Some interesting happenings in the life of Bhagwan Ramana (Tamil)

பகவான் ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகள்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

  • திருச்சுழியில் பிறந்த ரமணர் சிறு பிள்ளையாய் இருந்தபோது வீட்டில் செய்த ஒரு குறும்பினால், தந்தை அடிப்பார் என்று பயந்து கொண்டு திருச்சுழி சிவன் கோயிலில் அம்பாளின் சன்னதிக்குள் சென்று (துணைமாலை அம்மை) அம்பாளின் விக்கிரஹத்துக்குப் பின்னே ஒளிந்து கொண்டாராம்!
  • ரமணர் தம் நான்காம் வயது வரை தம் தாயிடம் தாய்ப்பால் குடித்தாராம்! அது மட்டுமல்ல; அவர் கிராமத்தில் தாய்ப்பால் கிட்டாது தவித்த வேறொரு பெண் சிசுவுக்கும், ரமணரின் தாய் (ரமணருக்குப் பால் கொடுக்கும் காலத்திலேயே) தாம் பாலூட்டிக் காப்பாற்றினாராம்.
  • ரமணருக்குப் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை; கடனே என்று படித்தவர்தான்! வகுப்பில் பாடம் நடக்கையில் தூங்கி விழாது இருக்க, சுவரில் இருந்த ஒரு ஆணியில் நூலைக் கட்டி அதன் மறு முனையைத் தம் குடுமியோடு சேர்த்துக் கட்டிக் கொண்டதுண்டாம்!
  • பள்ளி நாட்களில் ரமணர் கபடி, குஸ்தி போன்ற விளையாட்டுகளில் சூரராயிருந்தார்.
  • இரவில் தூங்கினால் அடித்துப் போட்டாற்போல் வெளி நினைவே வராது தூங்குவாராம். இவரிடம் விளையாட்டில் தோற்ற பிள்ளைகள் இவர் இரவில் தூங்கும்போது தூக்கிக் கொண்டு போய், ஆசை தீர அவருக்கு அடிகள் கொடுத்து பழிவாங்கிவிட்டு பின் மீண்டும் படுக்கையில் கொண்டு போய்ப் போட்டதுண்டாம்! அவருக்கோ நடந்தவை ஒன்றுமே தெரியாது. நண்பர்கள் சொல்லித்தான் பிறகு தெரியுமாம்.
  • (ரமணர் தம் பதினாறரையாவது வயதில் மரண அனுபவத்தை சுயமாக வருவிக்கப் பார்த்தது, அதன் விளைவாய் ஞானம் பெற்றது, பின் வீட்டைவிட்டு ஓடி திருவண்ணாமலைக்கு வந்தது இவையெல்லாம் பலரும் அறிந்ததே).
  • ரமணர் திருவண்ணாமலைக்கு வர சரியான ரயில் மாறிப் பயணிக்க உதவியவர் ஒரு முஸ்லீம்.
  • ரமணருக்கு திருவண்ணாமலைக்கு வந்து சேர கடைசி ரயில் பயணத்துக்கு கையில் காசு இல்லாததால் தாம் அணிந்திருந்த காதுக் கடுக்கனை அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்டு, வந்து சேர்ந்ததும் பாக்கி இருந்த காசை வீசி எறிந்து விட்டார்.
  • அருணையில் கோவணதாரி ஆகி, பூணூலை அவிழ்த்தெரிந்துவிட்டு, தலை முடியை மழித்துக் கொண்டதும் ஆகாயம் மழை பெய்து அவரைக் குளிப்பாட்டியது!
  • அருணை வந்த புதிதில் அவர் கோவில் மண்டபத்தில் ஆங்காங்கே அமர்ந்து வெளி உலக நினைவற்று தியானத்தில் மூழ்கியிருந்த போது உள்ளூர் சிறார்கள் அவரைப் பயித்தியம் என்று நினைத்து அவர் மீது சிறுநீர் கழித்ததுண்டு.
  • உணவு உண்ணவும் வெளி நினைவு வராது இருந்த அவருக்கு கோயில் குருக்கள் ஒருவர், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வெளியே ஓடி வரும் தண்ணீர் கலந்த பாலை ஒரு சொம்பில் பிடித்து வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றிக் குடிக்க வைத்த காலங்கள் உண்டு.
