Guru, Sadguru and Acharya – difference (Tamil)
குரு, சத்குரு, ஆச்சாரியர் — இம் மூன்று பதங்களுக்குள் உள்ள வித்தியாசம் என்ன?
குரு என்கிற பதத்துக்கு, ‘இருளை நீக்குபவர்’ என்பது நேர்ப்பொருள் — அதாவது அறிவொளியைத் தந்து அறியாமை எனும் இருளைப் போக்கும் ஆசிரியரைக் குறிக்கும்.
ஆச்சாரியர் எனும் சொல்லுக்கு நேர்ப்பொருள், சரியான நடத்தையைச் சொல்லித்தருபவர் என்பது — இதுவும் பெருமளவில் ஆசிரியரையே குறிக்கிறது.
ஆனால், இந்து மதத்தில் குரு, ஆச்சாரியர் எனும் இரு பதங்களும் மிகப் பெரும்பாலும் மத/ ஆன்மீக ரீதியில், தனக்கு வழிகாட்டத் தன்னை அணுகும் சீடனை ஏற்று, அவனுக்கு வழிபாட்டு முறைமைகள், சாத்திர அறிவு இவற்றைக் கற்றுத் தந்தும், (அவசியமானால்) மந்திர தீட்சை நல்கியும், உபதேசங்கள் தந்தும், தாமே முன்னுதாரணமாக வாழ்ந்தும், வழிகாட்டித் தருபவரையே குறிக்கின்றன.
சில சம்பிரதாயங்களில் (உதாரணமாக வைஷ்ணவ சம்பிரதாயம்) அப்படிப்பட்டவரை (குரு என்று சொல்லாமல்) ஆச்சாரியர் என்றே சொல்வது வழக்கம்.
இருந்தாலும், சில நுணுக்கமான வித்தியாசங்கள் இருக்கின்றன:
குரு
சாமானியமான ஓர் குரு அடுத்தவருக்கு ஆன்மீகத்தைப் போதிக்கும் அளவுக்கு இறையருளும் இறைவனின் அதிகார முத்திரையும் பெற்றவராகவோ, பெறாதவராகவோ இருக்கலாம். ஆனாலும் அவர் தமது குரு வழியேயோ, தமது குருவால் வாரிசாக நியமிக்கப்பட்டோ, சுய முயற்சியிலோ, அல்லது தாம் பெற்ற ஒரு சிறிது ஆன்மீக அனுபவத்தின் பேரில் தாமே ஒரு குரு ஸ்தானத்தை ஏற்படுத்திக்கொண்டவராகவோ சீடர்களைச் ஏற்று அவர்களுக்கு உபதேசிப்பவராக இருக்கலாம்.
இத்தகைய குருமார்கள், தாம் செய்த சாதனா முறை, தமது குரு பரம்பரையில் கடைப்பிடிக்கப் பட்ட வழி/ சம்பிரதாயம், தமது குரு தமக்குக் குறிப்பாய் உபதேசித்த சில வழிமுறைகள் இவற்றையே பெரும்பாலும் தம் சீடர்களுக்கும் உபதேசிப்பார்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட இஷ்ட தெய்வத்தை மட்டுமே வலியுறுத்திக் கும்பிடுவது, ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மட்டுமே உபதேசிப்பது, ஒரு குறிப்பிட்ட பிராணாயாம முறையை மட்டுமே வலியுறுத்திச் சொல்லிக்கொடுப்பது, ஒரு குறிப்பிட்ட தியான முறைமையை மட்டுமே வலியுறுத்திப் படிப்பிப்பது, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு சம்பிரதாயம், அல்லது சாத்திரக் கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பழக்குவது — என்பதாக அவர்கள் முறைமை இருக்கும். அவற்றில் குறைபாடுகளும், குறுகிய மனப்பாங்கும் கூட இருக்கலாம்.
இப்படிப்பட்ட சாமானிய குருவிடம் சேரும்போது, அவர் அறிந்த ஞானத்தை அவர் போதிக்கிறார், அதனால் சீடர் பலன் பெருகிறார். கூடவே அவரது அறியாமை, புரிதலில் உள்ள குறைபாடுகளையும் அவர் சீடருக்குப் போதிக்கிறார்! உதாரணமாக — தமது மார்க்கத்தைத் தவிரப் பிற மார்க்கங்களை வன்மையாகக் கண்டிப்பது, விமர்சிப்பது, பிற இறை வடிவங்களை தாழ்வாக நினைப்பது, மற்ற ஆன்மீக சாதனை முறைகளைக் குற்றம் கூறுவது, பிற குருமார்களைக் குற்றம் கண்டு விமர்சிப்பது போன்றவை!
