சில இந்து மத குருமார்கள், மடாதிபதிகள் கல்வி, மருத்துவம், தொழில் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களே? இந்துமதம் காட்டும் ஆன்மீகம் இதுவா என்ன?

இதற்கு விரிவான பதில் அளிக்கவேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்  ரூபாய் நாணயத்தைத் தொட முடியாதவராய் இருந்தார். தொட்டால் அவர் கை முறுக்கிக்கொள்ளும்! பரிபூரணத் துறவின் அடையாளமாக அவர் வாழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மிகப் பெரும் தாக்கம் எது என்று சாரதாதேவியாரைக் கேட்டபோது அவர் தந்த பதில் என்ன தெரியுமா?, “அவரது பரிபூரணத் துறவு!”

This image has an empty alt attribute; its file name is main-qimg-41827de82e06452a3fe08dbf5d750c20
அவரது பிரதான சீடர்தான் வீரத்துறவியான சுவாமி விவேகானந்தர். அவர் வெளிநாடுகளில் வேதாந்தப் பிரசாரம் செய்து, சுற்றி, பணம் சேர்த்து, உள்ளூரிலும் நன்கொடைகள் பெற்றுத்தான் ராமகிருஷ்ண மடத்தை ராமகிருஷ்ணரின் பிற்காலத்தில் தொடங்கினார்.

ஆன்மிகம், சமுதாயத் தொண்டு, கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் என்று அம் மடம் மிகப்பெரும்அளவில் விரிந்து பரந்தது. விவேகானந்தரின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி அன்னை சாரதாதேவியிடம் சிலர் புகார் போலச் சொன்னபோது அவர் சொன்னது, “நரேன் சரியாகத்தான் செய்கிறான்”!

This image has an empty alt attribute; its file name is main-qimg-39282edcd7bf0efbcc2bb1296219399e
ஆக, பாம்பின் கால் பாம்பறியும்.

காசையே கையால் தொட முடியாத ஓர் மகா அவதார புருஷரின் உள் வழிகாட்டலில் படியேதான் விவேகானந்தர் செயல் பட்டார். அது காலத்தின் கட்டாயம். இந்தியாவில் கிருத்துவ மதபோதகர்கள் கல்வி, மருத்துவ சேவை இவற்றை முன் வைத்து சாமானிய மக்களை ஈர்த்து மத மாற்றம் செய்து சநாதன தர்மம் நலிந்து போகும் சூழலில், இந்து மத மடங்கள் பழைய பஞ்சாங்க முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டிய காலச் சூழல் அது.

ஆன்மீகம், பக்தி, தியானம் சேர்ந்த ஆன்மீக சாதனைகளோடு கூடவே, அவற்றின் ஓர் அங்கமாக சமுதாயப் பணி செய்து, சாதிக்கொடுமைகளால் நலிபவரைக் கல்வியில் உயர்த்தி, ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, பசித்தவனுக்கு சோறு ஏற்பாடு செய்து, வெள்ளம், பஞ்சம் நிலநடுக்கம் என்று பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் நல்கி என்று கர்மயோகமாகச் செயல் படும் பெரும் மாற்றம் இந்து மதத்தில் வந்தது. அதுவும் இறை இச்சையே.

இப்படித் தான் காலா காலமாக இந்துமதம் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது வழக்கம். ஏதோ பூதம் உட்புகுந்ததுபோல ஊண், உறக்கம் பற்றிக் கவலைப் படாமல் ஓய்வின்றித் தேச நலனுக்காகச் செயல்பட்ட விவேகானந்தர், நாற்பது வயதிலேயே தம் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு உயிர் துறந்தார்.

அவர் சுகம் அனுபவிக்கவா வந்தார்? செல்வம் சேர்க்க, மடாதிபதியாய் கவுரமாக உலகை வலம் வரவா வந்தார்?

அவர் காட்டிய பாதை பிற்காலத்தில் ஓர் முன்னுதாரணமாயிற்று. ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அதேபோலவே மாபெரும் செயல்வீரராய் இருந்தார். ஆன்மீகமும் சமுதாயப் பணியும் ஒருங்கே பரப்பினார்.

ஆன்மீக சாதர்கர்களை உருவாக்கி, கூடவே சமுதாயப் பணிகளும் செய்யப் பணம் வேண்டும். அது முற்றிலும் நன்கொடைகளால் மட்டுமே வருவது தற்காலத்தில் சாத்தியம் அல்ல.

