The Role of Sri Ramakrishna in the revival of Sanatana Dharma (Tamil)

பாரத சனாதன தர்மம் புத்துயிர் பெற்றதில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெரும் பங்கு

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு மகாத்மா மாத்திரமல்ல, அவர் ஒரு அவதார புருஷரும் கூட. தனது நெருங்கிய பக்தர்களுக்கு, தாம் ஒரு அவதாரம் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்து மதத்தில், அவரைப் பெரிதும் போற்றுவதற்கான பல காரணிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்கே சுருக்கமாகக் காண்போம்:

  • அவர் வாழ்ந்த காலத்தில் (1836–1886) நம்மை ஆண்டு கொண்டிருந்த இருந்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் காரணமாய் மேற்கத்திய / கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்திருந்த நமது சனாதன தர்மத்துக்குப் புத்துயிர் தந்த மகான்களில் அவர் முக்கியமான ஒருவராக இருந்தார்.
  • இந்து மதத்தில் உள்ள பன்முகப்பட்ட மார்க்கங்களும் — அதாவது பக்தி மார்க்கம் (அதில் பல கடவுள் வடிவங்களை வணங்குவது உட்பட), ஞான மார்க்கம் (ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தில் முடிவுறும் அத்வைத தத்துவம்), யோக மார்க்கம் (பதஞ்சலி முனிவர் காட்டும் அஷ்டாங்க யோகம்), குண்டலினி யோகம் (தாந்திர மார்க்கம்) — என்று எல்லாமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு முறைமைகளே, அவையெல்லாமே உண்மையானவையே என்று உலகத்துக்கு நிரூபிக்கும் ஓர் முன்னுதாரண புருஷராக அவர் வாழ்ந்து காட்டினார். தீவிர நம்பிக்கையோடும் சிரத்தையொடும் ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து முழுமனதுடன் சாதனை செய்தால் அவ்வவ் வழிகளின் மூலம் பூரணத்துவத்தை அடையமுடியும் என்பதை அவர் பறைசாற்றினார்.
  • அவர் வாழ்ந்த காலகட்டத்தில், தாந்திர மார்க்கம் என்பது மிகவும் இரகசியமாக இருந்த ஓர் ஆன்மீகப் பாதையாக இருந்தது. பலரும் தவறான நோக்கங்களுக்காகத் அந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஓர் நிலைமை வங்காளத்தில் காணப்பட்டது. தன்னுள்ளேயே சிவ-சக்தி ஐக்கியத்தை அனுபவித்து அடைவதற்கான வழிமுறை என்கிற போர்வையில், நெருக்கமான ஆண்-பெண் உறவோடு தொடர்புடைய சடங்குகளைச் செய்யவும் ,மீன், மது, மாமிசம் இவற்றைக் கூடுதல் சுகிக்கவும் தந்திரம் வழி கோலியது.ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த பாதையிலும் துணிந்து இறங்கினார். வயதில் மூத்த பெண் குருவான பைரவி பிராமணயின் நேரடி வழிகாட்டுதலின்படி தாந்திரீகத்தின் கடுமையான நடைமுறைகளைப் பயின்று சாதனைகள் செய்து மிக உயர்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.
  • இந்த சுய அனுபவத்தின் அடிப்படையில் அவர், ‘(பலராலும் கண்டிக்கப்பட்ட) தந்திரம் கூட கடவுளை அடைவதற்கான ஒரு பாதைதான்’ என்று அறிவித்தாலும், அதை தனது சீடர்களுக்கு ஒரு சாதனா மார்க்கமாகப் பரிந்துரைக்கவில்லை. பெரும்பாலான மக்களுக்கு அந்த பாதையில் சென்று உயர்நிலையை அடைவதைவிட விட வீழ்ச்சியடையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரித்தார்.
