Swami Chidbhavananda – a brief Biography in Tamil – சுவாமி சித்பவானந்தர் – பெரியாரின் நாத்திகவாதத்துக்கு மாற்றாய் ஆத்திகக் கல்வி பரப்பிய மாமுனிவர்
/1 Comment/in Q&A - Other Avatars & Saints/by C.V.Rajanதமிழ்நாட்டில் நாத்திக வாதமும், பிராமண எதிர்ப்பும் வளர்த்த பெரியாரின் தாக்கத்துக்கு மாற்றாக அவர் காலத்திலேயே ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஆன்மீகவாதி யாரேனும் உண்டா?
ஆம். அப்படி ஒரு மாமனிதர் ஒருவர் உண்டு.
அந்த மகானைப் பற்றி இக்காலத்தில் எத்தனை பேர் அறிவார்கள் என்பது ஐயமே. அவர் மறைந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நாத்திக வாதியான ஒரு சமுதாயப் புரட்சியாளரின் எதிர்மறைச் செயல்பாடுகளுக்கும், ஒரு ஆன்மிகவாதியான மகானின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் எத்தனை வித்தியாசம் என்பதைச் எடைபோட்டுப் பார்க்க இது உதவும் என நினைக்கிறேன்.
அவர், சுவாமி சித்பவானந்தர் (1898-1985). அவர் பிராமணர் அல்லர். பொள்ளாச்சிக்கருகே செங்குட்டைப்பாளையம் எனும் கிராமத்தில், கவுண்டர் குலத்தில் பிறந்தவர். முன்னாள் மாநில, மத்திய அமைச்சர்/ ஆளுநராய் பதவிகள் வகித்து, காங்கிரஸில் பெரிதும் மதிக்கப் பட்ட ஓர் தலைவராயிருந்த திரு சி.சுப்பிரமணியம் அவர்களின் சித்தப்பா.
நல்ல ஆங்கிலக் கல்வி பெற்றவர் (சின்னு எனும் பெயர் படைத்த) சித்பவானந்தர்; அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் போதனைகளாலும், சுவாமி விவேகானந்தரின் வாழ்வு, வாக்கினாலும் ஈர்க்கப் பட்டார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்துக்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டு, கல்கத்தா (பேளூர்) ராமகிருஷ்ண மடத்தில் பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்; ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தரின் அன்புக்குகந்த சீடர் ஆனார். பின்னர், சிவானந்தரால் சன்னியாச தீட்சை வழங்கப்பெற்று துறவியானார்.
ஊட்டியில் ராமகிருஷ்ணா மடத்தின் கிளையைத் துவக்கி 14 ஆண்டுகள் அதன் தலைவராகப் பணியாற்றினார் சித்பவானந்தர். பெரும் தவ சீலராகவும், குருவின் பேரன்புக்கும் பேரருளுக்கும் பாத்திரமான அரும் துறவியாகவும் விளங்கினார் சித்பவானந்தர். அக்காலத்தில், அவர் சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். மைசூர் மகாராஜா தர்பாரில் ராஜகுருவாக விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரிடமிருந்து வேதாந்த (உபநிஷத்) பாடங்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார்.
மகாத்மா காந்தி தென்நாட்டுக்கு வந்திருந்தபோது, அவரைத் தமது ஊட்டி மடத்திற்கு விஜயம் செய்ய வைத்தார் சித்பவானந்தர். மகாத்மாவுடன் கிட்டிய அந்தத் தொடர்பின் பயனாய், அரிஜன மக்களின் மேம்பாட்டுக்காக ஏதேனும் வழிவகை செய்யும் ஆர்வம் அவர் மனதில் வித்தாய் விழுந்தது.
ஊட்டியின் சுற்று வட்டாரங்களில் உள்ள பல கிராமங்களுக்கும் சுற்றி வந்து, பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோரிடையே தெய்வ பக்தி, ஆன்மீகம், ஒழுக்கமிகு வாழ்வு இவற்றை போதித்தார் சித்பவானந்தர். வெள்ள நிவாரணம் போன்ற சமுதாய சேவைகளிலும் ஈடுபட்டார். சுற்றுவட்டார ஊர்களிலும் நகரங்களிலும் கீதை வகுப்புகள் நடத்தினார்.
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிக்கை ஆசிரியராக சில காலம் பணி செய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்; கூடவே, ராமகிருஷ்ணரின் சரிதம், உபதேசங்கள் உட்பட பல தமிழ் நூல்களும் எழுதி, ராமகிருஷ்ணர்-விவேகானந்தரின் செய்தி தமிழ்நாட்டில் பரவப் பெரும் பங்கு வகித்தார் சித்பவானந்தர்.
ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு பகவான் ரமண மகரிஷி, ஸ்ரீ நாராயண குரு, ரிஷிகேசம் சுவாமி சிவானந்த சரசுவதி ஆகிய சமகால மகான்களைத் தரிசித்தார். இமய யாத்திரை மேற்கொண்டு பத்ரி, கேதாரம், கைலாயம், அமர்நாத் போன்ற புனிதத் தலங்களுக்கும் சென்று சிலிர்ப்புண்டாக்கும் அனுபவங்களைப் பெற்றார்.
தனியே திருப்பராய்த் துறையில்
தம் குருவின் ஆசிகள், அவர் முன்பே தந்திருந்த சூட்சுமமான வருங்காலக் குறிப்புகள், வழிகாட்டுதல்களின் படி, சுவாமி சித்பவானந்தர் 1940 ஆம் ஆண்டு, தாய் மடத்தினரின் அனுமதியுடன் தனியே பிரிந்து வந்தார்; திருச்சிக்கருகில் திருப்பராய்த்துறை என்னும் சிவத் தலத்தில், கோபுரத்தில் வந்து தனியே வசித்துத் தவ வாழ்வு மேற்கொண்டார்.
அவரது அன்பினாலும், ஆன்மீகத் தாக்கத்தாலும் கவரப்பட்டு, பலரும் அவரை நாடி வந்து உதவிகள் நல்க முன்வந்தார்கள்.
ஒரு முறை அவரைக் காணக் கோவிலுக்குள் வந்த ஹரிஜன அன்பர் ஒருவரைக் கோவிலின் பிராமண அர்ச்சகர்கள் உள்ளே விடாமல் விரட்டியதைக் கேள்வியுற்று அவர் மன வேதனை உற்றார்.
சாதி பேதம் அற்ற, சமய/ஒழுக்கம்சார்க் கல்வி
உள்ளூர் மக்களின் வேண்டுகோள், கொடுத்த ஆதரவு இவற்றுக்கிணங்க , திருப்பராய்துறைக் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து ஒரு ஆரம்பநிலைப் பள்ளியை முதலில் தொடங்கித் தம் கல்விப் பணிக்குப் பிள்ளையார் சுழியிட்டார் சித்பவானந்தர்.
பின் உள்ளூரிலேயே ஒரு இடைநிலைப் பள்ளியையும் துவங்கினார்.
தம் குரு தமக்குக் காட்டியிருந்த சில குறிப்புகள், கூடவே தவத்தின் பயனாய் அகத்திலிருந்து உண்டாகும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, ஆன்மீக சாதர்களுக்குறிய ஒரு தபோவனமும், சாதி, இன, மத பேதமின்றி குழந்தைகள் வந்து தங்கிப் படித்து, உலகியல் கல்வியோடு கூடவே, ஒழுக்கம், பண்பாடு, பக்தி, கலாசாரம், (பகவத் கீதை முதலான) சாத்திரங்களும் படிக்க, ஒரு குருகுலமும், தொடங்கவேண்டும் என்று களமிறங்கினார் அவர்.
செல்வந்தர்களான செட்டியார்கள் அவருக்குப் பொருளுதவி செய்ய முன்வந்தார்கள்; அதைக்கொண்டு காவிரிக் கரையில் பரந்த ஓர் நிலப்பரப்பு ஒன்றை வாங்கி ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை திருப்பராய்த்துறையில் தொடங்கினார் சித்பவானந்தர்.
அங்கேயே, பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லாத் தரப்பு மாணவர்களும் வந்து தங்கிப் படிக்க குருகுலம் எழுந்தது. அங்கே தூய்மையான குளியல்/கழிவறைகள் வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி, சத்தான உணவு, பாடசாலைகள் என எல்லா வசதிகளும் தரமாகச் செய்து தரப்பட்டன. அதுவே ஸ்ரீ விவேகானந்தா வித்யாவன குருகுலம். அது 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. ஏற்கனவே ஆரம்பித்த நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கான குருகுலமாய்த் தான் அது முதலில் தொடங்கியது . பின் தபோவன வளாகத்திலேயே பள்ளிக்கட்டிடமும் எழும்பி, முற்றிலும் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமேயான உயர் நிலைப் பள்ளியாக அது வளர்ந்தது.
அக்காலத்திலேயே நீச்சல் குளம் அமைக்கப்பட்ட ஒரு குருகுலமாய் அது புகழ் பெற்றிருந்தது!
அதில், மாணவர்கள் விடியலுக்கு முன்பு 4:50 மணிக்கே எழுந்துவிடவேண்டும். காலைப் பிரார்த்தனை, மந்திர ஜபம் போன்றவற்றில் கால அட்டவணைப் படி ஈடுபட்டே ஆகவேண்டும். நெற்றிக்குத் திருநீறு அணியவேண்டும்.