  • (ரமணர் கோவிலில் உள்ள பாதாள லிங்க குகையில் பல நாட்கள் யாரும் அறியாது தவம் இருந்ததும் அவரது தொடைகள் பூச்சிகளால் கடித்து அரிக்கப் பட்டதும், சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவர் அங்கே இருப்பது தெரிந்து வெளியே தூக்கி வரப்பட்டதும் பலரும் அறிந்த செய்திகள்).
  • வெளி நினைவற்று, உண்ணல் குளியல் மறந்து அவர் வாழ்ந்த அந்த ஆரம்ப நாட்களில் கட்டியிருந்த ஒற்றைக் கோவணம் தொடையிருக்குகளில் புண் உண்டாக்கியதால் அவர் அதையும் அவிழ்த்தெரிந்துவிட்டுத் திகம்பரராய் இருக்க, கோவில் குருக்கள் ஒருவர் வலுக்கட்டாயமாய் அவருக்கு ஒரு புது கோவணம் அணிவித்தார். அதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
  • ஒரு பக்கம் அறியாச் சிறார்கள் அவரை சீண்டி உடல் ரீதியாகத் துன்புறுத்த, மறு புறமோ ஆன்மீக தாகம் கொண்ட சில அன்பர்களும் அவரது மேலான ஞான நிலையை உணர்ந்து அவர் தேவைகளை ஓரளவேனும் கவனித்துப் பார்த்துக்கொள்ள முன்வந்தனர். அவர் ஏதும் பேசாதவராய் இருந்ததால் ஊர் பேர் அறியவில்லை. அவர் தோற்றத்தை வைத்து அவரை ‘பிராமண சுவாமி’ என்றார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் ஒரு அன்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி “வெங்கடராமன், திருச்சுழி” என்று எழுதிக் காண்பித்தபின் தான் அவர் பெயரும் ஊரும் பிறர் அறியவந்தது.
  • ரமணரை விட பல வயது மூத்த ஒரு துறவியான பழனிசுவாமி இளம் ரமணரைக் கண்டதும் அவரது அதிமேலான ஆன்ம நிலையைப் புரிந்து கொண்டு அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார். தாம் பிட்சை உணவு பெற்று ரமணருக்கு உணவளித்தார்.
    அடுத்த 21 ஆண்டுகள் அவர் ரமணரின் சீடராகவும் தொண்டராகவும் சேவை செய்தார்.
  • ரமணர் அருணை வந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் சித்தப்பா நெல்லையப்ப ஐயர் எப்படியோ தகவல் கிடைத்து அருணைக்கு ரமணரைத் தேடி வந்தார். நீள் முடி, தாடி, அழுக்கு படிந்த உடல், கோவணம் என்று இருந்த ரமணரை அவரால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை!
  • பேசா மௌனியாக இருந்த ரமணரைப் பேசவைக்க பழனிசுவாமி, நூலகத்திலிருந்து கொண்டுவந்த ஆன்மீக நூல்களை இரைந்து படித்து ரமணரிடம் விளக்கம் கேட்பார். அந்த வேதாந்தக் கருத்துகளை ரமணர் அப்போதுதான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறார்! “அட! இதில் சொல்லியுள்ளதெல்லாம் நம் அனுபவத்தோடு ஒத்துப்போகிறதே!” என்று வியந்தாராம் அவர்!
  • தப்பும் தவறுமாய்ப் படித்த பழனிசுவாமியைத் திருத்தும் முகமாகவும், தத்துவங்களை விளக்கும் முகமாகவும் சிறிது சிறிதாக ரமணர் பேச ஆரம்பித்தார்!
  • பிறருக்கு சிரமம் தரலாகாது என்று ரமணரே தாமே நேரில் பிட்சை உணவு பெற சென்றதுண்டு. முதன் முதலில் பிட்சை கேட்கையில் அவருக்குக் கூச்சமாய் இருந்ததாம்!
  • ஒரு வீட்டின் முன் நின்று கை தட்டி ஒலி உண்டாக்குவார். உணவுக்காக வெறும் கைகளை நீட்டுவார், அதில் சோறோ, கஞ்சியோ, கூழோ எது விழுந்தாலும் அப்படியே தெருவில் நின்று கொண்டு தின்றுவிட்டுக் கையைத் தலையில் துடைத்துக்கொண்டு நடையைக் கட்டுவாராம்!