கவனிக்க: எல்லா குருமார்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சில சமயங்களில், ஒரு குரு, முறையான கல்வி அறிவோ, முறையான சாத்திரப் படிப்பு படிக்காதவராகவோ இருந்தாலும் கூட, சுய அனுபவத்தில் இறைவனின் தரிசனம், அல்லது இறையுணர்வு பெற்றவராக இருக்கலாம். அவர் பெற்றது ஓர் நொடிப்பொழுதாய் அமைந்த ஓர் இறைவனின் காட்சியாக, அல்லது ஜோதி தரிசனமாக இருக்கலாம்; அல்லது மிக உயர்ந்த ஞானத்தின் ஓர் அக அனுபவத் துளியாக இருக்கலாம்; அல்லது பரிபூரண இறையநுபவமாகிய/ யோக அனுபவமாகிய சகஜ நிர்விகல்ப சமாதியோ, பக்தியில் பூரணமாய்ப் பழுத்த பிரேம பக்தியாகவோ, ஐயம் திரிபறப் பெற்ற பூரண அத்வைத (இரண்டற்ற) ஞான நிலையாகவோ கூட இருக்கலாம்.
யார் பூரணமான இறையனுபவத்தைப் பெற்று ஐயம்திரிபற நிற்கிறாரோ, அவர் குருஸ்தானத்தை ஏற்றெடுக்கும்போது, அவர் சத்குரு என அறியப் படுகிறார். சத்குருவைப் பற்றிக் கடைசியில் மீண்டும் விரிவாகப் பார்ப்போம்.
ஆச்சாரியர்
மிக உயர்ந்த நிலையில், ஆச்சாரியர் என்பவர் யார் எனப் பார்க்கையில், எவர் தக்க குருமார்கள் மூலம் சாத்திரங்களை ஆழ்ந்து கற்று, அவற்றை மனனம் செய்து, மீண்டும் மீண்டும் அலசி ஆராய்ந்து, ஆன்மீக சாதனை/தவத்தின் மூலமும், பிரார்த்தனை, தியானம் மூலமும் அவற்றின் உட்பொருளைத் தம்முள் தமக்கு எட்டிய அளவில் ஐயமின்றி மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு ஓர் தெளிவான தத்துவக் கொள்கையாக உருவாக்கம் தருகிறாரோ அவர் (மத) ஆச்சாரியர்.
தாம் அறுதியாய் வரையறுத்து அறிந்த அந்தக் கொள்கையை அவர் தம் அணுக்கச் சீடர்களுக்குப் படிப்பித்துத் தருகிறார். தமது ஞானத்தை அவர் பிரச்சார சொற்பொழிவுகள் மூலம் பறை சாற்றுகிறார். பிற (மாற்றுத்) தத்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் சம்பிரதாயப் பண்டிதர்களோடும், விற்பன்னர்களோடும், குருமார்களோடும் பெரும் சபைகளில் அறிவுப் பூர்வமான, மூல சாத்திர (வேத வேதாந்த) நூல்களின் கருத்துகளின் அடிப்படையில் வாதங்களைச் செய்து, தமது கொள்கை, மற்ற கொள்கைகளை விட சிறப்பானது என நிறுவுகிறார். நமது இந்து மதத்தில் அப்படி அறியப்பட்டுள்ள மூன்று மாபெரும் ஆச்சாரியர்கள் சங்கராச்சாரியர் (அத்வைத சித்தாந்தம்), ராமானுஜாச்சாரியர் ( விசிட்டாத்துவைத சித்தாந்தம்), மற்றும் மத்வாச்சாரியர் (துவைத சித்தாந்தம்) ஆவர்.
