The Concept of Avatar in Hinduism (Tamil)
இந்து மதம் காட்டும் அவதாரக் கொள்கை
எப்போதெல்லாம் பூமியில் நல்லோர்கள் துன்பத்துக்கு உள்ளாகிறார்களோ, தீயோரின் கைகள் மேலோங்கித் தர்மம் நிலை குலைகிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதரித்து வருகிறார் என்பது இந்து மதத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று.
அவதாரம் என்றாலே ‘இறங்கி வருதல்’ என்றுதான் பொருள். அவசியமான தக்க சமயம் வரும்போது இறைவன் அவதரித்து வருகிறார் என்கிற செய்தியை பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் “யதா யதாஹி தர்மஸ்ய….” எனும் சுலோகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்:
“அர்ஜுனா, எப்போதெல்லாம் தருமம் குன்றி அதர்மம் மேலெழுகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; சாதுக்களைக் காத்து, தீயோரை அழித்து தர்மத்தை நிலை நாட்ட யுகம் தோறும் நான் வந்துதிக்கிறேன்” (ப.கீ. 4-7,8)
இறைவன் மனித வடிவெடுக்காது வேறு வடிவில் அவதரித்து வந்த (மச்சாவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் போன்ற) அவதாரக் கதைகளையும் நமது இதிகாச புராணங்கள் விவரித்துள்ளன.
இந்துமதத்தின் அடிப்படையில் கடவுள் ஒருவரே. அவரை உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என்கின்றன. அந்தப் பிரம்மம் பெயர்-உருவங்களுக்கு அப்பாற்பட்டது. எங்கும் பரந்தது; எல்லாவற்றிலும் உள்ளது; எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. பார்க்கப் போனால் இந்தப் பிரபஞ்சத்தில் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே அந்தப் பிரம்மத்தின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே. அந்தப் பிரம்மம் அணுவைக்காட்டிலும் நுண்ணியது; அதே சமயம் பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமானது.
ஆக, பிரம்மத்தில் எல்லாமே அடங்கியதால், பல்வேறு பெயர்-உருவத்துடன் கூடிய (ஈசுவரன் எனப்படும்) வழிபாட்டு தெய்வங்களும் அந்தப் பிரம்மத்தின் வெளிப்பாடே.
படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் எனும் மூன்று பிரதான தெய்வங்கள் இந்துமதத்தில் நாம ரூபங்களோடு கற்பிக்கப் பட்டுள்ளனர்.
அதில் விஷ்ணுவையே அந்தப் பரப் பிரம்மமாகக் கொண்டாடி வழிபடுவோர்கள் வைஷ்ணவர் எனப்படுகின்றனர். படைக்கும் கடவுளான பிரம்மாவே (படைப்புத் தொழிலை செய்வதற்காக) அந்த விஷ்ணுவின் நாபியிலிருந்து விஷ்ணுவால் தோற்றுவிக்கப் பட்டவர்தாம் என்பது வைஷ்ணவர்கள் கொள்கை.
சைவ சம்பிரதாயப்படியோ, சிவனே அந்த பரப் பிரம்மம். அவரே எல்லாம். அவரது அடியும் முடியும் கூட பிரம்மா விஷ்ணுவுக்கு எட்டமுடியாதவை என்று சைவ புராணங்கள் கூறும்.
அவ்வாறே சக்தியை பரப் பிரம்மமாகக் கொண்டாடும் சாக்தர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவனைப் படைத்ததே அந்த சக்திதான் என்பார்கள்.
நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் பிரதானக் கடவுளர்கள்; அவதாரங்கள் அல்ல.
(ஆயினும் ஒரு சில சாத்திரங்களில் இம்மூன்று தெய்வங்களையும் ‘குணாவதாரங்கள்’ என்று குறிப்பிடுவதும் உண்டு. சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் பிரகிருதியின் முக்குணங்களில் பிரம்மா சத்வகுண அவதாரமாகவும், விஷ்ணு ரஜோ குண அவதாரமாகவும், சிவன் தமோகுண அவதாரமாகவும் உருவகப் படுத்துவர்).
ஆயினும் இவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர்; பிறப்பு இறப்பு அற்ற நித்திய தெய்வங்களாகவே கூறப்படுகின்றனர். புராணங்களில் இவர்களின் செயல்பாடுகளைப் பற்றி கூறப்படும் கதைகள், ஈசுவர லீலை என்பதாக அறியப்படும்.
விஷ்ணுவின் அவதாரங்கள்
நமது புராணங்களின் படி (விஷ்ணு புராணம், பாகவத புராணம் போன்றவற்றில்) பகவான் விஷ்ணுவே பற்பல அவதாரங்கள் எடுத்து உலகியரை இரட்சிக்க வருகிறார் என்று கூறுகின்றன. அவற்றில் பத்து அவதாரங்கள் சிறப்பாகக் குறிப்பிடப் படுகின்றன. அவை:
(1) மத்ஸ்யாவதாரம் (2) கூர்மாவதாரம் (3) வராகாவதாரம் (4) வாமனாவதாரம் (5) நரசிம்மாவதாரம் (6) பரசுராமாவதாரம் (7) ராமாவதாரம் (8) கிருஷ்ணாவதாரம் (9) பலராமாவதாரம் (10) கல்கியாவதாரம்.
பலராமருக்குப் பதில் புத்தரை அவதாரமாகச் சொல்வதும் உண்டு. கல்கி அவதாரம் இனிமேல்தான் கலியுகத்தில் நிகழவிருக்கிறது என்பது நம்பிக்கை.
அவதாரங்கள் பத்துக்குள் அடங்குவதல்ல
ஆயினும், இந்துமதப் புராணங்களிலேயே தலையாயதாகவும், பக்தி, ஞானம் இரண்டையும் சிறப்பாக விளக்கும் புராண நூலாகவும் கூறப்படும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் மேற்கண்ட 10 அவதாரங்களுக்கும் உபரியாய் மேலும் 17 அவதாரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனர். இவர்களது சரித்திரங்களும் பாகவதத்தில் தரப்பட்டுள்ளன. (ஆக 27 அவதாரங்கள்). அந்த அவதார புருஷர்கள்:
(11) சனகர் (12) சனந்தர் (13) சனாதனர் (14) சனத்குமாரர் (15) நாரதர் (16) நரர் (17) நாராயணர் (18) கபிலர் (19) தத்தாத்ரேயர் (20) யாக்ஞர் (21) ரிஷபர் (22) பிருது (23) மோஹினி (24) கருடன் (25) தன்வந்திரி (26) வியாசர் (27) புத்தர்.
அவதாரத்தில் தெய்வீக வெளிப்பாட்டின் அளவு – பூர்ணம், அம்சம், கலை
நமது சில சாத்திரங்களில் படைப்பிலுள்ளவற்றில் வெளிப்படும் இறை சக்தி பற்றிக் குறிப்பிடும்போது ‘கலை’ எனும் ஓர் அளவைக் கூறுவதுண்டு. அதன்படி, செடி கொடிகளுக்கு 2 கலை, மிருகங்களுக்கு 2 – 3 கலை, சாமானிய மனிதர்களுக்கு 5- 6 கலை, ரிஷிகளுக்கும் மகாத்மாக்களுக்கும் 7 – 8 கலை என்றெல்லாம் சொல்வார்கள். ராம அவதாரம் 12 கலை; கிருஷ்ணாவதாரம் 16 கலை என்பார்கள். 16 கலை அளவுள்ள கிருஷ்ணாவதாரம் பூர்ணாவதாரம் (முழுமையான அவதாரம்) எனக் குறிப்பிடப்படுகிறது.
இவை தவிர, இறைவனின் ஒரு அம்சம் மாத்திரம் வெளிப்படும் அவதாரங்கள் அம்சாவதாரங்கள் எனப்படுகின்றனர். அதன்படி, மச்ச, கூர்ம, வராக, பலராம அவதாரங்களை அம்சாவதாரங்கள் என்பார்கள். ராமாயணத்தில் வரும் லக்ஷ்மண, பரத சத்ருக்கினர்களும் விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்களே.
மேலும் சக்தி ஆவேச அவதாரங்கள் என்றும் ஒரு வகை சொல்லப்படுகிறது. இறைவனின் உக்கிரமான சக்தி இந்த அவதாரங்கள் மூலம் வெளிப்பட்டு பெருமளவில் அழிக்கும் சக்தி வேலை செய்யும். பரசுராமர் அவதாரம் சக்தியாவேச அவதாரமாகக் குறிப்பிடப் பெறுகிறது. நரசிம்மாவதாரமும் அவ்வாறே.
அவதாரங்கள் எண்ணிக்கைக்குட்பட்டவை அல்ல
அவதாரங்கள் எண்ணிலடங்கா என்றும் ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுவதாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவதுண்டு. அது மெய்யாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் இறையவதாரங்களைப் பற்றி (10 அவதாரங்கள், 27 அவதாரங்கள் என்றெல்லாம்) குறிப்பிடும் புராணங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டவை. எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அவதாரம் நிகழ்கிறது என்கிற கூற்றின்படி பார்த்தால், புராண காலத்துக்குப் பிற்பாடும் அவதாரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தாகவேண்டும் என்பது தெளிவாகிறது.
அவதார புருஷர்கள்
அப்படிப் பிற்காலத்தில் வந்த சில மகாத்மாக்கள் பக்தர்களால் அவதார புருஷர்களாகக் கொண்டாடப் பெறுகின்றனர். மெய்யான ஆன்மீக நாட்டம் உள்ள சாதகர்கள், நமது பண்டைய சாத்திர நூல்களுக்கும், புராணங்களுக்கும் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை இவர்களது போதனைகளுக்கும் வாழ்க்கை சரிதங்களுக்கும் அளிக்கிறார்கள்.
அவர்களில் சிலர்:
- ஸ்ரீ ஆதி சங்கரர் — இவரை சிவனின் அவதாரமாகக் கருதுகின்றனர்.
- ராமானுஜர்: தென்னாட்டு வைணவர்கள், இவரை லக்ஷ்மணன்/ பலராமன் /ஆதிசேஷனின் அவதாரமாகக் குறிப்பிடுவர்.
- சைதன்ய மகா பிரபு: வங்காளத்தில் இவர் ராதையின் அவதாரமாகக் கொண்டாடப் பெறுகிறார்.
- ஷிர்டி சாய்பாபா: மதங்களைக் கடந்து நிற்கும் இறைவனின் அவதாரமாக ஷிர்டி சாய் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார்.
- சத்ய சாய்பாபா: சிவ சக்தியின் அவதாரம் என்பார்கள் சாய் பக்தர்கள்.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர்: இவர் காளியின் அவதாரமாகவும், சைதன்யரின் மறு அவதாரமாகவும் அதே சமயம் மதங்களைக் கடந்து நின்ற ஞானியாகவும் போற்றப் படுகிறார்.
- பகவான் ரமண மகரிஷி: பூரண ஞானியான இவர் அவதாரம் எனும் கோட்பாட்டுக்குள் வராதவர் எனினும் அவரை முருகனாகக் கண்டு தரிசித்து முருகனின் அவதாரமாகக் கூறும் பக்தர்களும் உண்டு.
- (அம்மா) மாதா அமிர்தானந்தமயி தேவி: தேவி பராசக்தியின்/ லலிதாம்பிகையின்/ பவதாரிணியின் அவதாரமாகவே இவரது பக்தர்கள் இவரைப் போற்றுகின்றனர். இவரை ‘சிவ சிக்தி ஐக்கிய ரூபிணி’ என்றும் கூறுவர். ஸ்ரீ ராம கிருஷ்ணர்-சாரதா தேவியின் அவதாரத்தின் தொடர்ச்சி என்பார்கள் ராமகிருஷ்ணர் பாரம்பரியத்தில் வந்து அம்மாவிடம் சேர்ந்த பக்தர்கள்.
இவர்களில் பலரும் தம் தாய் மொழியிலேயே, சாமானியருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாகத் தமது உபதேசங்களை நல்குவர். ஆயினும் இவர்களது வாக்குகள் நமது பண்டைய சாத்திரங்களின் சாரமேயன்றி வேறில்லை என்பதை சான்றோர் அறிவர்.
இவர்களது எளிய மொழிகள் சிக்கலான சாத்திரங்களுக்கும் தெள்ளிய விளக்கங்களாக அமையும். அது மட்டுமல்லாது, கால தேச மாற்றங்களுக்கு ஏற்ப சனாதன மதத்தில் சில மாற்றங்களையும் புதிய பாதைகளையும் உருவாக்கித் தம் பக்தர்களை வழிநடத்துவர் இந்த அவதார புருஷர்கள்.
இவர்களில் சிலர் சுயம்புக்கள். அதாவது பிறவியிலிருந்தே ஞானம் பெற்றவர்கள். ஆயினும் அவதார புருஷர்கள் சிலர் தம் இளம் சாதனா காலத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வ ரூபத்தை பக்தி செய்தவர்களாகவும், ஒரு குறிப்பிட்ட ஆன்மீகப் பாதையைக் மேற்கொண்டவர்களாகவும் இருந்து தம் இறை நிலையை எத்தியதாகவும் நாம் அவர்கள் சரிதத்தில் காண்போம்.