மாபெரும் சக்தியுடன் உலகுக்கு வரும் மகான்கள், தாங்கள் உயிரோடுஇருக்கும் குறுகிய காலத்துக்குள்ளேயே மாபெரும் செயல்பாடுகளில் முனைந்து, வியக்கத்தக்க வேலைகளைச் செய்து முடிக்கக் களத்தில் இறங்குகிறார்கள். அதற்கு ஏராளமான பணமும் வேண்டியிருக்கிறது. அவர்களின் அடிப்படை நோக்கு ஆன்மீக உணர்வைச் சாமானியரிடமும் வளர்ப்பது. அதற்கு வழி சமுதாய நலம் பேணுவது.

அதனால், வியாபார நோக்கோடு செயல்பாடுகள் செய்து அதில் வரும் பணத்தை சமுதாய நலன்களுக்குத் திருப்பி விடுவதே தற்கால மகான்களின் வழியாக ஆகியிருக்கிறது.

மகான்களின் பொது நோக்கான சங்கல்பத்துக்கு தீவிர சக்தியுண்டு. அவர்களின் அந்த ஆன்மீக சக்தியால் ஈர்க்கப்பட்டுப் பலரும் சுய நலம் மட்டுமே வாழ்க்கை என்பதிலிருந்து மாறி, ஆன்மீக வாழ்வுக்கு வருகிறார்கள். இந்த குருமார்களின் வழி காட்டுதலின் படி புலனடக்கம், எளிமை, தியாகம், ஜபம், தியானம் போன்ற ஆன்மீக சாதனைகளை மேற்கொள்வதோடு, உலக நலனுக்காகத் தன்னலமற்ற சேவையை உற்சாகத்துடன் செய்யவும் முன் வருகிறார்கள்.

ஓரு அரசாங்கமோ, அல்லது வெளிநாட்டிலிருந்து டாலர்கள் பெரும் ஒரு NGO வோ, சமுதாய நலனுக்கான ஓர் பெரும்பணியை ஏற்றெடுத்துச் செய்தால் 100 ரூபாய்க்கு 20, 30 ரூபாய் அளவுக்கே பலன் போய் சேரும். அதையே மாதா அமிர்தானந்தமயி, ஜக்கி வாசுதேவ் போன்ற, இறையருள் அகத்திலிருந்து இயக்குகின்ற ஆன்மீகவாதிகள் முன் நின்று அப்பணியைச் செய்யும்போது 65 முதல் 75 ரூபாயளவுக்கு பலன் விளையும். காரணம், சம்பளத்தை எதிர்பார்க்காமல் சேவையாய் முன்வந்து செய்யும் ஏராளமான பக்தர்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களுள் மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், கல்வியாளர்கள், குறிப்பிட்ட துறைகளில் விற்பன்னர்கள், பல் தொழில் புரிபவர்கள் எனப் பலரும் உண்டு. உலகியலைத் துறந்த துறவிகளும், பிரம்மசாரிகளும் உண்டு.

ஒருவர் மகானாகவே இருந்தாலும் மேற்கண்ட பக்தர்களைத் தவிர, இப்படிப்பட்ட பணிகளை சாமானியர்கள் மூலமும் தான் அவர்கள் பெருமளவில் செய்வித்தாகவேண்டும். சாமானியர்களில் நல்லவர்கள், சீடர்கள், பக்தர்கள், சேவகர்களும் இருப்பார்கள்; அயோக்கியர்கள், திருடர்கள், சுருட்டல் பேர்வழிகள் எல்லாரும் இருக்கத்தான் இருப்பார்கள். பக்தர், சீடர்களிலும் இன்னும் பழுக்காதவர்களும், அகங்காரம் பிடித்தவர்களும், தவறான புரிதல்களுக்கு உட்பட்டு விரயமாய்க் காரியங்கள் செய்பவர்களும் கூட இருப்பார்கள்.

நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியத்தான் செய்யும். அங்கு இங்கு மடை உடைந்து நீர் வீணாகவும் போகும். மகான்களும் உலகின் இந்த இயற்கையான மாயை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுத்தான் செய்கிறார்கள்; அப்படித்தான் வேலை செய்தாக வேண்டும்.

பணத்திற்கென்று ஒரு கெட்ட குணம் எப்போதும் உண்டு. பணம் ஏராளமாக வரும்போது, மாயையும் உடன் வரும். சாமானியரும் உட் புகுந்து சுருட்டப் பார்ப்பார்கள். ஆன்மீக தாகத்தோடு வந்தவர்களில் சிலர் கூட அந்தப் பணப்புழக்கம், பதவி, ஆடம்பர வேட்கை, புகழாசை என்று மயங்கித் திசை மாறியும் போவார்கள்.