இத்தகைய மதாசாரியர்களின் வழியில் பிற்காலத்தில் வழி வழியாக குரு-சிஷ்ய பாரம்பரியம் மடங்கள் வழித் தொடர்கிறது. அடுத்தடுத்து அதே சம்பிரதாயத்தில் ஆச்சாரியர்கள் என்றே அழைக்கப்படும் குருமார்கள் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களில் வழியிலேயே வரும் மடத்தில் சில சம்பிரதாய/ விளக்க வித்தியாசங்களின்/ கருத்து வேறுபாடுகளும் வருகின்றன. அதன் அடிப்படையில் உட்பிரிவுகளும் ஏற்பாட்டு உப மடங்களும் புதிய ஆச்சாரியர்களும் வருகிறர்கள். இவ்வகை ஆச்சாரியர்கள் மிகப் பெரும்பாலும் நல்ல கல்வி/கேள்வியறிவுடையவர்களாகவும், தமது சம்பிரதாயத்தில் கூறப்பட்டுள்ள சாத்திரங்கள், சாத்திர வியாக்கியானங்களில் அறிவுப் பூர்வமாய் நல்ல தெளிவும், தீவிர பிடிமானமும் உள்ளவர்களாக இருப்பார்கள். தமது சம்பிரதாயத்தில் சீடர்கள் கடைப்பிடிக்கவேண்டிய இறை வழிபாட்டு முறைகள், தோத்திர முறைகள், சடங்குகள், ஒழுக்க நியதிகள், கட்டுப்பாடுகள் இவற்றை எடுத்து இயம்புபவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படி ஒரு மடத்தில் குரு சிஷ்ய பாரம்பரியத்தில் வரும் ஆச்சாரியர்கள், சுயானுபவத்தில் இறைவனை அறிந்தவர்களாகவோ, உணர்ந்தவர்களாகவோ இருப்பார்கள் என்கிற உத்தரவாதம் ஏதும் இல்லை. (ஒரு சிலர் பெற்றிருக்கக் கூடும்). அந்த சம்பிரதாயத்தில் தீவிர பிடிப்பு, ஆழ்ந்த சாத்திர ஞானம், தீவிர குருபக்தி, குரு சேவை, ஒரு அவையில் நன்கு பேசும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு ஆச்சாரியர் தம் அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுப்பார். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஒரு குடும்பஸ்தராய் இருக்கும் பட்சத்தில், அவர் சன்யாசம் ஏற்று மடாதி பட்டம் ஏற்பார். இது வைணவமடங்களான ஆண்டவன் ஆசிரமம், ஜீயர் மடம் போன்றவற்றில் பின்படுத்தப் படும் முறை.
சில மடங்களில் (உதாரணமாக சங்கர மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்) பிரம்மசாரிகளே ஆசார்ய (/குரு) பதவிக்கு வருவார்கள்.
ஒரு பாரம்பரிய மடத்து ஆச்சாரியர், தமது சம்பிரதாயக் கொள்கைகள், இஷ்ட தெய்வ வழிபாடு, சாத்திரங்கள் இவற்றை மட்டுமே தம் சீடர்களுக்கு உபதேசிப்பார். அவர்களில் ஒரு சிலர், அபூர்வமாக உயர்ந்த தபஸ்விகளாகவும், அப்பழுக்கற்ற சன்யாசிகளாகவும் வாழ்ந்து இறையாநுபவத்தை சுயமாய் உணர்ந்தவர்களாகவும் திகழக் கூடும். அப்படிப்பட்டவர்கள் கூடுதல் மன விசாலத்துடன் மற்ற சம்பிரதாயங்கள், தத்துவங்களை ஏற்கும் தன்மை அடையப்பெற்றவர்களாகவும் இருக்கக் கூடும். இருந்தாலும், அவர்கள் தமது மட சம்பிரதாயங்களை வெளிப்படையாக மாற்றவோ, விசாலமாக்கவோ முனைய மாட்டார்கள். பிற முறைமைகளை வெளிப்படையாக சிலாகிப்பவர்களாகவோ, உயர்ந்த ஆன்மீகதளத்தில் ஒளிரும் அன்னிய சத்குருமார்களை வெளிப்படையாகப் பாராட்டிச் சிறப்பிப்பவர்களாகவோ பெரும்பாலும் இருக்கமாட்டார்கள்.
சில மடங்களில் (உதாரணமாய் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்) எத்தனையோ சன்யாசிகள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலர் ஆச்சாரிய ஸ்தானத்திலும், ஒரு சிலரே குருஸ்தானத்திலும் இருப்பார்கள். ஆச்சாரிய ஸ்தானத்தில் உள்ளவர்கள், நல்ல சாத்திர ஞானம் பெற்று சீடர்களுக்கு சாத்திர வகுப்பு எடுப்பவர்களாகவும், உபன்யாசங்கள், அவையுரைகள் நிகழ்த்துபவர்களாகவும் இருப்பார்கள். குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கே சீடர்களுக்கு மந்திர தீட்சை நல்கும் அதிகாரம் இருக்கும். (ஆச்சாரியர்கள், குருமார்களாகவும் காலப்போக்கில் ஆகலாம்).
சத்குரு
குருமார்களிலேயே மிக உயர்ந்த நிலையில் திகழ்பவர் சத்குரு. அவர் தம் ஆத்ம நிலையை அல்லது இறையானுபவத்தை பூரணமாய் (சுய அனுபவமாய்) உணர்ந்து அதில் நிலை பெற்றவர். அவர் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால், இறைவனிடம் பூரண பிரேம பக்தி பூண்டு, அந்த ஆனந்த அனுபவத்திலேயே சதா திளைத்து, பின் தம் இறைனுடனேயே ஒன்றியவர். அவர் ஞான மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால், தம் சுய நிலை எப்போதும் அழிவற்ற ஆத்மாவே என்பதை அனுபவத்தில் உணர்ந்து ஆத்ம-பரமாத்ம பேதமின்றி ஒன்றேயான அத்வைத உணர்வில் திகழ்பவர். அவர் யோக மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால், சகஜ நிர்விகல்ப சமாதி என்னும் சமாதி நிலையை எட்டியவர். சத்குரு என்பவர் மனதை அழித்தவர்; பரிபூரணமாய் அகங்காரத்தை நிர்மூலம் ஆக்கியவர்; தமது ஜன்மாந்திர வாசனைகளிலிருந்து விடுபட்டவர். ஒரு ஜீவன் முக்தராய் தம் உடம்பில் இருந்துகொண்டு, உலகியர், சீடர்கள், பக்தர்களின் நலனுக்காகவே இவ்வுலகில் வளைய வருபவர்.
ஒரு சத்குரு, கல்வியறிவே இல்லாதவராக இருக்கலாம்; ஆரம்பப் பள்ளிக் கல்வியைத் தாண்டி மேலே படிக்காதவராக இருக்கலம். ஆனாலும் அவருக்கு சகல சாத்திரங்கள் கூறும் சாரமான உண்மைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தம் சுய அனுபவத்தின் பயனாய்த் தெரியும். மெத்தப் படித்த பண்டிதர்களும், ஆச்சாரியர்களும் கூட அவர் அடி பணிந்து, அடக்கத்துடன் அமர்ந்து தாம் ஆண்டுக்கணக்கில் படித்த சாத்திரங்களில் தமக்கு விளங்காத பொருள்களை அவரிடமிருந்து கேட்டுப் பெறுவர்.
சத்குரு என்பவர் சிகரத்தை எட்டிப் பிடித்தவர். அங்கிருந்து அவர் பார்க்கையில், அந்த் உச்சியை அடைய உள்ள எல்லாப் பாதைகளுமே அவர் கண்ணுக்குத் தெளிவாய்ப் புலப்படுகிறது. அவர் ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்தின் வழியில் சாதனை செய்து மெய் நிலையை அடைந்திருந்தாலும் கூட அவர் அந்த சம்பிரதாயத்துக்குள் கட்டுப்பட்டவரல்ல. அவர் சத்தியப் பொருளை அடைய உள்ள எல்லா சரியான மார்க்கங்களையும், குருமார்களையும், மகாத்மாக்களையும், சாதனா முறைகளையும், சாத்திரங்களையும் ஏற்கிறார். தமது அளவிலாக் கருணையின் காரணமாக, எவர் எந்த சம்பிரதாயத்தை/ உட்பிரிவைச் சேர்ந்தவராயினும், அதன் வழியிலேயே அவர் மேலான கதியை அடையப் பெரும்பலும் ஊக்குவித்து ஆதரவும் அருளும் நல்குகிறார். அவர் தம்மை ஓர் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் பெரும்பாலும் அடைத்துக்கொள்வதில்லை.
ஒரு மெய்யான சத்குரு, எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். மதங்களுக்கும் அப்பாற்பட்டவர். அவரது உயர் நிலையை அறிந்துகொள்ளும் பேறு பெற்றவர்கள், மத வித்தியாசங்களை மறந்து அவரைச் சரணடைகிறார்கள். அவர் எல்லாத் தரப்பு, எல்லா மதத்து மக்களையும் காந்தம் போல ஈர்க்கிறார். மனித இனத்தின் மீது அவரது அன்பு தடையின்றிப் பொங்கிப் பிரவகிக்கிறது.