ஆனால் நிறை நிலை பெற்ற அவர்கள் பெரும்பாலும் மதங்கள், உட்பிரிவுகள், சாதி, இன வட்டங்களின் எல்லைகளைக் கடந்து நின்று, அனைத்து வகை மக்களையும் ஈர்க்கும் ஓர் தெய்வீக அன்பின் வடிவங்களாகவே இருப்பார்கள். பல்வேறு ருசிகள், வாசனைகள், வேறுபாடுகளைச் சுமந்து கொண்டு தம்மிடம் வரும் அன்பர்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ற ஆன்மீக மார்க்கத்தைக் காட்டியருளுபவர்களாக விளங்குவார்கள். அறிவியலுக்கோ, பகுத்தறிவுக்கோ எட்டாத எத்தனையோ அற்புதங்களை இவர்கள் தம் பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டி தம்மைச் சரணடைந்தவர்களின் சிரத்தை, பக்தி, விசுவாசத்தைத் திடப்படுத்தி ஆன்மீக வாழ்வில் முன்னேற ஒளி நல்குவார்கள்.
பக்தர்கள்கள், ஆன்மீகத் தேடல் மிக்க சாதகர்களைத் தவிர, கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட சாமானிய மக்களும் கூட அவதார புருஷர்களால் பெரிதும் ஈர்க்கப் பட்டு வந்து அவர்களைச் சரணடைந்து, அவர்களின் அருளால் தம் உலகியல் வாழ்வில் வரும் கஷ்டங்கள், நோய்கள், பிரச்சனைகள், துக்கங்களுக்கு எளிதில் தீர்வுகாண்பார்கள். தாம் பெற்ற அத்தகைய அற்புதமான நிவாரணங்கள் மூலம் அவர்களது இறை நம்பிக்கை திடமாகி, அவர்களும் காலப் போக்கில் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் பக்குவம் பெறுவார்கள்.
கவனிக்க — ஞான மார்க்கத்தில் அவதாரம் எனும் பேச்சுக்கு இடமில்லை
நமது இந்து மதத்தின் அத்வைதக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஞான மார்க்கத்தில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு அல்ல. படைப்பில் உள்ள அனைத்துமே இறைவனே; மாயையினாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டு ஜீவன் தன்னை இறைவனிடமிருந்து வேறாய் எண்ணும் அஞ்ஞானத்தினால் பேதத்தைக் காண்கிறான். அந்த அஞ்ஞானம் போனால், தான் இறைவனேயன்றி வேறில்லை என்பதை ஜீவன் உணர்வான். ஆக, நாம் எல்லாருமே அடிப்படையில் இறை சொரூபமே. ஆகவே எவரோ ஓரிருவர்தான் அவதார புருஷர்களாய் வருகிறார்கள் என்கிற கோட்பாடு ஞான மார்க்கத்தில் இல்லை! நாம் எல்லாருமே அவதாரங்கள் தான்!
ஆனால் (நான் வேறு இறைவன் வேறு) எனும் துவைத உணர்வை ஏற்கும் பக்தி மார்க்கத்தில் அவதாரம் ஓர் முக்கியமான விஷயமாகிறது. பக்தர்கள் இறைவனுடன் கூடி வாழ்ந்து அவன் லீலைகளைக் கண்டு ஆனுபவித்து ஆனந்திக்கும் பேறைத் தரவே இறைவன் அவதரித்து வருகிறான்.
அவதார புருஷர்களை எல்லோராலும் அடையாளம் காணமுடியாது
இறைவனின் மாயா விளையாட்டில் இதுவும் ஓர் முக்கியமான நிதர்சனமே!
இன்று நாம் இறையவதாரங்களான ராமரையும் கிருஷ்ணரையும் தெய்வமாகக் கொண்டாடினாலும், அவர்கள் அவதரித்த காலத்தில் அவர்களை எதிர்த்தவர்களும், விமரிசித்தவர்களும் அவதூறு பேசியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்!
பொதுவாகவே மிகப் பரவலாய் பலருக்கும் இறைவனை ஏதோ தொலை தூரத்தில் ஆகாயத்தில் ஒரு வைகுண்டத்திலோ, சுவர்க்கத்திலோ, பர மண்டலத்திலோ, கைலாயத்திலோ இருப்பதாக ஒப்புக்கொள்வது தான் எளிதாக இருக்கிறது. அடுத்தபடியாக, இறைவனின் வெவ்வேறு ரூபங்களையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனித வடிவில் வாழ்ந்த அவதாரங்களான ராமரையும், கிருஷ்ணரையும் கோவில்களில் விக்கிரக வடிவில் கும்பிட்டு வணங்கிப் போவதே ஏற்புடையதாக இருக்கிறது. நிகழ் காலத்தில், நம்முள் ஒருவராக ரத்தமும் சதையும் கொண்ட மனித வடிவில் ஒருவரை இறைவனாகக் காண்பது ஒப்ப முடியாமல் இருக்கிறது!
வரையறைக்கு உட்பட்ட தன் சிற்றறிவை வைத்துக்கொண்டு, மகாத்மாக்களை எடை போட்டு அவர்களை இழித்துப் பேசுவதும், அவதூறுகளைக் கூறுவதும், ஏமாற்றுப் பேர்வழிகள், பாமர மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்த்து முட்டாளாக்குபவர்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவர்கள், போலிச்சாமியார்கள் என்றெல்லாம் சொல்லியும் எள்ளி நகையாடுபவர்கள் பலர் உண்டு.
சமீப காலத்தில் வாழ்ந்து செத்துப் போன மகாத்மாக்களைக் கூட ஒரு வேளை ஒப்புக்கொண்டாலும் கூட, உயிரோடு வாழும் அவதார புருஷர்களை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்!
ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதாரங்கள் பற்றிக் கூறும் கருத்துகள் மிக முக்கியமானவை
தம்மை ஓர் அவதாரமாக தம் அந்தரங்க பக்தர்களிடையே வெளிப்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறை அவதாரம் பற்றிப் பல பொன்னான கருத்துகளை மிக எளிமையாகத் தம் உபதேசங்களில் தந்திருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்:
- “அவதார புருஷர்களிடம் ஞானமாகிய சூரியனையும் பக்தியாகிய சந்திரனையும் ஒரே சமயத்தில் காண முடியும்.”
- “இறைவனின் லீலைகளில் (திருவிளையாடல்களில்) , ஈசுவர லீலை,தேவ லீலை, நர லீலை, ஜகத் லீலை என்று பல லீலைகள் உள்ளன. நர லீலையில் (மனித லீலையில்)தான் அவதாரம் நிகழ்கிறது.”
- “நித்தியம் யாருடையதோ, அவருடையதே லீலையும். பக்தர்களுக்காக லீலை. மனித வடிவில் பார்த்தால் தானே பக்தர்கள் அவரை நேசிக்க முடியும்?”
- “இறைவன் மனிதர்களிடம் அதிகம் பிரகாசிக்கிறான்; இறைவனைத் தேடவேண்டுமென்றால், அவதார புருஷர்களிடம் தேட வேண்டும் . பசுவின் சாரம் அதன் பால்; பால் வேண்டுமென்றால் பசுவின் மடியில் தான் தேடவேண்டும். அவதார புருஷர்கள் பசுவின் மடியைப் போல.”
- “அவதார புருஷர்களை அறிய விரும்பினால், இறைக் காட்சி பெற விரும்பினால் சாதனை அவசியம்”.
- “ஞான ஆராய்ச்சி வழியில், இறைவனில் லீலை கனவு போல உண்மையற்றதாகி விடுகிறது; ‘நான்; எனும் எண்ணம் கூடப் பறந்துவிடுகிறது; இந்த வழியில் அவதாரம் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் இது மிகக் கடுமையான பாதை. பக்தர்களுக்கு உதவாது; அதனால்தான் இறைவன் அவதரித்து பக்தியைக் குறித்து உபதேசிக்கிறார்; சரணடையச் சொல்கிறார்”.
- “இறைவன் அவதார புருஷர்களிடம் தான் அதிகமாக வெளிப்படுகிறான்; எனவே அவதார புருஷர்கள் உடம்புடன் இருக்கும்போதே பக்தர்கள் அவர்களை வழிபட்டு சேவை செய்ய வேண்டும்”.
- “இறைவன் மனிதனாக அவதரிக்குபோது அவரை [அந்த உருவில்] தியாயானிப்பது எளிதாகிறது. உடல் ஒரு திரை மட்டுமே. உள்ளே நாராயணன் உள்ளார். லாந்தர் விளக்கின் உள்ளே விளக்கு எரிவது போல்.”
- “அவதார புருஷர்களை நினைப்பது, இறைவனை நினைப்பதே”.
- “ராமன் இறையவதாரம் என்றால் சீதையைப் பிரிந்தபோது அழுதாரே என்று கேட்கிறார்கள். பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடம்பை எடுத்து வந்தாலே, உடலுக்குள்ள பசி, தாகம் போன்ற பலவும் அவதார புருஷர்களுக்கும் இருக்கின்றன; ஏன், நோய், மனக்கவலை போன்றவை கூட இருக்கின்றன. அத்தகைய ஒருவரை அவதாரம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேட்கிறார்கள். இதற்கு “பஞ்ச பூதங்கள் எனும் வலையில் அகப்பட்டுக் கொண்டு பிரம்மமும் கண்ணீர் வடிக்கிறது” என்பது தான் என் பதில்”.
-=0()0=-