  • அவரது அடிப்படை மனப்பாங்கிலும், ஆன்மீக ருசியிலும் அவர் ஒரு தேவி/ காளி உபாசகராகவே இருந்தார். அவரது ஆன்மீக சாதனா காலங்களின் தொடக்கத்தில் தட்சிணேஸ்வர் பவதாரிணி காளி கோவிலில் பூசாரியாகப் பொறுப்பேற்று) தீவிரமான தபஸ் செய்து, பவதாரிணியின் தரிசனம் பெற்றார். தேவி அவருள் ஐக்கியமானாள். அது முடிந்த பின் அவர் வங்காள வைணவ மார்க்கத்தைக் கடைப்பிடித்து ராதா-கிருஷ்ண பக்தியில் தோய்ந்தார். ஸ்ரீ ராமர், தேவி சீதா, கிருஷ்ணர், ராதா, அனுமன் போன்ற பல தெய்வங்களின் தரிசனங்களைப் பெற்றார். இந்த கடவுள் வடிவங்கள் அனைத்தும் நிச்சயமாக தமக்குள்ளேயே இருப்பதை அவர் உணர்ந்தார்.
  • தோதாபுரி எனும் அத்வைத ஞானியின் சீடராக ஆகி, நாம ரூபங்களைக் கடந்த இறைவனைத் தியானிக்கும் முறைமை பயின்று, நான்-நீ எனும் இரட்டையைக் கடந்து சச்சிதானப் பிரம்மத்தில் ஒன்றாகிவிடும் நிர்விகல்ப சமாதி அனுபத்தைப் பெற்றார்.
  • இந்து மதத்தின் பல்வேறு பாதைகள் மூலமும் இறை அனுபவத்தை ருசித்த அவர், இஸ்லாம் (ஸூஃபி) மற்றும் கிறிஸ்தவ மத மார்க்கங்களிலும் சாதனைகள் செய்தார். அந்த பாதைகளும் கடவுளை அடைவதற்கு வழிவகுக்கும் என்பதை அவர் அனுபவபூர்ணமாக உணர்ந்தார்.
  • இத்தகைய பல்வேறு வகைப்பட்ட சாதனா முறைகளின் மூலம் அறுதி உண்மையை உணர்ந்த அவர் “எத்தனை மதங்களோ, அத்தனை வழிகள்” என்று அறிவித்தார்.அவர் விஷ்ணுவின் பக்தர்களிடையே ஒரு வைணவராக இருந்தார்; தேவியின் பக்தர்களுக்கு மத்தியில் ஒரு சாக்தராக இருந்தார்; அவர் இயேசுவின் வழிபாட்டாளர்கள் மத்தியில் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அத்வைதிகளுக்கு மத்தியில் அவர் ஒரு ஞானியாக இருந்தார். யோகிகளின் பார்வையில் அவரும் ஒரு யோகி.வெவ்வேறு மாறுபட்ட மத நம்பிக்கை, இஷ்ட தெய்வ நம்பிக்கை, பல்வேறு பட்ட ஆன்மீக ருசிகள் இவற்றைச் சுமந்து கொண்டு ஆன்மீக வழிகாட்டலை நாடி அவரைச் சந்திக்கும் பேறு பெற்ற ஒவ்வொருவரும், ‘அவர் தங்களுடையவர்’ என்று நினைக்கும் விதத்தில் அவரவர் பக்குவம், மனப்பாங்குக்கு ஏற்ப, அவர்வர் நம்பிக்கையைக் குலைக்காமல் எளிமையான ஆன்மீக உபதேசங்கள் தந்து அவர் வழிகாட்டினார்..
  • “பெரும்பான்மை மக்களுக்கு ஏற்றது பக்தி மார்க்கமே’ என்றே அவர் உபதேசித்தார். அவரவர் தம் இஷ்ட தெய்வத்தை முழுமனதுடன் பக்தி செய்வதன் மூலமே பூரணத்துவம் அடையமுடியும் என்று அவர முன்மொழிந்தார்.
