ஆன்மீக சாதகர்களுக்கு மௌனம் ஓர் முக்கிய உபாயமாகப் பரிந்துரைக்கப்படுவது ஏன்?
ஒரு நாள் ஒரு 2 மணி நேரம் நண்பர்களுடன் அரட்டை அடியுங்கள். அதில் நகைச்சுவை, கருத்துப் பரிமாற்றங்கள், அரசியல், வாதங்கள், எதிர் வாதங்கள், கிண்டல், கேலி, குத்தல், சீண்டல், பொறாமை, அறிந்தும் அறியாதும் மற்றவரைப் புண்படுத்தல் என்று பல உணர்ச்சிகளும் கலந்திருக்கும். மனம் இவை எல்லாவற்றிலும் ஈடுபடும்.
அதோடு மட்டுமல்ல; பேசி முடித்தபின்னும் பேசிய பேச்சுகளைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வரும்; ஒரு விவாதத்தில் நீங்கள் தோற்றிருந்தால், ஒரு நண்பன் விளையாட்டாக உங்களை மட்டம் தட்டியிருந்தால், பேச்சில் ஏதேனும் ரசாபாசமான விஷயங்கள் இருந்திருந்தால் இந்த எண்ணங்கள் பின்னும் பல மணிகள் உங்களுள்ளில் வளைய வரும்.
ஒருவேளை அந்த அரட்டைக் கச்சேரி நடக்காமலேயே இருந்து நீங்கள் அந்த நேரத்தில் முழுமனதுடன் ஒரு பலன் மிக்க புத்தகத்தைப் படித்திருந்தால்?
ஆக, வெளிப்பேச்சு, அகப் பேச்சைக் கூடுதல் தூண்டிவிடுகிறது. பேச்சுக் குறைந்தால் அகச் சலனங்களும் குறைய வாய்ப்பு கூடுதல்.
ஆகவேதான் மௌனம் ஆன்மீகத்துக்கு ஓர் உபாயமாகப் பரிந்துரைக்கப் படுகிறது.