  • பிற்காலத்தில் ரமணாசிரமத்தில் பக்தர்கள் “பிட்சை” ஏற்பாடு செய்வார்கள். வடை பாயசத்துடன் ஆசிரமத்தில் எல்லாருக்கும் சாப்பாடு போடுவது தான் அந்த ‘பிட்சை’! அதைக் கிண்டல் செய்து, குறை கூறி ரமணர், தாம் அந்தக் காலத்தில் பிட்சை எடுத்து உண்டதைப் பற்றி சொல்லி, “என்ன ஒரு ஆனந்தம் அது!” என்பாராம்.
  • முதலில் கோவில் மண்டபம், பின் குருமூர்த்தம், பின் மலை மீது விருபாட்ச குகையில 17 வருட வாசம், பின் இன்னும் சற்று மேலே கந்தசாமி எனும் பக்தர் உருவாக்கிய ஸ்கந்தாசிரமத்தில் 6 வருடம், பின் கடைசியாக அடிவாரத்தில் உருவான ரமணாசிரமத்தில் மீதி வாழ் நாட்கள் என்று மாறி மாறி அமைந்தது ரமணர் வாழ்க்கை.
  • அருணைக்கு வந்த பின் அதை விட்டு ரமணர் எங்குமே சென்றதில்லை! 54 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தது அருணையில் தான்.
  • ரமணரின் சாரமான உபதேசங்கள் (“நானார்?”) முதன் முதலில் சிலேட்டில் ரமணர் எழுதி எழுத்து வடிவில் பெற்றவர் சிவபிரகாசம் பிள்ளை. அப்போது ரமணரின் வயது 23. அது புத்தக வடிவில் வெளிவந்தது அடுத்த 21 வருடங்களுக்குப் பிறகுதான்!
  • ‘திருச்சுழி வெங்கடராமனுக்கு’ “பகவான் ரமண மகர்ஷி” எனப் பெயர் சூட்டியவர், ரமணரது சீடரும், தேவி உபாசகரும், சம்ஸ்க்ரிதப் புலவரும், ரமணரைவிட வயதில் மூத்தவருமான காவ்யாகண்ட கணபதி சாஸ்திரி.
  • தம் சீடரான கணபதி சாஸ்திரியை “நாயனா” (தெலுங்கில் அப்பா) என்றே விளிப்பார் ரமணர்!
  • “தன்னை அறிந்த ஞானி அனைத்தையும் அறிந்தவனாகிறான்” எனும் உண்மைக்கேற்ப, பள்ளிப்படிப்பையே ஆர்வமில்லாமல் படித்து, பள்ளி இறுதியையே தாண்டாத ரமணர் பிற்காலத்தில் பெரும் தமிழ்ப்புலவராயும், பன் மொழிப்புலவராயும் ஆனது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
  • ஞானமும் பக்தியும் கலந்த தீந்தமிழ்ப் பாக்களை யாப்பிலக்கணத்திற்குட்பட்டு வெண்பா, ஆசிரியப்பா போன்ற வடிவங்களில் ஏராளம் பாடல்கள் புனைந்தவர் ரமணர்!
  • தமிழில் அவர் எழுதிய பாடல் தொகுப்புகள்: அட்சர மணமாலை, அருணாசல அஷ்டகம், அருணாசலப் பதிகம், அருணாசல நவமணி மாலை, உபதேச உந்தியார், உள்ளது நாற்பது, உள்ளது நாற்பதுஅனுபந்தம், தட்சிணா மூர்த்தித் தோத்திரம், அத்தாமலகம், பகவத் கீதா சாரம், ஆன்ம வித்தை, அப்பளப்பாட்டு.
  • காவ்யாகண்ட கணபதி சாஸ்திரி, கபாலி சாஸ்திரி போன்றவர்களின் தொடர்பின் மூலம் ரமணர் சம்ஸ்கிருதம் கற்றார். அதில் ஸ்லோகங்கள் எழுதினார். தமது உபதேச சாரம் போன்ற பல நூல்களை ரமணரே சம்ஸ்கிருதத்திலும் எழுதினார்.
  • தெலுங்கு பக்தர்களின் தொடர்பால் ரமணர் தெலுங்கும் கற்று அதிலும் தம் பாக்களை எழுதினார். தமிழின் ‘வெண்பா’ வடிவை அவர் தெலுங்கிலும் புகுத்தி ஓர் இலக்கியப் புதுமை செய்தார்!
  • மலையாள பக்தர்களின் தொடர்பால் ரமணர் மலையாளமும் கற்றார். அதில் கவிகள் புனைந்தார். தம் தமிழ் நூல்கள் பலவற்றை மலையாளத்திலும் புனைந்தார்!
