Posts

விபீஷண சரணாகதி- Surrender of Vibhishana – Significance

ராமாயணத்தில் ராமனின் சிறப்பான குணங்களாக வருணிக்கப் படும் ஒரு குணம் அவன் ‘சரணாகத வத்சலன்’ என்பது. அதாவது தன்னைச் சரணடைந்தவர்களிடம் மிகுந்த வாத்சல்யம் காட்டுபவன் என்று. அவனைச் சரணடைந்தவர் கைவிடப் படார்.

ராமாயணத்தில் ராமனை சரணடைந்தவர்கள் யார், யார்? அவர்களின், நோக்கமும் பின்புலமும் என்ன என்று பார்த்தால், விபீஷண சரணாகதியின் சிறப்பு புரியும்.

காகாசுரன்

ராமன், சீதை, இலக்குவனுடன் சித்திர கூடத்தில் வாழ்ந்தபோது, இவன் காக வடிவம் எடுத்து வந்து சீதையின் மார்பில் கொத்தினான். சீதை வலியால் துடிக்க, கோபம் கொண்ட ராமன் ஒரு குசப்புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரம் சொல்லி ஏவ, அது காகத்தை நோக்கி வந்தது. காகாசுரன் மூன்று லோகங்களையும் சுற்றிப் பறந்தாலும் அஸ்திரம் அவனை விடாது துரத்திற்று. வேறு வழியின்றி அவன் திரும்பிவந்து ராமனையே சரணடைய, ராமன் அவனை மன்னித்து, அவனைக் கொல்லாமல், அவன் ஒரு கண்ணை மட்டும் பிரம்மாஸ்திரம் தாக்கும் விதத்தில் அருள் செய்து அனுப்பினான். (பிரம்மாஸ்திரம் இலக்கைத் தாக்காது திரும்பாது என்பதால்).

இங்கே, முதலில் அசுரனின் குசும்பு/திமிர், பின் அச்சம், பின் உயிர் பிழைக்க வேறு வழியின்றி சரணாகதி.

சுக்ரீவன்

அண்ணன் வாலியிடம் ஏற்பட்ட பகையால் தப்பித்து ஓடி வந்து தனியே அஞ்சி வாழும் வானரன். ராஜபோகங்களை முன்பு அனுபவித்துப் பராகிரமசாலியாய் வாழ்ந்தவன். தன் காதல் மனைவி ருமையை அண்ணன் வாலி பெண்டாள வைத்துக்கொண்டதில் நொந்து போனவன்.

அவன் ராமனைச் சரணடைந்தது முற்றிலும் காரியார்த்தமானது. அண்ணன் தனக்கு இழைத்த அநீதிக்குப்பழிவாங்கும் உணர்வு, அண்ணனைக் கொன்று தன் மனைவியை மீட்டு கிஷ்க்கிந்தையை ஆளும் ஆசை, அதற்காகப் பராக்கிரமசாலியான ராமனின் உறவு.

ராமனுக்கும் சுக்ரீவனிடம் காரியார்த்தமான தேவை இருந்தது! அது, சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க உதவி. ஆக, சுக்ரீவனின் சரணாகதி, இந்த பரஸ்பரக் காரியார்த்தத்தின் காரணமாக நட்பு ஆனது. சுக்ரீவனின் வானர இயல்பு ராமனுக்குப் புரிந்ததால், பின்னர் அவன் மனம் மாறக்கூடாது என்பதற்காக தீ வளர்த்து அதன் முன்னே இருவரும் தமது நட்புக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

விபீஷணன்

அவனும் தன் சகோதரனனான ராவணனைப் போல அரக்கனே. ஆனால் சத்துவ குணம் மேலோங்கியவன்; தர்மம் அறிந்தவன்.

பொல்லாதவனான தன் அண்ணனின் திமிர், பராக்கிரமம், அதிகார பலம், முன் கோபம், யாரேனும் உபதேசம் தந்தால் கடும் கோபம் கொள்ளும் தீய குணம் எல்லாம் முற்றிலும் அறிந்தவன். ஆயினும் துணிந்து, சீதையை ராவணன் கவர்ந்து வந்தது தவறு, அவளைத் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் ராவணனிடம் மன்றாடியவன். ராமனின் தெய்வீக குணத்தை அறிந்து கொள்ளும் அருள் பெற்ற நற்குணவான்.

தர்மத்தின் பக்கம் நிற்பதா, அல்லது உயிருக்கு அஞ்சி, ரத்த பாசத்துக்கு வணங்கி (கும்பகர்ணன் போல) அண்ணனின் அதர்மத்துக்குத் துணை போவதா எனும் தர்மசங்கடம் வந்தபோது, தன் உறவு, செல்வம், பதவி, உறவுகள், சுற்றம் அனைத்தையும் விட்டுத் தன் அண்ணனின் பரம எதிரியான ராமனை சரணடையத் துணிந்தவன்.

அந்த சரணாகதியின் நோக்கத்தில் தன் உயிருக்குப் பாதுகாப்பு எனும் ஒரு சுயநலம் இருந்தாலும், அதையும் தாண்டி தருமத்தின் பக்கம் நிற்பது என்பதுதான் பிரதானமாக இருந்தது. அதுதான் சத்துவ குணத்தோரின் மகிமை. அவனுக்கு சுக்ரீவனைப் போலத் தன்னை நாடு கடத்திய அண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்கிற முதல் எண்ணமோ, அல்லது அண்ணனை அழித்துவிட்டுத் தான் இலங்கை அரசனாக முடிசூட்டிக்கொள்ளவேண்டும் என்கிற ‘கணக்குப் போடும் புத்தியோ’ இல்லை!