கண்டிப்பான, அதேசமயம் கனிவான குருவாயும் இருந்து சிறார்களை வழிநடத்தினார் சித்பவானந்தர்.
அவர், மாணவர்களுக்கு காயத்ரி மந்திர ஜபத்தைக் கட்டாயமாக்கினார்; சம்ஸ்கிருதம் கற்பித்தார்; பகவத் கீதையை மனப்பாடம் செய்ய வைத்தார்; தேவாரம், திருவாசகம், திருக்குறள் படிக்க வைத்தார். பள்ளியில் உலகியல் கல்வி கற்பதோடு கூடவே, விளையாட்டு, தோட்ட வேலை, நீச்சல், சுற்றுப்புறம் சுத்தமாக்கல், சமையற்கலை இவற்றையும் கற்பித்தார்.
பிள்ளைகளுக்கு வயிறு நிறையச் சத்தாயும்,சுவையாயும் உணவிடும் அன்னையாகவும் விளங்கினார் சித்பவானந்தர். இரவில் விடுதியை விட்டுத் திருட்டுத்தனமாய் வெளியே ஓடி, ஊருக்குள் போய் சினிமா பார்க்கும் குரும்புப் பிள்ளைகளுக்குத் தண்டனை தந்து திருத்தவும் அவர் தயங்கியதில்லை!
பிராமணர்களை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்
பிராமணர்களின் சில செயல்பாடுகளில் அவர் அதிருப்தி கொண்டிருந்தாலும், ஒரு மகாத்மாவாக விளங்கிய சித்பவானந்தர், (பெரியாரிசத்தில் காணும் வெறுப்பு வழியை ஒழித்து) அன்பான, ஆக்கப் பூர்வமான பாதையை பிற்பட்டோர் நலத்தில் காட்டினார்.
அவர் சொல்வார்: ” ஒரு நீளமான கோட்டைச் சின்னதாக ஆக்க வேண்டுமானால், அதற்கு, அந்தக் கோட்டை அழிக்க வேண்டியதில்லை; அதற்குப் பக்கத்திலேயே மேலும் நீளம் அதிகமுள்ள மற்றோரு கோட்டை வரைந்துவிட்டால், முதற்கோடு சிறியதாகிவிடுமல்லவா? அது போலத்தான் இப்போது தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், உயர்ந்த நிலையிலுள்ளவரை அழிக்க முற்படாமல், தம்மை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும்,
“பிராமணர் ஏன் உயர்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதை அவர்களது நல்ல குண நலன்களைக் கண்டு கற்றுக்கொள்ளுங்கள்; பிராமணர்கள் மிகப் பலரும் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; தெய்வ பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்; கல்வியைக் கண்போல நினைக்கிறார்கள்; சம்ஸ்கிருதம் கற்கிறார்கள்; நேர்மையானவர்களாகவும் சுய கட்டுப்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்; புகை, குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை; சுத்தம் பேணுகிறார்கள்; கெட்ட பேச்சுக்கள் பேசுவதில்லை.
“அவர்களில் ஒழுக்கமும் சத்தியமும் உள்ளவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற சாதியினர் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்; அவர்களை எதிரிகளாகக் காணாமல் அவர்களைத் தாண்டி வளர்ந்து விட முயலவேண்டும்” என்று போதிப்பார் அவர்.
அற போதனைக்கு முக்கியத்துவம்
அரசாங்கப் பாடத்திட்டப்படி நடத்தப்படும் கல்வியோடு கூடவே, அவர் மிகவும் மெனக்கெட்டு வித்யாவன மாணவர்களுக்கான அற போதனைக்கான பாடத்திட்டத்தை உருவாக்கினார்; தாமே பல சமயங்களில் அந்த ஆசிரியர் பொறுப்பை ஏற்று மாணவர்களை வழி நடத்தினார். அவர் பாடத்திட்டத்தில், ராமாயண மகாபாரதக் கதைகள், அவதார புருஷர்களின்/ சமயச் சான்றோர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், பஞ்சதந்திரக் கதைகள், ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற நூலகளிலிருந்து அறவிளக்கங்கள், சரித்திரப் பெரு நிகழ்வுகள், உபனிடதம், ஐம்பெருங்காப்பியங்கள், பிற நாட்டு இலக்கியஙளிலிருந்து எடுத்த கதைகள், உவமைக் கதைகள், நீதி நெறிக்கதைகள் என்று பலவும் அடங்கியிருந்தன.
மாணவர்களை, ராமாயண, மகாபாரத, புராணக்கதைகளை கலைவிழாக்களில் நாடகமாக நடிக்கப் பெரிதும் ஊக்குவித்தார் அவர்.