சுவாமி சிவானந்தர் தம் மடத்தில் ஓர் ஆள் பணம் சுருட்டுகிறான் என்று தெரிந்தால் அவர் அதனை மன்னித்துவிட்டு மற்றவர்களிடம் சொல்வார், “ஒரு திருடன் மடத்துக்குள் இருந்தான் என்றால், வெளியுலகில் ஒரு திருடன் குறைவு என்று அர்த்தம். அவன் வெளியுலகத்தில் இல்லாமல் மடத்துள் இருப்பது நல்லதே. இங்கு ஆன்மீக சூழலில் இருந்தால் அவன் ஒரு நாள் திருந்துவான்; வெளியுலகில் அவன் தானும் கூடுதல் கெட்டுப்போய் சமுதாயத்துக்குக் கூடுதல் கெடுதியும் செய்வான்” என்பார்!

This image has an empty alt attribute; its file name is main-qimg-b50f15141f0624cd485c916a4aa635ad
ஒரு முறை அவர் ஆசிரமத்தில் கடன் பெருகிற்று; நன்கொடைகள் வறண்டது. ஆனாலும் அவர் சொன்னது: “நாம் இறைவனின் பணியைச் செய்கிறோம்; அவர் பணம் தருகிறார். பணம் உலகியரின் பாக்கெட்டில் உள்ளது; அவர்கள் தந்தால் பணிகளைத் தொடர்வோம்; இல்லையெனில் நாம் ஆரம்ப காலத்தில் எப்படி அன்னசத்திரங்களில் பிச்சை எடுத்து உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்தோமோ அதற்குத் திரும்புவோம். நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை” என்றார்.

மகாத்மாக்களின் நிலைப்பாடு அதுவே. செல்வத்தால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. அவர்கள் சாமானியத் தொழிலதிபர்கள் போல் அல்ல. மகான்களின் அகத்துறவு நிலை அப்படி. வெளியில் காணும் ஆடம்பரங்களை வைத்து ஒரு மகானை எளிதில் எடை போட்டுவிட முடியாது.

ஜக்கி வாசுதேவின் ஆசிரமம், வனப் பகுதியில் மரங்களை வெட்டியல்லவா வந்தது? எட்டிமடையில் அம்மாவின் அமிர்தா பல்கலைக் கழகம் பல ஏக்கர் பரப்பில் ஒருவித வனப் பகுதியில் அல்லவா விரிந்துள்ளது? என்றெல்லாம் பலரும் கேள்வியெழுப்புகிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is main-qimg-199c70c131802e2d3e38c70f2ffff75d
என் குரு அம்மா மாதா அமிர்தானந்தமயி சொல்வார்: ‘நீண்டகாலப் பலன் தரும் ஒரு பழ மரம் ஒன்று வேண்டுமானால், அதை நட்டுப் பயிரிட்டு, அது வளர்ந்து நிழல் பரப்பும் இடம் யாவிலும் உள்ள புதர்ச்செடிளும், சிறு செடிகளும் நசிக்கலாம். பெரிய நன்மைக்காக சில சிறிய தியாகங்கள் தவிர்க்க முடியாதவை”.

ஒரு காலத்தில் முட்செடிக்ளும் புதர்களும் அடர்ந்த வனமாக எட்டிமடைப் பகுதி இருந்தது. அதை விலைக்கு வாங்கிய பின்னும் கல்லூரிக்கு அரசு அனுமதி உடனே கிட்டவில்லை. அம்மா ஆசிரம பிரம்மச்சாரிகள் ஓரிரு ஆண்டுகள் அப்புதர்களையும் கருவேல மரங்களையும், அங்கு வாழ்ந்த பாம்பு தேள்களையும் அழித்துப் பதப் படுத்தி, ஏராளமான பழமரங்கள், பூ மரங்கள், நிழல் மரங்களை நட்டார்கள்.

பின்னர் அனுமதி கிட்டியது. பல்கலைக்கழகம் அங்கு வளர்ந்தது. அந்தப் பெரும் வளாகமே இன்று ஒரு பெரும் காடுபோல ஏராளமான மரங்களைத் தாங்கி சுற்று சூழலையே மேம்படுத்தியுள்ளது.

அங்கு வந்து படிப்பது என்பது பெரும் தொகை செலுத்த வசதியுள்ளவர்களுக்கே சாத்தியம். பல்கலைக் கழகத்தில் வசூலாகும் பணம், எத்தனையோ அம்மாவின் இலவச சமுதயப் பணிகளுக்கு மடை திருப்பி விடப் படுகிறது. உலகியல் கல்வியோடு சமுதாய நலப் பணிகளையும் மாணவர்கள் கற்றுப் போகிறார்கள் அங்கே. ஏராளமான தொழில் வாய்ப்புகளை சுற்றுவட்டார சாமானிய மக்களுக்கு அந்த பல்கலைக் கழகம் உருவாக்கித் தந்துள்ளது.