ஒரு சத்குரு, முன்பேயுள்ள ஓர் மடம்/ ஆசாரியப் பரம்பரையில் வருவார் என்று சொல்வதற்கில்லை. மிகப் பெரும்பாலும் ஓர் சத்குரு சுயம்புவாக (தாமே உருவானவராக) திடுமென மனித குலத்தில் தலையெடுக்கிறார். எங்கோ ஓர் தொலை தூரக் கிராமத்தில், ஆன்மீகம் என்றால் என்னவென்றே அறியாத சாமானிய ஏழைக் குடும்பத்தில் கூட ஓர் சத்குரு வந்து பிறக்கக் கூடும்.
ஒரு சத்குரு, அவதார புருஷராகவும் இருக்கக் கூடும்; ஒரு அவதார புருஷர், சத்குருவாகவும் செயல்படக் கூடும். அப்படி இறைவனின் இச்சையால் மனித வடிவெடுத்துவரும் ஓர் அவதார புருஷர், உலகிற்குப் போதிக்க வருகிறார்; ஓர் புதிய பாதையைக் காட்டித் தருகிறார்; குளம், குட்டையில் தேங்கி நாறிப்போகும் பழைய நீரில் புது வெள்ளம் வந்து கலப்பது போல, ஒரு மதத்திலோ, சம்பிரதாயத்திலோ உயிரோட்டம் போய்த் தேக்க நிலை வரும்போது அவர் வந்து புதிய உத்வேகம் அளிக்கிறார். சம்சாரக் கடலில் மூழ்கிவிடாது மக்களை ஏற்றி அக்கரை சேர்க்கும் ஓர் பெரும் கப்பல் போல் அவர் வருகிறார்.
ஒரு சத்குருவோ அவதார புருஷரோ வரும்போது, அவர்கள் அடிப்படை நோக்கு மக்களை ஆன்மீக ரீதியில் முன்னேற்றிக் கொண்டுபோவதே என்றாலும், அவர்கள் உலகியல் தளத்திலும் செயலாற்றி மக்களின் உலகியல் தேவைகளை நிறைவேற்றுவதிலும், சமுதாய ரீதியில் மானுட சேவையையை சிரமேற்கொண்டு செய்வதிலும் கூடத் தயக்கமின்றி இறங்குகிறார்கள். மக்களின் தேவைக்கென, கல்வித் துறை, மருத்துவத்துறை, இயற்கை இடர்கள் வருகையில் நிவாரணப் பணிகள் என்று பல்வேறு செயல் திட்டங்களிலும் மாமெரும் சக்தியோடு செயல்படுகிறார்கள். தனி நபர் வாழ்வில் கூடக் கொடும் நோய், கடும் வறுமை, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதல், பிள்ளைப் பேறு இன்மை போன்ற பிரச்சனைகளுக்கு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் தீர்வு தந்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியையும் ஆன்மீக விழிப்புணர்வையும் தருகிறார்கள்.
ஒரு சத்குரு வருகையில், அவரது வழிகாட்டுதலில் ஓர் புதிய குரு சிஷ்ய பரம்பரை உருவாகலாம். அந்தப் பாரம்பரியத்தில் வரும் பிற்கால குருமார்கள், அந்த சத்குரு காட்டித் தந்தபாதையை பிற்கால சந்ததியினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி தருகிறார்கள். அப்படி ஓர் ஒரு குரு-சிஷ்ய பாரம்பரியம் சில நூற்றாண்டுகள் கூடத் தொடர்ந்து செயல்படலாம். அந்தப் பாரம்பரியத்திலேயே பிற்காலத்தில் மற்றொரு சத்குரு தோன்றலாம்; தோன்றாமலும் போகலாம். அவ்வாறே, காலம் செல்லச் செல்ல அந்தப் பாரம்பரியமே தகுதியற்ற குருமார்கள் வருகையினால் வீரியம் இழந்து தாழ்ந்தும், நசித்தும் போகலாம்.
அப்படியொரு சந்தர்ப்பத்தில், இறையிச்சையால் மற்றொரு இடத்தில், மற்றோரு சூழலில் ஓர் புதிய சத்குரு தோன்றுகிறார். அந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் அவர் ஓர் புதிய வழி, புதிய வாழ்வியலைக் காட்டி, சனாதன தர்மத்தைப் புதுப்பிக்கிறார்.
இந்தப் பாரத தேசத்தில் அனாதி காலமாய் நடந்துகொண்டிருக்கும் ஓர் நிகழ்வு இது. இந்தப் புனித மண்ணின் மேன்மையையும், சனாதன தர்மத்தின் தனிப்பெரும் தன்மையும் அதுவே.
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!