இப்படி அவர் தெய்வ வழிபாடு, சாத்திரப் படிப்பு, தாய்மொழியோடு கூடவே சம்ஸ்கிருதமும் படித்தல், ஒழுக்கக் கல்வி இவற்றிற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து, அவற்றில் தளர்ச்சிக்கோ, அலட்சியத்துக்கோ இடம் கொடாமல் மிகவும் கண்டிப்பாக இருந்தார். தவறு செய்தால் தண்டித்துத் திருத்தினாலும் திருந்தாத சில் அடங்காப் பிடாரிகளை தாட்சணியம் இன்றி வீட்டுக்குத் திரும்ப அனுப்புவதிலும் அவர் தயங்கியதில்லை.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவரது குருகுலத்தின் புகழ் வெளியுலகத்தில் ஓங்க ஓங்க, சில ‘கருப்புச் சட்டைக் காரர்கள்’ கூடத் தம் பிள்ளைகளை குருகுலத்தில் சேர்க்க ஆரம்பித்தார்களாம் — “அங்கே படிச்சா நம்ம பிள்ளை கண்டிப்பாக உருப்படுவான்” என்கிற கணக்கில்!
தாழ்த்தப்பட்டோருடன் ஆலயப்பிரவேசம்
1948 ஆம் அண்டு வாக்கில், சுவாமிகள் சேரிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சிறார்களை ஒன்று கூட்டி, அவர்களைக் குளிப்பாட்டிப் புத்தாடை அணிவித்து, வித்தியாவன மாணவர்களுடன் சேர்ந்து திருப்பராய்த்துறைக் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அர்ச்சகர்களும் பிற உள்ளூர்ப் பிரமுகர்களும் தெரிவித்த எதிர்ப்புகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் சிறிதும் அஞ்சவில்லை சித்பவானந்தர்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி – தொடக்கமும், மூடலும்
அப்போதிருந்த காமராசரின் அரசாங்கம், மிகப் பெரிய அளவில் பள்ளிகளைத் திறந்து கல்விச் செல்வத்தை சாமானியர்களுக்குப் பெருமளவில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நிறைய ஆசிரியர்களின் தேவை ஏற்பட்டது. அதனால், அரசாங்கம் சித்பவானந்தரை ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடங்க வேண்டுகோள் விடுத்து, மானியமும் தர முன்வந்தது. அந்த ஊக்குவிப்பின் படி, தபோவனத்தில் ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை 1955 இல் தொடங்கினார் சித்பவானந்தர்.
ஒழுக்கமும், அறிவும் இரு கண்கள் எனக் கொண்ட சுவாமிகள், மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களுக்கும், தெய்வ நம்பிக்கை, பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு இவை மிக அவசியம் என்பதில் மிக உறுதியாய் இருந்தார். ஆசிரியர்கள் முன்மாதிரியாக விளங்கினால் தான், மாணவர்களுக்கும் அவர்கள் போதிக்க முடியும். ஆகவே, ஆசிரியர் பயிற்சி பெறுவோரும், தபோவன முறைகளுக்கு உட்பட்டு, விடியும் முன் எழுதல், பிரார்த்தனை, உடற்பயிற்சி, மந்திரம் சொல்லுதல், ஒழுக்க நியமங்களைப் பேணுதல், நெற்றியில் திருநீறு அணிதல் போன்றவற்றைக் கடைப்பிக்கவேண்டும் என்கிற முன் விதிகளை முன்கூட்டியே தெரிவித்த பின்னரே, ஆசிரியர் கல்லூரியில் சேர்க்கைகள் நிகழ்ந்தன.
ஆனால், தமிழ் நாட்டில் அக்காலகட்டத்தில் மேலோங்கியிருந்த பெரியார் இயக்கம், திராவிட இயக்கம் இவற்றின் பாதிப்பால், இக்கல்லூரியில் சேர்ந்த இளைஞர்கள் பலர், இத்தகைய (இந்து மதம் சார்ந்த) நியமங்கள், கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
தம் கொள்கைகளிலும், ஒழுக்க நியதிகளிலும் விடாப்பிடியான நெஞ்சுறுதியுடன் அசையாமல் இருக்கும் சுவாமிகள், சமாதான முயற்சிகள் பயன் தராமல் போகவே, கல்லூரியை மூடிவிடத் தீர்மானித்து, அதனை உறுதியுடன் செயல் படுத்திவிட்டார்!
அந்தர்யோக வகுப்புகள் – சாமானியர்க்கும் ஆன்மீகம்
அக்கால கட்டத்தில், வேதாந்தம், யோகங்கள், பகவத் கீதை போன்ற நம் தொன்மையான சாத்திர நூல்களைப் படிப்பிப்பது என்பது பெரும்பாலும் ஆன்மீகத் துறவி மடங்களில் மட்டுமேயோ அல்லது ஆங்கிலம் படித்த மேல்சாதி, மேல்தட்டுக்காரர்களுடைய வட்டங்களில்லேயோ நிகழும் ஓர் விஷயமாகவே இருந்தது.
சாதி பேதமின்றி, தமிழில் சாத்திரங்களையும், யோகங்களையும் அறியும் ஆர்வமுள்ள எல்லா இந்துக்களும் (இல்லறத்தார், பெண்கள் உட்பட எல்லாரும்) பயனடையும் விதத்தில் சுவாமிகள் தொடங்கிய ஆன்மீக முகாம்கள் தான் அந்தர் யோகங்கள். ஆரம்பத்தில், திருப்பராயித்துறை தபோவனத்தில் வைத்து அன்பர்கள் வந்து 3 நாட்கள் தங்கிப் பங்குபெரும் அந்தர்யோகங்களை சுவாமிகள் நடத்தினார். விடியுமுன் எழுந்து பிரார்த்தனை முதலான ஆசிரம நடைமுறைகளில் பங்கெடுத்து, நாம சங்கீர்த்தனம், ஜபம், தியானம், மௌனம், ஆன்மீக சத்சங்கம், வினா-விடை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் பங்குபெறும் பயிற்சி முகாம்களே இந்த அந்தர்யோகங்கள். பக்தர்களின் வசதியை அனுசரித்து பின் அது ஒரு நாள் நிகழ்ச்சியாக மாறியது.
இந்த அந்தர்யோகங்கள் ஆன்மீக ஆர்வலர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறவே, பல வெளியூர்களிலிருந்தும் சுவாமிகளுக்கு அவ்வூர்களில் அந்தர்யோகம் நடத்த அழைப்புகள் வர ஆரம்பித்தன. திருக்குற்றாலம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, கோவை, விருது நகர், சேலம், கரூர், நாகர்கோவில், சுருளி, பாபனாசம், சாத்தூர், ராசிபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற ஊர்களில் சுவாமிகள் அந்தர்யோகங்கள் நடத்தினார்; ஏராளமான மக்கள் பங்கேற்றுப் பயனுற்றனர். பல ஊர்களில் அவை வருடாந்தர நிகழ்வுகளாயின. நாத்திக வாதம் பெரிதும் பரவத் தொடங்கியிருந்த விருதுநகர் போன்ற ஊர்களில், அக்காலத்தில் அந்தர்யோகம் பெரிதும் மக்களால் வரவேற்கப் பட்டது.
ஆன்மீகம் என்றாலே கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது, உலகியல் தேவைகள்/ஆசைகளுக்காகப் பிரார்த்திப்பது என்பவை மட்டும் தான் என்றிருந்த சாமானியரிடையே ஆன்மீக சாதனைகளின் முக்கியத்துவத்தைப் மிகப் பெருமளவில் பரப்ப அந்தர்யோகங்கள் பயன்பட்டன. அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒழுக்கம், நேர்மை, தூய்மை, கட்டுப்பாடு இவற்றைக் கொண்டுவருவதுதான் முக்கியம்; இந்த சாரமான இந்துமதத்தின் அடிப்படைகள் புரிய ஆரம்பித்ததால், பல இந்துக் குடும்பங்கள் மதமாற்றக்காரர்கள் வலையில் சிக்காமல் தப்பினார்கள்.
இந்த அந்தர்யோகங்களில் பங்கு பெற்றதன் பயனாய். நாத்திக வாதத்தால் மதி மயங்கியிருந்தவர்கள் பலரும் கூட அதனை விட்டு, இந்து மதத்தின் சாரமான வேர்களைக் கண்டு புரிந்துகொண்டு தம் மயக்கத்திலிருந்து விடுபட்டனர்.
பகவத் கீதை பிரசங்கங்கள் – புத்தக வெளியீடு
1940 முதலேயே சித்பவானந்தர் பகவத் கீதை உரைகள் நிகழ்த்தி வந்தார். பின்னர், தபோவனம் தொடங்கிய பின், அந்தர்யோக வகுப்புகள் போலவே, சுவாமிகள் பகவத் கீதைப் பிரசங்கங்களையும் பல ஊர்களிலும் மேற்கொண்டார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. பகவத் கீதைக்கு விரிவான விளக்க உரையையும் அவர் எழுதினார்.
தமது தபோவனத்திலேயே அச்சுக்கூடம் அமைத்து இந்த பகவத் கீதை உட்பட பற்பல ஆன்மீக நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். ‘தர்ம சக்கரம்’ எனும் ஆன்மீக மாத இதழும் அவருடைய எழுத்துகளைத் தாங்கி வெளிவரத் தொடங்கியது.
இவரது பகவத் கீதை விளக்க உரையின் முதல் பதிப்பு 1951 ஆம் ஆண்டு வாக்கில் வெளி வந்தது. பிறகு எத்தனையோ மறுபதிப்புகள்! மிகக் குறைந்த விலையிலேயே விற்கப்பட்ட இந்த கீதா விளக்க உரை தமிழ்நாடெங்கும் மிகப் பிரபலம் ஆனது. தமிழில் வெளிவந்த பகவத் கீதை உரைகளிலேயே இன்றளவும் மிக அதிகம் விற்பனையாவது சித்பவானந்தரின் உரையே எனச் சொல்லலாம்.
பெரிதும் விரிந்த கல்விப் பணி
ஆன்மீக நாட்டம் உள்ள செல்வந்தராகிய பல செட்டியார்களும், பிறரும், ஏராளமான இல்லற பக்தர்களும் சுவாமி சித்பவானந்தாரைத் தம் சத்குருவாகக் கொண்டு சரணடைந்தார்கள். பல இளைஞர்கள் உலகியலைத் துறந்து பிரமசாரிகளாய் வந்து தபோவனத்தில் சேர்ந்து, சேவையும் ஆன்மீக சாதனையும் புரிய ஆர்வமாய் முன்வந்தார்கள். அவர்களில் சிலர் சுவாமிகளிடம் சன்யாச தீட்சை பெற்றார்கள்
பல செல்வந்தர்கள், தமது நிலங்களியும், செல்வத்தையும் அவரது சிறப்பு மிகு கல்விப்பணிக்காக வழங்க முன்வந்தார்கள். பலரும் பல ஊர்களிலும் சுவாமிகளைப் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கக் கோரிக்கை வைத்தார்கள்.
அப்படிக் காலப்போக்கில் சுவாமிகள் துவங்கிய கல்வி நிறுவனங்கள்:
- திருவேடகத்தில் விவேகானந்தர் குருகுலக் கல்லூரி
- திசையன்விளை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளி
- கரூர் விவேகானந்தா கல்வி நிலையம் / விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (ஆங்கிலக் கல்வி)
- ராமேஸ்வரம் விவேகானந்தாமெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
- சேலம் ஸ்ரீ சாரதா வித்யாலயம்
- சேலம் ஸ்ரீ சாரதா பாலமந்திர், ஸ்ரீ சாரதா ஆரம்பப் பள்ளி, ஸ்ரீ சாரதா மழலையர் பள்ளி
- சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி
- மன்னார்குடி அம்பாள் ஆரம்பப் பள்ளி
- நெல்லை ஸ்ரீ சாரதா வித்யாலயம், ஸ்ரீ சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி (ஆங்கிலக் கல்வி)
பெண்கள் முன்னேற்றம்
பெண் கல்வி, அதன் மூலம் சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் இவற்றில் பெரும் அக்கறை கொண்டிருந்தார் சித்பவானந்தர். உலகியலிலேயே உழன்றுகொண்டிருக்காமல், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும், அடைய வேண்டும் என்று விரும்பினார் சுவாமிகள். விவேகானந்தர் காட்டிய துறவும் தொண்டும் எனும் ஆன்மீக மார்க்கத்தில் விவேக வைராக்கியம் மிகுந்த பெண்களும் பயணிக்கும் விதத்தில் சேலம் சாரதா சமிதியைத் தொடங்கி, தீரம் மிக்க பெண்மணிகளுக்கு சன்னியாச தீட்சை கொடுக்கும் ஒரு பெரும் ஆன்மீகப் புரட்சியைத் தமிழ்நாட்டில் செய்தவர் சுவாமிகள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் சுவாமிகளின் கல்வி நிலையங்கள் பங்கேற்கவில்லை
சித்பவானந்தர், தாய்மொழி வழிக் கல்விக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். ஆயினும், மாணவர் நலன், தேச நலன் இவற்றில் அக்கறை மிகுந்த சுவாமிகளுக்கு, இந்தி மொழி எதிர்ப்பு உடன்பாடானதல்ல. ஆகவே அவருடைய கல்வி நிலைய மாணவர்கள் எவரும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை.
சந்தித்த பிரச்சனைகள்
இந்துமத ஆன்மீகம், ஒழுக்கம் சார்க் கல்வி என்று வரும்போதே, என்னதான் பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயக் கல்வி மேம்பட்டுக்காக சுவாமிகள் செயல்பட்டாலும், ( தி.மு.க ஆட்சி தமிழ் நாட்டில் மலர்ந்த பிறகு) அவர் பல மறைமுக எதிர்ப்புகள், தடைகளைச் சந்திக்க வேண்டித்தான் வந்தது.
கல்லூரிகள் தொடங்குவதில் அரசு அனுமதி பெறப் பல தடைகள், திருநெல்வேலிப் பகுதிகளில் கல்வித் துறையில் கிறித்துவ ‘லாபி’ களின் செல்வாக்கு கூடுதல் இருந்ததால் இந்துமத சார்புள்ள பள்ளி, கல்லூரிகள் எழுவதில் அவர்கள் உண்டாக்கிய முட்டுக்கட்டைகள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுவாமிகளின் ஆசிரமக் கிளைகளின் செயல்பாடுகளில் தரப்பட்ட சில இடைஞ்சல்கள் இவற்றையெல்லாம் சுவாமிகள் மிகுந்த பொறுமையோடு எதிர்கொண்டார்.
ஒழுக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடிய திருவேடகக் கல்லூரி மாணவர்கள்
1971 இல் திருவேடகத்தில் தொடங்கப் பட்டது விவேகானந்தர் குருகுலக் கல்லூரி. மிகச் சிறந்த கட்டடங்கள், வகுப்பறைகள், சோதனைச் சாலைகள், தங்கும் விடுதிகள், அருமையான உணவு என்று அனைத்தையும் உயர்வாகக் கொண்டு விளங்கியது அவ்வளாகம்.
வெளியுலகில் நாத்திக வாதமும், சினிமாப் பைத்தியமும், மதம் சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு எதிரான போக்கும் சகஜமாகிவிட்ட சூழலில், திருவேடகம் கல்லூரியில் விடுதி மாணவர்களுக்கு நிர்வாகம் வைத்திருந்த சில பல நியதிகள் (அதி காலையில் எழுவது, பிரார்த்தனை செய்வது, கால அட்டவணைப்படி நடந்துகொள்வது, வார்டன்களால் கண்காணிக்கப் படுவது போன்றவை) கசந்தன.
என்ன செய்ய? தங்கள் நீண்டகால நலத்துக்காக ஒரு மாமனிதர் உண்டாக்கிய நியமங்களை ஏற்கப் பிடிக்காத வயதுக் கோளாறு அல்லவா அது?
திருட்டுத்தனமாய் வெளியே போய் ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது, புகை பிடிப்பது, உணவுக் கூடத்தில் உணவை வீணாக்குவது இவற்றிற்கு மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. எச்சரிக்கைகள், தண்டல்களையும் மீறி நடந்துகொண்ட மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப் பட்டனர்.
இது ஒரு பெரும் மாணவர் போராட்டமாய் மாறி, மாணவர்கள் பலர், வகுப்பறைகள், கல்லூரி சோதனைக் கூடங்கள், பிராத்தனைக் கூடங்கள் இவற்றில் இருந்த பொருட்களை உடைத்துப் பெருமளவு சேதங்களை உண்டாக்கினர். தடுக்க வந்த ஆசிரியர்களின் மீது நாற்காலி, மேசைகளை வீசினர். போலீஸ் வரவழிக்கப் பட்டு அமைதி நிலவச் செய்ய் வேண்டியிருந்தது.
சுவாமிகள், கல்லூரியை இழுத்து மூடினார். பெற்றோர்களை வரவழித்து மாணவர்கள் உண்டாக்கிய சேதங்களைக் காண்பித்தார். மனம் வருந்தினர் பெற்றோர். போராட்டத்தில் பங்கேற்று சேதம் விளைவித்த் 37 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டனர். சேதத்துக்கான தொகை கணக்கிடப்பட்டு, எல்லா மாணவர்களிடமிருந்தும் வசூல் செய்யப்பட்டது. பின்னரே கல்லூரி மீண்டும் திறக்கப் பட்டது.
இந்தப் போராட்டத்தில், ஆசிரியர்கள் மாணவர்களை வன்மையாய்க் கண்டித்து, நாசவேலைகள் நடக்கும் முன் தடை செய்யாமல் அஞ்சி ஒதுங்கியது சுவாமிகளுக்கு ஏமாற்றம் தந்தது. ஆசிரியர்களுக்கு நெஞ்சில் உறமும் நேர்மைத் திறனும் அவசியம், அதற்கேற்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அவசியம் எனத் தீர்மானித்தார் சித்பவானந்தர்.
ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணக்கம் — காலத்தின் தேவை
சர்வ மத சமத்துவ நோக்குள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாரம்பரியத்தில் வந்த சுவாமிகளுக்கு ஆரம்ப காலங்களில் ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்கம்) பற்றிய சாதகமான எண்ணப் போக்கு இருந்ததில்லை. ஆர்.ஏஸ்.எஸ் ஒரு மதவாத, வகுப்புவாத இயக்கம் என்கிற ஒரு சித்திரமே அக்காலத்தில் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டு வந்தது. சுவாமிகளிடம் பக்தி பூண்ட ஆத்திகர்கள் சிலர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் மூலம், அவர் சங்கத்தின் தலைவராயிருந்த் குருஜி கோல்வாக்கரை சேலத்தில் சந்தித்துத் தம்து ஐயங்கள் பலவற்றிற்குத் தெளிவைத் தேடினார்.
ஒரு மதத் தலைவராகவும், ஒழுக்கம் செழுமிய சமுதாய நலனில் பெரும் நாட்டம் மிகுந்த கல்வியாளராகவும் இருந்த சுவாமிகளுக்கு இந்தச் சந்திப்பின் பயனாய், அந்த ஸ்தாபனத்தின் உயர் நோக்கங்கள், கட்டுப்பாடுகள், துணிச்சல், தேச பக்தி இவற்றின் மேல் மிகுந்த நல்லுணர்வு தோன்றி வலுப்பெற்றது.
இந்தத் தொடர்பின் விளைவாக, இந்து மத எதிர்ப்புணர்வுடன் கூடிய நாத்திக வாதத்தின் தாக்கத்தின் ஒரு மோசமான பக்க விளைவு சுவாமிகளுக்குத் தெளிவாகியது. ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்’ வகையில் தமிழ் நாட்டில் விஷம் போலப் பரவ ஆரம்பித்த (இஸ்லாம், கிறித்துவ) மத மாற்றங்கள் சுவாமிகளின் சிந்தனைப் போக்கைப் மாற்றி, ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்க வைத்தது.
அதன் விளைவாக, திருவேடகக் கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஷாகா செயல் படவும். ஆர்வமுள்ள ஆசிரியர்களும் மணவர்களும் அதில் சேர்ந்து பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்தார் சுவாமிகள்.
பின் பலவகைகளிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பெருமளவில் ஆதரவும், ஒத்துழைப்பும் தரத் தொடங்கினார் சுவாமிகள்.
பெரியாரைக் கண்டிக்காத மகான்
பெரியாரின் நாத்திகவாதமும், எதிர்ப்பு வாதமும் தமிழ் நாட்டில் ஏற்படுத்திய தாக்கங்களைக் கண்முன்னே கண்டாலும், சித்பவானந்தர் பெரியாருக்கு எதிராகவோ, கண்டித்தோ ஏதும் பேசியதில்லை.
சித்பவானந்தரின் செயல்பாடுகளையும் பெரியார் கண்டுகொண்டுதான் இருந்தார். சம்ஸ்கிருதத்தைத் தம் குருகுல மாணவர்களுக்குப் படிப்பிக்கும் சுவாமிகளின் முயற்சியைப் பற்றி ஒரு முறை பெரியார், “ஆயிரம் சித்பவானந்தர் வந்தாலும் இங்கே சம்ஸ்கிருதம் தழைக்காது” என்று சொன்னதுண்டாம்!
இன்னும் சொல்ல எவ்வளவோ உண்டு…
சுவாமி சித்பவானந்தரின் நீண்ட நெடிய செயல் தீரம் மிக்க ஆன்மீக வாழ்க்கை 1985 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மேலே சொல்லாமல் விட்ட அவரது ஆக்கப் பணிகள் இன்னும் எத்தனை எத்தனையோ.
தமிழ்ப் பாட நூல்களிலெல்லாம் தந்தை பெரியாரின் சமுதாயப் புரட்சியைப் பற்றியும், சீர்திருத்தங்களைப் பற்றியும் எவ்வளவோ படிக்கிறார்கள் மாணவர்கள். ஆனால், கல்வி, ஒழுக்கம், பிற்பட்டோர் நலம், மேம்பாடு, ஆன்மீகம் இவற்றை ஆக்கப் பூர்வமாய் வளர்க்கப் பாடுபட்ட இந்த மகானைப் பற்றி ஒரு வரியாவது உண்டா? எனக்குத் தெரியாது.
தமிழ்க் கோரா மூலம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்ற ஆதங்கத்தில் எழுத ஆரம்பித்து, மிக நீண்ட பதிவாகிவிட்டது இப்பதில்.
பின் குறிப்பு:
மேற்கண்ட தகவல்களுக்கு ஆதாரம்:
1) “வேதாந்தம் தந்த வீரத் துறவி சுவாமி சித்பவானந்தர் – விரிவான வாழ்க்கை வரலாறு” – 3 பாகங்கள். யதீஸ்வரி கிருஷ்ணப் பிரியா அம்பா எழுதியது.
வெளியிட்டோர்: ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம், திருவண்ணாமலை. (3 பாகங்கள் விலை ரூ. 675. விவரங்களுக்கு [email protected])
2) சித்பவானந்தரின் நேர் துறவி சீடர்களில் ஒருவரும், தற்போது மாதா அமிர்தானந்தமயி மடத்தில் வாழ்பவருமான சுவாமி துருவானந்தா அவர்கள் சொன்ன சில தகவல்கள்