  • ரமணரின் சீடரான முருகனார் ஒரு மாபெரும் தமிழ்ப்புலவர். அவரும் ஆயிரக் கணக்கில் பாடல்கள் எழுதியவர் (ரமண சன்னிதி முறை இன்ன பிற). அவ்வாறே கணபதி சாஸ்திரியும் ரமணரது பல உபதேசங்களை ‘ரமண கீதை’ எனும் பெயரில் வடமொழியில் தந்தார்.
  • காவ்யாகண்ட கணபதி சாஸ்திரி ஒரே நாள் இரவில் அம்பாளின் மீது “உமா சகஸ்ரம்” எனும் 1000 சம்ஸ்கிருத பாக்களை உருவாக்கி எழுத முனைந்த போது, ரமணரின் அருள் கடாட்சம் அவர் மீது விழுந்து அவருக்குள் உள்ளொளி தந்து பாக்களை உருவாக்கித் தந்தது ஓர் சரித்திர நிகழ்வு.
  • ரமணரது தாயார் அழகம்மா, தம் இறுதிக் காலத்தில் 6 ஆண்டுகள் உலக வாழ்வைத் துறந்து ரமணருடனேயே விருபாட்ச குகையிலும், பின் ஸ்கந்தாசிரமத்திலும் தங்கினார்.
  • ‘ரமணருக்குப் பிடிக்கும்’ என்று அன்னை அழகம்மா ஒரு முறை மலையில் அப்பளம் தயாரிக்க முனைய, ரமணர் தாயைக் கண்டித்து தத்துவார்த்தமாக அப்பளம் தயாரிப்பதைப் பற்றி எழுதிய ஓர் ஞானப் பாடல் தான் “அப்பளப் பாட்டு”!
  • (தாயாரது மரணத் தருவாயில் ரமணர் அவருக்கு மோட்சம் நல்கியது பலரும் அறிந்தவை. தாயின் பூத உடல் மலையடிவாரத்தில் சமாதி செய்யப்பட்டு, அங்கு எழுப்பப்பட்டதுதான் மாத்ருபூதேஸ்வரர் கோயில்; அங்குதான் ரமணாசிரமமும் உருவானது).
  • ரமணர் எளிமைக்கும் சிக்கனத்துக்கும் பெயர் போனவர். எதையும் வீணாக்குவது அவருக்குப் பிடிக்காது.
  • பக்தர்கள் வரத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் ரமணர் தமது அத்யாவசியத் தேவைகளைப் பற்றிக்கூட எவரிடமும் சொன்னதில்லை. அவர் கோவணம் கிழிந்தது என்றால், தம் கோவணத்திலிருந்தே ஒரு நூலை உருவி, காட்டு முள்ளை ஒடித்து ஊசி போல் செய்து அதில் நூலைக் கோர்த்துக் கிழிசலைத் தைத்துக் கொள்வார். அவர் குளிக்க உபயோகிக்கும் துண்டு “ஆயிரம் கண்ணுள்ளதாக” ஓட்டை விழுந்து இருக்கும். அதனை யார் கண்ணிலும் படாமல் துவைத்து மறைவில் காய வைத்துக்கொள்வார். உலர்ந்ததும் ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்துக் கொள்வார்.
  • ஒரு முறை ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் அவரது துண்டை எடுத்துக் வைத்துக்கொண்டு, கிண்டலாக, “இது கவர்னருக்கு வேணுமாம்!” என்று எடுத்துக் கொண்டு ஓடப்பார்த்தானாம். ரமணர் “ஊகூம்; நான் தரமாட்டேன்!” என்று அவனிடம் பிடிவாதம் பிடித்தாராம்!
  • மேற்சொன்ன விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் மிக்க விசனத்துடன், “எங்களுக்கு இதெல்லாம் தெரியாமல் போய்விட்டதே பகவான்” என்று வருந்தி புதுத் துணி வாங்கி வந்து மிகவும் வற்புறுத்தி ரமணரிடம் கொடுத்தாராம்.
  • பக்தர்கள் கொடுக்கும் எந்த ஒரு ஆடம்பரப் பொருளையும் அவர் உபயோகித்ததில்லை. ரமணாசிரமத்திற்கு பக்தர்கள் ரமணருக்காகக் கொண்டுவரும் பழங்கள், தின்பண்டங்கள், போஷாக்கு லேகியங்கள் என்று எல்லாமே உடனுக்குடன் கூடியுள்ள பக்தர்களுக்கும் வினியோகிக்கப் பட்டுவிடும்.