  • தீவிர ஆன்மீக நாட்டத்தோடு கடவுளை அடைய முனையும் சாதகர்களுக்கு ‘காமினி மற்றும் காஞ்சனப் பற்றுதான் (அதாவது பெண்ணாசையும், பணத்தாசையும் தான்) இரு பெரும் தடைகள் என்றார் அவர். இவ்விரண்டையும் கைவிடாமல், ஆன்மீக ரீதியில் வெற்றி பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று அவர் உறுதியாக, ஒளிவு மறைவின்றி, அலுக்காமல் உபதேசித்தார்.
  • அவர் திண்ணைப்ப் பள்ளிக்கூடத்தில் அடிப்படையாய் எழுதப் படிக்கக் கற்றதைத் தவிர வேறு ஒன்றும் படித்ததில்லை. பரம எளிமையான, கள்ளம் கபடமில்லாத ஓர் பிராமணர் அவர். அவர் பேசியதெல்லாம் சாமானிய கிராமத்து மக்கள் பேசும் எளிய வங்காள மொழி மட்டுமே. அவர் தம் கையால் பணம் காசை நிஜமாகவே தொடமுடியாத ஓர் நிலையில் இருந்தார். நாளைக்கு என்று எதையும் சேர்த்துவைக்கும் மனோ நிலை இல்லாதவராகவும் இருந்தார்.
  • தமது 24 ஆவது வயதில் ஐந்து வயது சாரதையை அவர் மணந்தார். சாரதை வயதுக்கு வந்து, தம் பதினெட்டாவது வயதில் கணவரோடு சேர்ந்து வாழ (ராமகிருஷ்ணர் தங்கி வாழ்ந்த) தட்சிணேசுவரக் கோவில் வளாகத்துக்கு வந்து சேர்ந்தார். அவளிடம் அவர், “இந்தக் கோவிலில் உறையும் பவதாரிணி காளியும், இங்கே ‘நகபத்’தில் (வாத்திய மண்டபத்தில்) வாழும் என் தாயும், நீயும் ஒன்றே” என்று சொல்லி, அவளும் நகபத்தில் தங்கி வாழ ஏற்பாடு செய்தார். காம உணர்வும் உறவும் ஏதுமின்றி ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து ஓர் உயரிய ஆன்மீக வாழ்க்கை வாழ முடியும் என்கிற ஓர் அற்புதமான முன்னுதாரணத்தை உலகுக்குத் தரும் விதத்தில் அவர்களது வாழ்க்கை அமைந்தது.
  • 12 ஆண்டுகாலம் பல்வேறு ஆன்மீக மார்க்கங்களின் வழி சாதனைகள் செய்து இறையானுபவத்தை எல்லா மார்க்கங்களின் வழியேயும் அடைந்த ராமகிருஷ்ணர் உலகிற்கு உபதேசிக்கத் தயார் ஆனார். ஆனால் சீடர்கள் எங்கே? அவர் தமக்கான சீடர்களை அனுப்பி வைக்குமாறு அன்னை காளியிடம் அழுது பிரார்த்தித்தார். அப்போது ஒவ்வொருவராய் அவரது இளம் சீடர்கள் – உலகியற் கல்வி படித்து, அதே சமயம் ஆன்மீக சம்ஸ்காரங்களோடு இறைவனைத் தேடும் இளைஞர்கள் அவரை நாடி வர ஆரம்பித்தார்கள். அவ்வாறே இல்லற பக்தர்களும். பலரும் அவரை நாடி வந்தாலும் அவரது “உள் வட்டத்து’ பக்தர்களும் சீடர்களுமாய், அவரை அவதார புருஷராக உணர்ந்து அடிபணிந்தவர்கள் சுமார் 33 பேர்கள் தாம்.
  • அவர் எப்போதும் கடவுளைப் பற்றியும், இறையானந்தத்தைப் பற்றியும், பக்தி, ஞானம், யோகம், ஆன்மீக சாதனைகள் இவை பற்றியுமே தம்மை நாடி வந்தவர்களிடம் வாய் ஓயாமல் பேசினார். அவர் பேசியதெல்லாம் பரம எளிமையான மொழிகள். அன்றாட வாழ்க்கை உதாரணங்கள் மூலமும், குட்டிக் கதைகள் மூலமும் அவர் ஆன்மீகத்தை உபதேசித்தார். பகவத் கீதை, உபநிடதங்கள் எல்லாம் படித்தும் தத்துவம் புரியாத பண்டிதர்களும் கூட, சம்ஸ்கிருதம் ஏதும் அறியாத பாமரரான அவரது அடி பணிந்து அவர் தரும் எளிய அனுபவ விளக்கங்கள் மூலம் ஞான ஒளி பெற்றனர்.
  • ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் அவர் வாழ் நாள்கழிந்த பிறகே வெளியுலகம் பரவலாக அறியும் வகையில் தான் அவரது அவதார நாடகம் அரங்கேறியது. அவர் தமது 50 ஆவது வயதில், தொண்டையில் வந்த புற்றுநோயின் காரணமாய் உடலை உகுத்தார்.
(மேலே படத்தில்:ஊணுறக்கம் துறந்து கடுந்தவத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணரின் துறவிச்சீடர்கள்)
  • சுவாமி விவேகானந்தரின் தலைமையில் ராமகிருஷ்ணரின் 16 சீடர்கள் உலக வாழ்வைத் துறந்து சன்யாசம் மேற்கொண்டனர். அவர் காலமான பிறகு பரம எளிமை வாழ்க்கையை மேற்கொண்டு அவர் காட்டிய வழியில் கடும் தவம் செய்தனர். ராமகிருஷ்ணர் காலத்துக்குப் பிறகு சுமார் 34 ஆண்டுகள் சாரதா தேவியார் உயிர் வாழ்ந்தார். அவரது தெய்வீகமான அருளும், ஆதரவும் ராமகிருஷ்ணர் உருவாக்கிய துறவியர் சங்கத்தை வழி நடத்தின. ராமகிருஷ்ணர் காலமான பிறகு பல ஆண்டுகள் கழித்தே ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது.
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தொடக்கம் முதலே துறவும் தொண்டும் அம்மடத்தின் இரு கண்கள் ஆகின. பாரத துறவியர் மடங்கள் சமுதாயத் தொண்டு ஆற்றுவதை மடத்தின் செயல்பாடாகக் கொண்டுவந்த முன்னோடி சுவாமி விவேகானந்தர். அதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தது அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் : “உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனே என்று கண்டு இறைவனுக்கு செய்யும் சேவையாக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்”.
  • சாத்திரங்களின் சாரத்தையெல்லாம் உள்ளடக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் பரம எளிமையானவை; அவையெல்லாம் அவரது காலத்துக்குப் பிறகே வெளியுலகம் அறிய வந்தது. அப்பணியைச் செய்ய ராமகிருஷ்ணர் தெரிந்தெடுத்து வைத்திருந்தவர் “ம-” எனும் புனைப்பெயரில் அறியப்படும் ஸ்ரீ மகேந்திரநாத் குப்தா எனும் ராமகிருஷ்ணரின் இல்லற சீடர் ஆவார். அவர் ராமகிருஷ்ணரின் உரையாடல்களை டயரிக் குறிப்புகளாக (ராமகிருஷ்ணரின் ஜீவ காலத்தின் கடைசி ஐந்து வருடங்களில்) எழுதி வைத்திருந்தார்.
ஸ்ரீ மகேந்திரநாத் குப்தா (ம-)
  • அவர், அவற்றை அவர் பிற்காலத்தில் விரிவாக்கி, “ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதம்” எனும் தலைப்பில் 5 புத்தகங்களாக வங்காள மொழியில் வெளியிட்டார். இவ்வரிய பொக்கிஷமாகிய நூல், ஆங்கிலம் (“The Gospel of Sri Ramakrishna”) உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் இது “ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்கிற பெயரில் 3 பாகங்களாகக் கிடைக்கிறது. இப்புத்தகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள தீவிர ஆன்மீக சாதகர்கள் மத வேறுபாடின்றி இன் நூலைப் படித்து மிக எளிமையாக இந்து மதத்தின் ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்து கொள்கிறார்கள்.

Loading

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *