good effects of good karma and evil effects of bad karma. Hinduism says that human birth is not meant to be wasted for ever in this seemingly never ending cycle. It is simply the divine play of Maya that keeps deluding men into sensual, intellectual and egoistic pleasure-seeking, thereby subjecting them into countless cycles of birth and death. Getting caught in this never ending cycle of birth and death is known as Samsara.

But at some point of time, those who wake up to the hopelessness of this mad running around turn to true spirituality to seek a solution. Hinduism says that it is your attachment to fruits of actions that binds you to karma. If you can perform work with detachment towards the fruits, if you surrender all the fruits of actions to God, then you are not bound by the consequences of the Karma. This is the secret of attaining liberation and this is known as Karma Yoga — a great doctrine elaborated by Sri Krishna in the Holy Scripture Bhagavat Gita.

-=o0o=-

Related reading — Some more Q&A on Karma theory….

 

Loading