பகைவனின் பாசறையிருந்து வரும் தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டான், அல்லது தாக்கி விரட்டுவான் அல்லது சேர்த்துக்கொண்டாலும் ராமன் சதா தன்னை சந்தேகப்படுவான் என்கிற அச்சமோ, ஐயமோ அவனுக்கு இல்லை! அதுவும் ஒரு தூய சத்துவ குணமே.

மேற்கண்டவை, விபீஷணனின் உயரிய தகுதிகள்.

இனி ராமனின் தெய்வீகத் தன்மையையும் இந்த சரணாகதி நிகழ்வில் பார்ப்போம்.

சரணாகதி தேடி வந்திருக்கும் பகைவனின் சகோதரனை சேர்த்துக்கொள்வதா கூடாதா என்பதை ராமன் தானே தனியாய் உடனே தீர்மானிக்கவில்லை! இலக்குவன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் உட்பட எல்லாரோடும் மந்திர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அவர்களது கருத்துகளைக் கேட்கிறான். அனேகமாக அனுமனைத் தவிர மற்றெல்லாருமே “பகைவனை நம்பக்கூடாது; ஏற்கக் கூடாது” என்றே அறிவுரை சொல்கின்றனர். அரச தர்மத்தின் படி அந்த அறிவுரையும் சரியே.

ஆனால் ராமனோ, அதை ஏற்கவில்லை. தான் விபீஷ்ணனை ஏற்க விரும்புவதாக ராமன் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறி விளக்குகிறான்:

  • என்னிடம் நட்புக்கரம் நீட்டி இன்முகத்தோடு வரும் ஒருவனை நான் மறுக்கமாட்டேன், கைவிடமாட்டேன் — அவனிடம் குறை இருந்தாலும் சரி.
  • அவன் அண்ணனோடு பகைத்துக் கொண்டுவருவதில் குற்றம் காணமுடியாது; அரச குடும்பங்களில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாவதும் உண்டுதான். அவன், தானே அரசனாவதிலும் விருப்பமுள்ளவனாக இருக்கக் கூடும். எல்லாரும் என்னையும் பரதனையும் போல இருக்க முடியுமா என்ன?
  • அவன் என்னிடம் நல்ல எண்ணத்துடன் வந்தால் என்ன, தீய எண்ணத்துடன் வந்தால் என்ன? அவனால் என்னை என்ன செய்துவிடமுடியும்? ஒரு விரலசைவில் என்னால் பகைவர்களை அழித்துவிடமுடியும்.
  • எதிரியே கையேந்தி பிச்சை கேட்டு வந்தாலும் அவனைத் தாக்காது அவன் கேட்டதை அளிக்க வேண்டும் என்பது தர்மம்.
  • “நான் உன்னவன்” என்று எவன் என்னைச் ஒரே ஒரு முறை சரணடைந்தாலும், அவனுக்கு எல்லவற்றிலிருந்தும் அபயம் நான் அளிக்கிறேன். இதுவே என் விரதம். (ராமனின் இந்த வாக்கைத் தாங்கி வரும் ஸ்லோகம் இது: “சக்ரித் ஏவ ப்ரபன்னாய தவ அஸ்மி இதி ச யாசதே, அயம் சர்வ பூதேப்யோ தாமி ஏதத் வ்ரதம் மம“)

கவனிக்க: விபீஷணனுடன் உறவு பூண்டால் எனக்கு என்ன ஆதாயம் என்று ராமன் எண்ணவில்லை. (ஆனால், முன்பே கண்டபடி அந்தத் தேவை சுக்ரீவனிடம் பூண்ட நட்பில் இருந்தது!)

ராமனின் இந்த விளக்கங்களை எல்லாரும் வியந்து ஏற்கின்றனர். விபீஷணன் அழைத்துவரப்படுகிறான். ராவணனின் சரண் புகுகிறான். ராமன் ராவணனின் பலம், திறன், படைகள் பற்றிக் கேட்கிறான்; விபீஷணன் விளக்குகிறான்; ராவணாதியரைக் கொல்ல தன்னாலான எல்லா உதவிகளையும் தர வாக்குறுதி தருகிறான்.

ராமன் உடனே இலக்குவனை கடல் நீரைக் கொண்டுவரச் சொல்லி, விபீஷணை இலங்கைக்கு அரசனாகப் பட்டாபிஷேகம் அங்கே, அப்போதே செய்து வைக்கிறான்!

கவனிக்க: இங்கே நடந்தது சுக்ரீவனிடம் நடந்தது போன்ற ஓர் நட்பு ஒப்பந்தம் அல்ல. இது மெய்யான சரணாகதி! ராமன்தான் தலைவன்; விபீஷணன் தாசன்.

சரணாகதி செய்தவனின் மேன்மை, அதனை அங்கீகத்தவனின் தெய்வீகம் இரண்டுமே பொன்போல் ஒளிரும் ஓர் நிகழ்வு இந்த விபீஷண சரணாகதி!

சரணாகதி அல்லது பிரபத்தி எனும் மார்க்கத்தைப் பிரதானமாக முன் வைக்கும் வைணவத்தில் இந்த விபீஷண சரணாகதி நிகழ்வு, வைணவர்களுக்குப் மாபெரும் நம்பிக்கையைத் தரும் ஓர் முன்னுதாரணமாக விளங்குகிறது.

(ஆதாரம்: வால்மீகி ராமாயணம்)

Loading