  • ரமணர் சமையற்கலையில் நிபுணர். அம்மியில் அரைப்பது, கல்லுரலில் மாவு அரைப்பது முதல் சமையற்கட்டில் எல்லா வேலைகளையும் செய்வார். எதையும் வீணாக்காமல் சுவையாகச் சமைப்பார். கத்திரிக்காய் காம்புகளைக் கூட அவர் வேகவைத்து சமைத்ததுண்டு!
  • ஆனாலும் ரமணருக்கு சுவையான உணவெதிலும் ஈடுபாடு கிடையாது. ரமணாசிரமத்தில் பரிமாறப்பட்டும் எல்லா உணவு வகைகளையும் அவர் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொண்டுதான் சாப்பிடுவாராம். ஒரு பருக்கை கூட வீணாக்காமல் உண்பார். உண்ட இலை துடைத்துவிட்டது போல சுத்தமாக இருக்கும்.
  • மலையில் கிடைக்கும் பல்வேறு கீரை வகைகள், மூலிகைகள் பற்றிய மருத்துவ அறிவு அவருக்கு உண்டு.
  • ரமணர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். பக்தர்களுக்கு புராணக் கதைகள் சொல்லும் போது தத்ரூபமாக உணர்ச்சியுடன் நடித்துக் காட்டுவாராம்!
  • பரம ஞானியான அவருள் ஒரு உணர்ச்சிமிகு பக்தனும் உண்டு. கண்ணப்பர் போன்ற நாயன்மார்களின் கதைகளை அவர் கூறும்போது குரல் தழுதழுக்குமாம்; கண்ணீர் பொழியுமாம்!
  • அவர் அண்ணாமலை கிரிவலம் வருவதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பலன்களை மிகவும் சிலாகித்துச் சொல்லுவார். கணக்கற்ற முறை அவர் தம் பக்தர் குழாத்துடன் கிரிவலம் செய்திருக்கிறார்.
  • ரமணரின் “அட்சரமண மாலை” ஞானம் செறிந்த ஓர் பக்தி இலக்கியம். அதை அவர் நாயகி பாவத்தில் எழுதியிருக்கிறார். அவர் ஒரு முறை கிரிவலம் செய்கையில் அப்பாடல்கள் அவருள் முகிழ்த்தனவாம். அப்பாக்களை அவர் புனைகையில் பக்திப் பரவசத்தில் கண்ணீர் பெருகியதாம்!
  • உடலில் வலுவிருந்த நடுத்தர வயது வரை ரமணர் மலையெங்கும் மூலை முடுக்குகளெல்லாம் சுற்றித் திரிவாராம். மலையில் தம் கால் படாத இடமே கிடையாது என்று அவர் சொல்வதுண்டு.
  • அருணாசல மலைக்குள் ஒரு குகை உண்டு என்றும் அதில் பல அற்புதங்கள் உண்டு என்றும் அவர் சொன்னதுண்டு.
  • மலை மீது ரகசியமாய் ஓர் ஆல மரம் உண்டு என்றும், அதன் கீழ் அருண யோகி வடிவில் சிவபெருமான் தவத்தில் இருக்கிறார் என்றும் தல புராணக் கதைகள் உண்டு. ஒரு முறை மலையில் எங்கோ சுற்றுகையில் ரமணருக்கு அந்த ஆல மரம் தொலைவில் கண்ணில் பட்டதாம். அதன் அசாதாரணமான பெரிய இலை ஒன்றையும் அவர் கண்டாராம். ஆனால் அருகில் செல்ல முடியாமல் அவரை குளவிகள் தொடையில் கொட்டி, அவருக்கு மறதியை வர வழைத்து திசை திருப்பி அனுப்பிவிட்டனவாம்.
  • ரமணாசிரமத்தின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டவர் சுவாமி நிரஞ்சனானந்தர். அவர் ரமணரின் சொந்த தம்பி. குடும்ப வாழ்வில் இறங்கி, ஒரு குழந்தை பெற்று, மனைவியை இழந்து பின் துறவரம் மேற்கொண்டவர் அவர்.