என் குருவான அம்மாவோ, அல்லது ஜக்கி வாசுதேவோ, கோடி கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு மடாதிபதிகளாய் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு அவர்கள் 18-20 மணி நேரம் சமுதாயத்துக்காகவே செயல் படுகிறார்கள். “கொடுத்துக்கொண்டே இரு” என்பதுதான் அவர்கள் செயல் பாடு.

This image has an empty alt attribute; its file name is main-qimg-3614cc2c03f3cd153404bb01707580e2
அவர்கள் உபயோகிக்கும் விலை மதிப்பு கூடிய வாகனங்களைப் பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பில் ரயில் பயணம் செய்து அவர்கள் செயல் பட்டால், அவர்கள் தம் நேரத்தையும் திறனையும் வீணடிப்பதேயாகும். அதற்கு பதில் சொகுசு வேனில் பயணிக்கையிலேயே உறங்கி ஓய்வெடுத்தால் மற்ற நேரங்கள் அவர்கள் தம் பணிக்காகச் மேலும் திறனாகச் செலவு செய்கிறார்கள் என்று பொருள். (மீண்டும் பெரிய பழ மரத்துக்காகப் புதர்களை வெட்டுவது என்பதை நினைவு கூறுங்கள்).

அவர்கள், பெரிய அளவில் விளம்பரத்துக்கு செலவழித்து வியாபாரம் செய்பவர்களைப் போல. விளம்பரம் செலவல்ல. அது ஒருவித முதலீடு. அதுபோல இம்மகான்கள் தம் செயல்பாடுகளில் நீங்கள் குற்றம் காண்பது போன்ற சில கூடுதல் பயண வசதிகள் போன்றவை வைத்திருந்தால் அவை மீண்டும் அவர்களின் சமுதாயப் பணிகளுக்கு முதலீடுகளே.

“நான் வெளியுலகம் அறியாமல் 10 பேருக்கு உதவ வேண்டுமா அல்லது விளம்பரம் செய்து 1000 பேருக்கு உதவவேண்டுமா என்றால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்” என்பார் சுவாமி சிவானந்தர்.

அது தான் தற்கால மகான்களின் செயல்பாடு.

போன வாரம் மாதா அமிர்தானந்தமயியின் 66ஆவது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் வந்திருந்தார். எதற்கு இத்தனை ஆடம்பர விழாக்கள்?

This image has an empty alt attribute; its file name is main-qimg-0c55004b4b2e9b00476ce0037d37b0b1
அதைத் தெரிந்துகொள்ள, அவரது ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அறிமுகப் படுத்தப் படும் பெரும் சமுதாய நலத் திட்டங்கள் பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.

4 ஆம் வகுப்பு தாண்டாத, ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த ஓர் கிராமத்து பெண் தம் 66 ஆண்டுகால வாழ்க்கையில் சாதித்துள்ளவைகளை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. அதைத் தெரிந்துகொண்டால் தற்கால ஆன்மீகவாதிகளின் போக்கு புரியும்.

அதைத் தெரிந்துகொள்ள ஓர் கால் மணி நேரம் செலவழியுங்கள்:

ஆன்மீகம் மேலோட்டமானது அல்ல. அதை ஆழ்ந்து அறிந்தே புரிந்துகொள்ள முடியும்.

தங்க நகைகள் பிரபலமாகும் போது கில்ட்டு நகைகளும் வரத்தான் செய்யும். ஆங்காங்கே போலி ஆன்மீகவாதிகளும் வரத்தான் செய்வார்கள். பக்கா ஏமாற்றுக் காரர்களும் வரலாம். அதுவும் இறைவனின் மாயையில் ஓர் அம்சமே.

நமக்குப் பரிச்சயமான ஒரு லிட்டர் குவளையை மட்டும்வைத்துக்கொண்டு ஏரித்தண்ணீரையே அளந்து தீர்ப்பளிக்கிறேன் என்று சொல்வது சரியல்ல.

Loading

Swami Chidbhavananda – a brief Biography in Tamil – சுவாமி சித்பவானந்தர் – பெரியாரின் நாத்திகவாதத்துக்கு மாற்றாய் ஆத்திகக் கல்வி பரப்பிய மாமுனிவர்

Loading