  • ரமணாசிரமத்தில் எந்த ஒரு தேவை ஏற்பட்டாலும் அதை யாரேனும் ஒரு பக்தர் கொண்டுவந்து தரும் சம்பவங்கள் ஏராளம் உண்டு. கனவின் மூலம் தாம் அதைக் கண்டு தேவையானதைக் கொண்டு வந்ததாக பக்தர்கள் சொல்வார்கள்.
  • ரமண பக்தர்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்ததுண்டு. ரமணர் அவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்க மாட்டார்! அப்படி நிகழ்ந்தது Divine Automatic action என்று சொல்லி பேச்சை மாற்றிவிடுவாராம்.
  • கணபதி சாஸ்திரி ஒருமுறை சென்னை திருவொற்றியூரில் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் இருந்தபோது அவர் ரமணரைப் பிரார்த்திக்க, ரமணரின் திவ்ய தரிசனம் அங்கே அவர் கண்ட நிகழ்வு உண்டு.
  • மனிதர்கள் மட்டுமின்றி குரங்குகள், நாய்கள், மயில்கள், பசுக்கள், காக்கை, குருவிகள், அணில்கள் என்றெல்லாம் அவரது அண்மைக்காகப் போட்டி போட்டன; அவர் அன்பைப் பெற்றன.
  • ரமணரது ஆசனத்திலேயே கூடுகட்ட விரும்பும் அணில்கள் இருந்தன. அவர் திருமேனியில் ஓடி விளையாடின. அவர் கரங்களிலிருந்து முந்திரிப்பருப்பைப் பெற போட்டி போட்டன. அவரது அன்புக்குப் பாத்திரமான ஒரு நொண்டிக் குரங்கு குட்டி, பிற்காலத்தில் வளர்ந்து குரகுக் கூட்டத்துக்கு ராஜா ஆகியது!
  • (ரமணாசிரமப் பசு லக்ஷ்மியின் கதை, பக்தர்கள் பரவலாக அறிந்த ஒன்று. அந்த பசு லக்ஷ்மிக்கு ரமணர் முக்தி அருளினார்).
  • (ரமணரின் இறுதிக் காலத்தில் அவருக்கு சர்கோமா எனும் புற்று நோய் தாக்கியதும் அதனை நீக்க பல அறுவை சிகிச்சைகள் செய்தும் பலனின்றிப் போனதும் பலரும் அறிந்ததே).
  • ஆயுர்வேதம், யுனானி, சித்தா என்று பல மருத்துவ நிபுணர்களும் அவருக்கு சிகிச்சை செய்து பார்த்தனர். அதனால் அவர் நோய் கூடிற்றே தவிரக் குறையவில்லை.
  • அவர் “ஏதொன்றும் செய்ய வேண்டாம்” என்று சொன்னாலும் பக்தர்கள் கேட்கவில்லை. எனவே அவர் யார் என்ன வைத்தியம் சொன்னாலும் செய்தாலும் அவர்கள் திருப்திக்காக ஏற்றுக்கொண்டு எல்லா வேதனைகளையும் மௌனமாக சகித்துக் கொண்டார். ஒரு முறை அவர் மயக்க மருந்து ஏதும் ஏற்க மறுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டதும் உண்டு.
Bhagwan Ramana – he underwent operation in his left arm several times to curtail a cancerous growth.
  • உயிர் பிரியும் கடைசி தருணம் வரை அவர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதில் கண்டிப்பாக இருந்தார்.
  • அவர் உயிர் பிரிந்த அதே கணத்தில் வானில் ஒரு பெரும் எரி நட்சத்திரம் ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு திருவண்ணாமலையின் பின்புறம் மறைந்ததைக் கண்டவர்கள் ஏராளம் உண்டு.
  • அவர் உடலை உகுக்கப் போவதைத் தாங்க மனமில்லாமல் அழுத பக்தர்களிடம் “நான் எங்கே போவேன்? இங்குதான் இருப்பேன்” என்று சொன்னார். அவ்வாறே அவர் உடலை உகுத்த பின்னரும் ரமணாசிரமத்தில் அவர் சான்னித்தியம் குறைவர விளங்கிக்கொண்டே தான் இருக்கிறது என்பது ரமண பக்தர்களின் அனுபவம்.

இன்னும் சொல்லாமல் விட்ட சம்பவங்கள் பலவும் உண்டு.

மகாத்மாக்களின் வாழ்க்கை லீலைகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதே ஓர் ஆனந்தமான தியான அனுபவம் போலத்தான்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
-=0()0=-

Loading

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *